நெல் அறுவடை பணி தீவிரம் ஆனைமலை விற்பனை கூடத்தில் நெல் கொள்முதல்

*விவசாயிகள் மகிழ்ச்சி

ஆனைமலை : பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில் நெல் அறுவடை பணி தீவிரமடைந்துள்ளதால் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினமும் டன் கணக்கில் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தென்னைக்கு அடுத்தப்படியாக நெல் சாகுபடி உள்ளது. இதில், பழைய ஆயக்கட்டு பாசனத்திற்குட்பட்ட பகுதியில், ஒவ்வொரு ஆண்டும் முதல் போகம் மற்றும் 2ம் போகம் என சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆனைமலை பகுதியில் அறுவடை மேற்கொள்ளப்படும் நெல்லை விவசாயிகள் வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்து வந்தனர். ஆனால் பல விவசாயிகள், வெளி மார்க்கெட்டில் இடைத்தரகர்களால் அவதிப்பட்டதுடன் கூடுதல் விலை நிர்ணயிக்க முடியாத நிலை ஏற்பட்டதாக வேதனையடைந்தனர். இதையடுத்து, நெல் அறுவடை காலங்களில் ஆனைமலையில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனையடுத்து, ஆனைமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தின் ஒரு பகுதியில் நெல் அறுவடை காலங்களில் மட்டும் தற்காலிகமான நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது. ஆனைமலை சுற்று வட்டார பகுதியில் இந்த ஆண்டில் ஜூன் மாதம் சாகுபடி செய்யப்பட்ட முதல் போக நெல் நல்ல விளைச்சலடைந்தது. கடந்த அக்டோபர் மாதம் துவக்கத்திலிருந்து அறுவடை பணி மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து, நெல்லுக்கான உரிய விலை கிடைக்க ஆனைமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நெல் கொள் முதல் நிலையம் திறக்கப்பட்டது. விவசாயிகள் தலா 40 கிலோ எடையில் நெல் மூட்டைகளை கொண்டு வருவதை தொடர்ந்தனர். இதில் சன்ன ரக நெல் ஒரு குவிண்டாலுக்கு ரூ.2450க்கும், மோட்டா ரக நெல் ஒரு குவிண்டாலுக்கு ரூ.2405க்கும் கொள் முதல் செய்யப்படுகிறது.

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உள்ள கொள்முதல் நிலையத்தில், விவசாயிகளிடம் இருந்து வாங்கப்படும் நெல் தலா 40 கிலோ எடையில் மூட்டையாக கட்டி பொள்ளாச்சி ஜோதி நகரில் உள்ள நுகர் பொருள் வாணிப கழக குடோனுக்கு லாரி மூலம் அனுப்பும் பணி தொடர்ந்து நடக்கிறது. இதற்கிடையே கடந்த 2 வாரமாக ஆனைமலை மட்டுமின்றி ரமணமுதலிபுதூர், கோட்டூர், காளியாபுரம், ஒடையக்குளம், சேத்துமடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நெல் அறுவடை பணி தீவிரத்தால் விவசாயிகள் பலர் தினமும் டன் கணக்கில் நெல் கொண்டு வருவதை தொடர்ந்துள்ளனர்.

கடந்த ஒரு வாரமாக மழை குறைவால் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கத்தால் விவசாயிகள் கொண்டு வரும் நெல் திறந்த வெளியில் உலர வைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. இன்னும் சில வாரத்துக்கு, விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். டிசம்பர் மாதம் 2ம் போக சாகுபடி மேற்கொள்ள ஏதுவாக, விரைந்து நெல் அறுவடையை மேற்கொண்டு, 2ம் போக நெல் சாகுபடிக்கு தயாராவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

The post நெல் அறுவடை பணி தீவிரம் ஆனைமலை விற்பனை கூடத்தில் நெல் கொள்முதல் appeared first on Dinakaran.

Related Stories: