வால்பாறை : குரங்குகளின் இனப்பெருக்க காலம் துவங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் உணவு பண்டங்களை குரங்குகளுக்கு வழங்கக்கூடாது என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
அரிய வனவிலங்கான சிங்கவால் குரங்குகள் வால்பாறை பகுதியில் அதிக அளவில் காணப்படுகின்றன. உலக அளவில் மிகக்குறைந்த அளவே உள்ள சிங்கவால் குரங்கு மேற்குத் தொடர்ச்சி மலை பிரதேங்களில் சில இடங்களில் அதிகம் காணப்படுவதால் பேணி காக்கப்பட்டு வருகிறது. சிங்கமுகத் தோற்றத்துடன், வாலும் சிங்கம் போல் இருப்பதால் இந்த குரங்கு சிங்கவால் குரங்கு என்று அழைக்கப்படுகிறது.
இக்குரங்குகளின் இனப்பெருக்க காலம் நவம்பர் முதல் பிப்ரவரி வரை என்பதால் இக்குரங்குகள் படு சுட்டியாக காணப்படுகிறது. மிகுந்த உயரத்தில் இருந்து குதிக்கும் தன்மை கொண்டுள்ள இக்குரங்குகளின் கர்ப்ப காலம் 170 நாட்கள் ஆகும். ஒரு கூட்டத்தில் 20-80 குரங்கு வரை காணப்படும். இதில் 4 அல்லது 5 ஆண் குரங்குகள் இருக்கும். பல குரங்குகள் குட்டிகளுடன் உயரமான மரங்களுக்கிடையே தாவிச்செல்வது கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது.
வால்பாறை, மானாம்பள்ளி, டாப்சிலிப் வனச்சரகத்திலும் சிங்கவால் குரங்குகள் உள்ளது. வால்பாறை அடுத்த புதுத்தோட்டம் பகுதியில் சிங்கவால் குரங்கு கூட்டங்கள் உள்ளது. வால்பாறை பொள்ளாச்சி சாலையில் புதுத்தோட்டம் எஸ்டேட் உள்ளதால் அதிகளவிலான வாகனங்கள் செல்வது வழக்கமாகும். இந்நிலையில், சுற்றுலா பயணிகள் வால்பாறைக்கு வரும் பொழுது வாகனங்களை நிறுத்தி திண்பண்டங்கள் கொடுத்து பழக்கியுள்ளனர்.
எனவே, மற்ற வாகனங்கள் வரும் பொழுது தனக்கு ஏதாவது கொடுப்பார்கள் என்ற எண்ணத்தில் குரங்குகள் வாகனத்தில் தாவுகின்றன. இதனால், பல குரங்குகள் வாகனத்தில் அடிபட்டு உயிரிழக்கின்றன. இதை தடுக்க வனத்துறை சார்பில் குரங்குகள் சாலை ஓரம் வருவதை கண்காணித்து வனப்பகுதிக்கு அனுப்ப பணியாளர்கள் நியமிக்கப்பட்ட உள்ளனர். குரங்குகளின் இனபெருக்க காலம் துவங்கியுள்ளதால் கண்டிப்பாக சாலை ஓரம் உள்ள குரங்குகளுக்கு உணவு பண்டங்களை வழங்கக்கூடாது என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். இந்நிலையில், வால்பாறை டவுனில் குரங்குகள் தொடர்ந்து அட்டகாசம் செய்வதால் எரிச்சல் அடைந்துள்ள வியாபாரிகள் வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post வால்பாறை வனப்பகுதியில் சிங்கவால் குரங்குகள் இனப்பெருக்க காலம்; உணவு பண்டங்களை வழங்கக்கூடாது appeared first on Dinakaran.