புதுக்கோட்டை,நவ.13: வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் வேளாண் விளை பொருட்களை தரம் பிரித்தல் மற்றும் பகுப்பாய்வு செய்தல் தொடர்பான ஒருநாள் பயிற்சி புதுக்கோட்டை மாவட்ட வேளாண் வணிகத்துறையின் மின்னணு கற்றல் மையத்தில் நடைபெற்றது. அட்மா விரிவாக்க சீரமைப்புத் திட்ட நிதி உதவியுடன் நடைபெற்ற இப்பயிற்சிக்கு ஜெயபாலன் தலைமை வகித்தார். புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் ஜெகதீஸ்வரி தொடங்கி வைத்து வேளாண் வணிகத் துறையின் திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தார்.
வேளாண்மை அலுவலர் சுபாஷினி சிறுதானிய இயக்கத்தில் செயல்படுத்தப்படும் திட்டம் குறித்தும், கந்தகிரிவாசன், வேளாண்மை அலுவலர், உழவர் உற்பத்தியாளர் குழு செயல்பாடுகள் குறித்தும் எடுத்துரைத்தார். புதுக்கோட்டை மாவட்ட விற்பனைக்குழு செயலாளர் மல்லிகா, விவசாயிகள் தமது விளை பொருட்களை விற்பனை செய்தால் சிறந்த விலை கிடைக்கும் என்றும் தரம் பிரிப்பு மற்றும் பகுப்பாய்வின் அவசியம் பற்றி விளக்கினார். மத்திய அரசின் விற்பனை மற்றும் ஆய்வு செய்தல் துறையின் முதன்மை விற்பனை அலுவலர் ஹரீஷ் அக்மார்க் சட்டம் 1937 பற்றிய விரிவான தகவல்களை பகிர்ந்ததோடு வேளாண்மை விற்பனை உட்கட்டமைப்பு) பற்றிய பயன்களை விளக்கினார்.
மேலும் விளைபொருட்களுக்கு அக்மார்க் தரச்சான்று பெறுவதின் முக்கியத்துவத்தை மதுரை மாநில அக்மார்க் ஆய்வக வேளாண்மை அலுவலர் மலர்விழி எடுத்துரைத்து, அனைத்து விவசாயிகளுடனும் கலந்துரையாடினார். உழவர் உற்பத்தியாளர் குழுக்களில் இருந்து பங்கு பெற்ற விவசாயிகளும் மற்றும் மின்னணு வேளாண் சந்தை வாயிலாக பயனடைந்த விவசாயிகளும் தங்கள் வெற்றி அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அக்மார்க் தரச்சான்று பெற்ற பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் உணவு வழங்கப்பட்டன.
The post புதுக்கோட்டையில் வேளாண் விளை பொருட்களை தரம் பிரித்தல் குறித்த பயிற்சி முகாம் appeared first on Dinakaran.