கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வண்டலூர் அடுத்த நல்லம்பாக்கம் ஊராட்சியில், நல்லம்பாக்கம், கண்டிகை, மல்ரோசபுரம், சின்ன காலனி, அம்பேத்கர் நகர், காந்தி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளாக குறைந்த மின்னழுத்த பிரச்னையால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும், 20 மின்கம்பங்கள் முறிந்து விழும் அபாயம் நிலையில் உள்ளன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும் கண்டுகொள்ளவில்லை. எனவே இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் தலையிட்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊராட்சி நிர்வாகம், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். இதுகுறித்து நல்லம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமணன், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ஊராட்சிக்கு உட்பட்ட 6வது வார்டு, கலைஞர் தெரு, இதேபோல் 7வது வார்டு மற்றும் 9வது வார்டு, சின்ன காலனி ஆகிய பகுதிகளில் குறைந்த மின்னழுத்த பிரச்சனை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
மேலும், 20 மின்கம்பங்கள் சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து, முறிந்து விழும் அபாயநிலையில் உள்ளன. சில இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து நிலையிலும், மின்கம்பிகள் தொங்கிய நிலையிலும் உள்ளன. மேலும், ஊராட்சி நிர்வாகம் சார்பில் தெருவிளக்கு வசதிகளும் செய்து கொடுக்க முடியவில்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்து 3 ஆண்டுகள் ஆகிறது.
ஆனால், கண்டு கொள்வதே கிடையாது. இதனால், பச்சிளம் குழந்தைகள், மாணவர்கள், கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள் என அனைத்து தரப்பினரும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். தற்போது, வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளநிலையில் கன மழை பெய்தாலோ அல்லது சூறாவளி காற்று வீசினாலோ பேராபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே, இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தலையிட்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
The post நல்லம்பாக்கம் ஊராட்சியில் எலும்பு கூடான மின் கம்பங்கள்: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.