மோசமான வானிலையால் தரையிறக்கம் பணி முடிந்தது எனக்கூறி பாதியில் சென்ற விமானி: பெங்களூரு பயணிகள் சென்னையில் தவிப்பு

சென்னை: மோசமான வானிலையால் சென்னையில் விமானம் தரையிறக்கம் செய்யப்பட்டதையடுத்து பணி முடிந்ததென்று கூறி விமானி பாதியில் சென்றதால் பெங்களூரு பயணிகள் தவிப்புக்கு ஆளாகினர். பெங்களூருவில் நேற்று காலை மோசமான வானிலை நிலவியதால் டெல்லி, மும்பை, மற்றும் அபுதாபி ஆகிய இடங்களில் இருந்து வந்த 4 விமானங்கள் பெங்களூருவில் தரையிறங்க முடியாமல் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கின. ஆனால் பயணிகள் வெளியேறாமல் விமானத்திலேயே அமர்ந்திருந்தனர்.

காலை 9 மணிக்கு மேல் வானிலை சீரானது என்ற தகவல் வந்ததும், டெல்லி ஸ்பைஸ் ஜெட் விமானம், மும்பை ஆகாஷா விமானம், மற்றொரு மும்பை ஏர் இந்தியா விமானம் ஆகிய 3 விமானங்கள் பெங்களூருவுக்கு திரும்பிச் சென்றுவிட்டன. ஆனால் அபுதாபியில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் விமானி, தனக்கு பணி நேரம் முடிந்து விட்டதாகக்கூறி ஓய்வுக்கு சென்றுவிட்டார். இதையடுத்து பெங்களூருவில் வானிலை சீரடைந்த பின்பும் இந்த அபுதாபி விமானம் பெங்களூருவுக்கு திரும்பிச் செல்ல முடியவில்லை.

இதனால் அந்த விமானத்தில் இருந்த 168 பயணிகள், பல மணி நேரமாக தவித்தனர். அதன்பின்பு பயணிகள் போராட்டம் நடத்தியதையடுத்து சென்னை விமான நிலைய அதிகாரிகள், உயர் அதிகாரிகளிடம் சிறப்பு அனுமதி பெற்று, 168 பயணிகளையும் விமானத்திலிருந்து கீழே இறக்கி, சுங்கச் சோதனை, குடியுரிமைச் சோதனை போன்றவற்றை நடத்தி முடித்தனர்.

அதன் பின்பு அவர்கள் சென்னை நகரில் உள்ள ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்தப் பயணிகள் பெங்களூரு செல்லும் வேறு விமானங்களில், அல்லது விமானி ஓய்வு முடித்துவிட்டு வந்த பின்பு பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post மோசமான வானிலையால் தரையிறக்கம் பணி முடிந்தது எனக்கூறி பாதியில் சென்ற விமானி: பெங்களூரு பயணிகள் சென்னையில் தவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: