ஆந்திர முதல்வரை அவதூறாக பேசிய ரவுடிக்கு காவல் நிலையத்தில் படுக்கையுடன் சொகுசு வசதி

*இன்ஸ்பெக்டர் உட்பட 8 போலீசார் சஸ்பெண்ட்

திருமலை : ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் அணில். பிரபல ரவுடியான இவர் மீது 19 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் முதல்வர் சந்திரபாபு, துணை முதல்வர் பவன்கல்யாண், அமைச்சர் லோகேஷ் ஆகியோர் குறித்து அவதூறு பேசியது உள்ளிட்ட மற்றும் துள்ளூர் காவல் நிலையத்தில் பதிவான இரண்டு வழக்குகள் தொடர்பாக நீதிமன்றக் காவலில் ராஜமகேந்திராவரம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவரை விசாரனைக்காக ராஜமுந்திரி சிறையில் இருந்து மங்களகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் போலீசார் மீண்டும் சிறைக்கு அழைத்து சென்றனர்.

அவ்வாறு செல்லும் வழியில் கன்னவரம் அருகே உள்ள சொகுசு ஓட்டலில் நின்று அணிலுடன் மதிய உணவு சாப்பிட்டனர். அப்போது, ஒரு குற்றவாளியை போலீசார் பணிவாகவும், மரியாதையாகவும் உள்ளே அழைத்துச் சென்றனர். அணிலுக்கு மதிய உணவாக பிரியாணி மற்றும் சிக்கன் 65 வாங்கி கொடுத்தனர். இதனை அங்கிருந்த தெலுங்கு தேச கட்சி ஆதரவாளர் வீடியோ எடுத்த நிலையில் அவரை போலீசார் மிரட்டி செல்போனில் எடுத்த வீடியோவை டெலிட் செய்ய வைத்தனர். இதுதொடர்பான சிசிடிவி கேமரா வீடியோ காட்சிகள் வைரலானதை அடுத்து, 7 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், பிரியாணி வீடியோக்கள் மறக்கப்படுவதற்குள், மற்றொரு வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மற்றொரு வழக்கில் அணிலை அருண்டல் பேட்டை காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக போலீசார் அழைத்து வந்தபோது, ​மீண்டும் அரச மரியாதையை வழங்கினர். அணிலுக்கு போலீஸ் ஸ்டேஷனில் எழுத்தாளர் இருக்கையும் வழங்கினர். மேலும் தூங்குவதற்கு பிரத்யேக படுக்கை போர்வைகள், தலையணைகள், தண்ணீர் பாட்டில்கள் தயார் செய்து கொடுத்துள்ளனர். காவல் நிலையத்தில் ரவுடிக்கு சொகுசு வசதிகள் செய்யப்பட்டதாக தற்போது வீடியோ வைரலாகி வருகிறது. மற்றொரு வீடியோ வைரலானதால் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக நேற்று முன்தினம் இன்ஸ்பெக்டர் சீனிவாச ராவ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து எஸ்.பி.சதீஸ் கூறுகையில், ‘அணிலுக்கு நீதிமன்ற உத்தரவுப்படி காவல் நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் காவல் நிலையத்தில் உள்ள சி.சி.டிவி கேமரா வீடியோ காட்சிகள் வெளியானது மிகவும் கண்டிக்கத்தக்கது. எனவே பணியில் அலட்சியமாக இருந்ததாக அருண்டல் பெட்டா இன்ஸ்பெக்டர் சீனிவாச ராவை குண்டூர் ரேஞ்ச் ஐ.ஜி திரிபாதி உடனடியாக ஆயுதப்படைக்கு அனுப்பி உத்தரவு பிறப்பித்தார். விசாரணை அறிக்கை வந்த பின்னர் இன்ஸ்பெக்டரையும் சஸ்பெண்ட் செய்தார்’ என்றார். ரவுடி அணிலால் மொத்தம் 8 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post ஆந்திர முதல்வரை அவதூறாக பேசிய ரவுடிக்கு காவல் நிலையத்தில் படுக்கையுடன் சொகுசு வசதி appeared first on Dinakaran.

Related Stories: