தீபாவளி விடுமுறை முடிந்தும் வேலைக்கு வராத பணியாளர்களால் ஊராட்சி பகுதிகளில் குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகள்

பெ.நா.பாளையம் : கோவை புறநகர் பகுதிகளில் தீபாவளி விடுமுறை முடிந்தும் வேலைக்கு வராத பணியாளர்களால் குப்பை கழிவுகள் குவிந்து கிடக்கின்றன.பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் 24 வீரபாண்டி, சின்னதடாகம், நஞ்சுண்டாபுரம், பன்னீர்மடை, குருடம்பாளையம், அசோகபுரம், பிளீச்சி, நாயக்கன்பாளையம் ஆகிய 9 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்நிலையில், மேட்டுப்பாளையம் சாலையையொட்டியுள்ள ஊராட்சிகளின் சில பகுதிகளில் சாலை ஓரம், வாய்க்கால், குட்டை போன்ற பகுதிகளை ஒட்டி கொட்டப்பட்ட குப்பைகள் மலை போல குவிந்து கிடக்கிறது. சில ஊராட்சி பகுதியில் வீடுகளுக்கே வந்து குப்பை எடுக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

ஆனால் தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்தும் பணியாளர்கள் வேலைக்கு வராததால் வீடுகளில் சேரும் குப்பைகளை சிலர் பொது இடங்கள் மற்றும் சாலை ஓரங்களில் போட்டு செல்கின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுகிறது. இதேபோல துடியலூர்-இடிகரை சாலை செங்காளிபாளையத்தில் உள்ள சின்ன வேடம்பட்டி ஏரிக்கு செல்லும் வாய்க்காலின் கரையில் குப்பை கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. இந்நிலையில் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post தீபாவளி விடுமுறை முடிந்தும் வேலைக்கு வராத பணியாளர்களால் ஊராட்சி பகுதிகளில் குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகள் appeared first on Dinakaran.

Related Stories: