×

மடத்துக்கு இடம் கொடுத்தவருக்கு வாழ்க்கை கொடுத்தார் 47 வயது பெண்ணை திருமணம் செய்த ஆதீனம்: அறநிலையத்துறை விசாரணை

திருவிடைமருதூர்: சூரியனார் கோயில் ஆதீனத்தின் 28வது மடாதிபதி மகாலிங்க சுவாமி, பெண் பக்தையை திருமணம் செய்துகொண்டார். இதுகுறித்து அறநிலையத்துறையினர் நேரில் விசாரணை நடத்தினர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சூரியனார் கோயில் ஆதீனத்தின் 28வது மடாதிபதியாக மகாலிங்க சுவாமி (54) உள்ளார். இவரிடம் ஏராளமான பக்தர்கள் ஆசி பெற்று செல்வது வழக்கம். இதில் ஹேமாஸ்ரீ என்ற 47வயதான பக்தை அடிக்கடி ஆதீனத்தை சந்தித்து ஆசி வாங்கியுள்ளார்.

இந்நிலையில், மகாலிங்க சுவாமி- ஹேமாஸ்ரீ ஆகியோர் பெங்களூரு சென்று அங்கு கடந்த மாதம் 10ம் தேதி பதிவு திருமணம் செய்து கொண்டதாக பதிவு திருமணம் செய்த கொண்ட சான்றிதழ் நேற்று முன்தினம் சமூக வலைதளங்களில் வைரலானது. ஆதீனம் பதிவு திருமணம் செய்து கொண்டதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து அவர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், மடாதிபதி மகாலிங்க சுவாமி சமூக வலைதள பதிவில் கூறியதாவது:

கர்நாடகாவில் சிவாக்கிர யோகிகள் மடம் தொடங்குவதற்காக கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ஹேமாஸ்ரீ இடம் வழங்கினார். அந்த மடத்தை நிர்வாகம் செய்ய டிரஸ்டியாக நியமனம் செய்ய ஏதுவாக அவரை வெளிப்படையாக அறிவித்துதான் நான் பதிவு திருமணம் செய்து கொண்டேன். ஆதீன மடாதிபதியாக திருமணம் ஆனவர்களும் இருந்துள்ளனர். நான் யாரிடமும் எதையும் மறைக்க விரும்பவில்லை. நான் திருமணம் செய்துள்ள ஹேமா ஸ்ரீ மடத்துக்கு பக்தையாக வந்தவர். இனியும் அவர் பக்தையாக தொடர்வார்.

சூரியனார் கோயில் ஆதீனம் சிவாச்சாரியார் மடம் என்பதால் ஏற்கனவே திருமணமானவர்கள் இங்கே ஆதீனமாக இருந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார். பொதுவாக மடாதிபதியாக இருப்பவர்கள் இல்லற வாழ்க்கையில் இருந்து விலகியே இருப்பார்கள். ஒன்று திருமணமாகி மனைவியை பிரிந்து துறவியான பிறகு மடாதிபதியாக இருப்பார்கள். இல்லாவிட்டால் திருமணமே முடிக்காமல் துறவு பூண்டு மடாதிபதியாக இருப்பார்கள்.

ஆனால், தற்போது சூரியனார் கோயில் ஆதீன மடாதிபதி, மடாதிபதியாக இருந்து கொண்டே பெண் பக்தையை திருமணம் செய்துள்ளார். அதோடு திருமணம் செய்தும் மடாதிபதியாக பலபேர் செயல்பட்டுள்ளதாக விளக்கம் அளித்து இருப்பது அவரது பக்தர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இந்நிலையில், இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் உத்தரவின் பேரில், கதிராமங்கலம் சரக ஆய்வாளர் அருணா, செயல் அலுவலர் சரவணகுமார் ஆகியோர் நேற்று மதியம் சூரியனார் கோயில் ஆதீனத்திற்கு சென்று, அவரிடம் பதிவு திருமணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். அவர்களிடம் திருமணம் செய்து கொண்டது உண்மை என மகாலிங்க சுவாமி கூறினார்.
இது குறித்து உங்களை ஆதீனமாக நியமித்த திருவாடுதுறை ஆதீனத்திற்கு தெரியுமா? என்ற கேள்வி எழுப்பியதற்கு அவர் பதில் சொல்லவில்லை. ஆனால் இது தனி நிர்வாகம் என்றார். பின்னர் அவரது பதிலை எழுத்துப்பூர்வமாக பெற்று சென்றனர்.

* ‘ரூ.1500 கோடி சொத்தை அபகரிக்க திருமணம்’
சூரியனார் கோயில் ஆதீனம் ஸ்ரீகாரியகாராக நியமிக்கப்பட்டுள்ள சுவாமிநாத சுவாமிகள் நேற்று மாலை நிருபர்களிடம் கூறுகையில், ‘ஆதீனத்தின் மாண்பு காக்கப்பட வேண்டும். கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ஹேமாஸ்ரீ என்ற பெண் ஆதீனம் 28வது குருமகா சந்நிதானம் மகாலிங்க சுவாமிகளை திருமணம் செய்து கொண்டதாக கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது.

அந்த பெண் குறித்து விசாரித்த வகையில், பல குற்ற பின்னணி கொண்டவர். அவருக்கு அதிகளவில் சொத்துகள் இருப்பதாக கூறி பலரை ஏமாற்றி இருப்பதும் தெரிய வந்தது. சுமார் ரூ.1500 கோடி சூரியனார் கோயில் ஆதீன மடத்தின் சொத்துக்களை அபகரிக்க அவர் திட்டம் தீட்டி இந்த பதிவு திருமணத்தை செய்துள்ளார் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. துறவறத்தில் உள்ளவர்கள் இல்லறம் நோக்கி செல்வது ஏற்புடையதல்ல. இது ஆதீன சம்பிரதாயத்திற்கு எதிரானது’ என்றார்.

* தனி அதிகாரம் இருக்காம்…. சொல்கிறார் ஆதீனம்
ஆதீனம் மகாலிங்க சுவாமிகள் நிருபர்களிடம் கூறுகையில், ‘மடத்தில் சம்பிரதாயபடி திருமணம் ஆனவர்கள் குரு மகா சந்நிதானங்களாக இருப்பதற்கு எந்த தடையும் இல்லை. இது குறித்து அறநிலையத்துறைக்கும் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளோம். ஆதீன குருமகா சந்நிதானங்களுக்கு என்று தனி அதிகாரம் உள்ளது. மடத்தில் சொத்துகளை காக்க பல சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறேன். மடத்தின் சொத்துக்களை முறையாக பாதுகாத்து நிர்வாகம் செய்ய வேண்டும் என்ற கடமையை வளர்த்து ஒத்துழைப்போடு செய்து வருகிறேன்.

திருவாவடுதுறை ஆதீனத்திலிருந்து நீக்கப்பட்ட சுவாமிநாத சுவாமிகளை நான் மடத்தில் ஸ்ரீகாரியகாராக நியமித்தேன். அவர் இங்கு தங்குவதில்லை. அவர் தமது வீட்டிற்கு சென்ற பிறகு தனது வேடத்தை மாற்றிக்கொள்வார். அவர் ஏற்கனவே மணல் கொள்ளையில் ஈடுபட்டவர் என்ற குற்றச்சாட்டு உண்டு. இருப்பினும் அவர் ஆன்மிக பணிகளை செய்ய விரும்பியதால் அது குறித்து கவனத்தில் கொள்ளாமல் பணிகளை செய்ய அனுமதித்தேன். இன்று அவரை யாரோ தவறாக இயக்குகின்றனர். குருவின் கட்டளை ஏற்று அவர் நடப்பதில்லை’ என்றார்.

The post மடத்துக்கு இடம் கொடுத்தவருக்கு வாழ்க்கை கொடுத்தார் 47 வயது பெண்ணை திருமணம் செய்த ஆதீனம்: அறநிலையத்துறை விசாரணை appeared first on Dinakaran.

Tags : Atheenam ,Thiruvidaimarudur ,Mahalinga Swamy ,Suryanar Temple ,Mahalinga Swami ,Suryanar ,Temple ,Kumbakonam, Thanjavur district ,Adhinam ,
× RELATED தமிழ்நாட்டில் திமுக ஆட்சி தொடர வேண்டும்: மதுரை ஆதீனம் பேச்சு