பிராமணர்களுக்கு எதிரான இனப்படுகொலை பாஜவில்தான் நடக்கிறது அண்ணாமலை போன்று அரசியல் செய்தால் 40க்கு பூஜ்ஜியம் தான் எடுக்க முடியும்: வெளுத்து வாங்கிய நடிகர் எஸ்.வி.சேகர்

சென்னை: முன்னாள் எம்எல்ஏவும், நடிகருமான எஸ்.வி.சேகர் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் மிகக் கடுமையாக இருக்கும். திமுக அரசு பல நல்ல விஷயங்கள் செய்து கொண்டு இருக்கிறது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எளிதில் பதவிக்கு வந்துவிடவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக அரசியல் களத்தில் இருக்கிறார். பல எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்களை வெற்றி பெற வைத்திருக்கிறார். எனவே கட்சிக்கு அவர் தேவைப்படுகிறார்.

தமிழ்நாட்டில் தேர்தல் என்றால் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் மட்டும்தான், மற்றவர்கள் யாரும் இல்லை. மு.க.ஸ்டாலின் இப்போது முதல்வராக இருக்கிறார் என்றால் 3 முறை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். இப்போதும் பல ஊர்களுக்கு போகிறார். கட்சியை வளர்க்கிறார். அதே போல் மன உறுதி இருந்தால் அரசியல் பண்ணலாம். நான் பாஜவில் இல்லை. எந்தக் கட்சி பிராமணர்களுக்கு சீட் கொடுக்கிறார்களோ, அது திமுகவாக இருந்தாலும் நான் திமுகவிற்காக பிரச்சாரம் செய்வேன். இனி தமிழ்நாட்டின் பிரசாந்த் கிஷோராக இருப்பேன்.

திமுகவை திட்டிக் கொண்டே இருந்தால் மட்டும் பாஜவால் வளர முடியாது. அண்ணாமலை போன்று அரசியல் செய்தால் 40க்கு பூஜ்ஜியம் தான் எடுக்க முடியும். அண்ணாமலை பாஜக மாநில தலைவராவதற்கு மட்டுமல்ல, அரசியலுக்கே தகுதியில்லாதவர். ஒழுங்காக படிக்காத காரணத்தால் தான் அண்ணாமலை அரசியலுக்கு வந்தார். தமிழக பாஜவில்தான் பிராமணர்களுக்கு இனப்படுகொலை நடக்கிறது. தெலுங்கு பேசுபவர்களை பற்றி நடிகை கஸ்தூரி பேசியது மிகவும் கண்டிக்கத் தக்க செயல்.

பொதுவெளியில் பேசும்போது, என்ன பேச வேண்டும் என்பதை விட என்ன பேசக்கூடாது என தெரிந்து கொண்டு பேச வேண்டும். மைக்கை பார்த்ததும், வியாதிக்காரன் வாந்தி எடுத்த மாதிரி எல்லாவற்றையும் பேசினால் தப்பு வரத்தான் செய்யும். பிராமணர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கஸ்தூரி சொல்வது தவறு. தமிழகத்தில் பிராமணர்களுக்கு எதிராக அதுபோன்ற எந்த தாக்குதலும் நடைபெறவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

* விஜய் வந்துவிட்டதால் எதுவும் மாறப்போவதில்லை
இப்போது நடிகர் விஜய் வந்துவிட்டதால் எதுவும் மாறப்போவதில்லை. அவருக்கு மிகப் பெரிய கூட்டம் கூடியிருக்கிறது. அந்த கூட்டத்தை ஓட்டாக மாற்ற வேண்டியது விஜய்யின் பொறுப்பு. ஆனால் அந்த கூட்டமெல்லாம் ஓட்டாக மாறாது. காமராஜர் மெரினாவில் கூட்டம் நடத்தியபோது, ஒரு லட்சம் பேர் கூடினர். ஆனால் அந்த தேர்தலில்தான் காமராஜர் ஒரு கல்லூரி மாணவரிடம் தோல்வியடைந்தார். கூட்டத்திற்கும் வாக்கிற்கும் சம்பந்தமில்லை.

தாக்கம் என்பது வேறு. ஆட்சி பிடிப்பது என்பது வேறு. விஜய்க்கு இன்னும் வயது இருக்கிறது. இனி வரும் நாட்களில் விஜய் எப்படி செயல்படுகிறார் என்பதை பொறுத்துதான் அவரது அரசியல் எதிர்காலம் அமையும். விஜய் குறித்து யார் அதிகம் பேசுகிறார்களோ அவர்கள் அவரைப் பார்த்து பயப்படுகிறார்கள் என அர்த்தம். நாம் தமிழர் கட்சி தொண்டர்கள்தான் தவெகவிற்கு தாவ அதிக வாய்ப்புகள் உள்ளது என்று எஸ்.வி. சேகர் கூறினார்.

The post பிராமணர்களுக்கு எதிரான இனப்படுகொலை பாஜவில்தான் நடக்கிறது அண்ணாமலை போன்று அரசியல் செய்தால் 40க்கு பூஜ்ஜியம் தான் எடுக்க முடியும்: வெளுத்து வாங்கிய நடிகர் எஸ்.வி.சேகர் appeared first on Dinakaran.

Related Stories: