சிலை கடத்தலை தடுக்கும் வகையில் கோயில் சிலைகளில் கியூஆர் கோடு பொருத்தும் பணி தீவிரம்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: சென்னை புரசைவாக்கத்தில் கங்காதரேசுவரர் கோயிலுக்கு ரூ.4.82 கோடி செலவில் 36 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, வரும் 28ம் தேதி குடமுழுக்கு பெருவிழா நடைபெறவுள்ளது. இதற்கான பந்தக்கால் நடும் நிகழ்வில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த புரசைவாக்கம், கங்காதரேசுவரர் கோயிலுக்கு ரூ.81 லட்சம் செலவில் புதிய மரத்தேர் உருவாக்கப்பட்டுள்ளது.

சிலைகள் காணாமல் போனால் உடனடியாக கண்டறியும் வகையில் அவற்றிற்கு கியூஆர் கோடு பொருத்தப்பட்டு வருகிறது. அதன்மூலம் சிலைத்தடுப்பு பிரிவு காவல்துறை தலைவர் அலுவலகத்திலிருந்து அந்த சிலை எங்குள்ளது என்பதை கண்டறிந்து மீட்டிடும் வகையில் புதிய தொழில்நுட்ப வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இன்னும் 6 மாத காலத்தில் அப்பணிகள் நிறைவுறும். அதேபோல மீட்கப்பட்ட சிலைகள் எந்த திருக்கோயிலுக்கு சொந்தமானது என்பதற்கான ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு அவை நிரூபணம் ஆகும் நிலையில் அச்சிலைகளை அந்தந்த கோயில்களில் வைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தவிர, கோயில் தொடர்பாக புகார்கள் வரப்பெற்றாலும் விசாரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக வரப்பெற்ற புகாரின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் கனகசபை மீதேறி தரிசனம் செய்வதை தடுக்க கூடாது என உத்தவிட்டது.

இந்த அரசை பொறுத்தளவில் நீதிமன்றம் என்ன சொல்கின்றதோ, அதை செயல்பட தயாராக இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் மண்டல இணை ஆணையர் ரேணுகாதேவி, கோயில் அறங்காவலர் குழு தலைவர் வெற்றிக்குமார், உதவி ஆணையர் சிவகுமார், மாநகராட்சி உறுப்பினர்கள் ராஜேஸ்வரி ஸ்ரீதர், பரிதி இளம்சுருதி, கோயில் அறங்காவலர்கள் மற்றும் செயல் அலுவலர் ராமராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post சிலை கடத்தலை தடுக்கும் வகையில் கோயில் சிலைகளில் கியூஆர் கோடு பொருத்தும் பணி தீவிரம்: அமைச்சர் சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: