சென்னை: கோரிக்கைகளை வலியுறுத்தி போலீசாரின் தடையை மீறி பேரணி செல்ல முயன்ற புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி உள்பட 500 பேரை போலீசார் கைது செய்தனர். பேரணி செல்ல முயன்றவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அருந்ததியர் உள் இடஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்யவும், மாஞ்சோலை மக்களின் வாழ்வாதாரத்தை மாஞ்சோலையிலேயே நிலைநாட்ட வேண்டும் என்பது உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பில் நேற்று பேரணி நடத்த சென்னை பெருநகர காவல்துறையில் அனுமதி கோரினர். ஆனால் பேரணிக்கு காவல்துறை நேற்று முன்தினம் இரவு திடீரென அனுமதி ரத்து செய்ததாக கூறப்படுகிறது. அதேநேரம் திட்டமிட்டபடி புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் நேற்று காலை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானம் அருகே ஒன்று கூடினர்.
இதனால் அந்த பகுதியில் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். ஆனால் காவல்துறை அனுமதி மறுத்த தகவல் அறிந்து புதிய தமிழகம் கட்சியினர் ராஜரத்தினம் மைதானம் அருகே சாரைசாரையாக குவிந்தனர். ஒரு கட்டத்தில் கிருஷ்ணசாமி தலைமையில் பேரணியாக பதாகைகளுடன் ஆளுநர் மாளிகை நோக்கி செல்ல முயன்றனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பேரணி செல்ல முயன்ற புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி உள்பட அனைவரையும் தடுப்புகள் அமைத்து தடுத்தனர். இதனால் பேரணி செல்ல முயன்றவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது கிருஷ்ணசாமி, பேரணிக்கு அனுமதி வழங்கிவிட்டு திடீரென அனுமதி மறுத்தது ஏன் என காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பிறகு தனது தொண்டர்களுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார். பின்னர் நிலைமை கைமீறி செல்வதை அறிந்த காவல்துறையினர் கிருஷ்ணசாமி உள்பட 500க்கும் மேற்பட்டவர்களை குண்டுக்கட்டாக கைது ெசய்து பேருந்தில் ஏற்றினர். இதனால் போலீசாருக்கும் பேரணி செல்ல முயன்றவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிறிது நேரம் ராஜரத்தினம் மைதானம் அருகே பரபரப்பும் பதற்றமும் நிலவியது. அதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட அனைவரையும் போலீசார் நேற்று மாலை விடுவித்தனர்.
The post 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தடையை மீறி பேரணி செல்ல முயன்ற கிருஷ்ணசாமி உள்பட 500 பேர் கைது: சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு appeared first on Dinakaran.