×

தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்கிறேன்: கமலா ஹாரிஸ் அறிவிப்பு

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளரும், தற்போதைய துணை அதிபருமான கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஹோவர்ட் பல்கலைக்கழகத்தில் நடந்த நன்றி தெரிவிப்பு கூட்டத்தில் அவர் பேசியதாவது: இந்த தேர்தல் முடிவுகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்புடன் பேசினேன். அவரது வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தேன். அமைதியான முறையில் அதிகார மாற்றம் நிகழ்வதற்கு அவருக்கும், அவரது அணிக்கும் உதவுவோம் என்று கூறினேன். இன்று என் இதயம் நிரம்பியுள்ளது. நீங்கள் என் மீதும், நம் நாட்டின் மீதும் முழுமனதுடன், உறுதியுடன் வைத்த நம்பிக்கைக்கு நன்றி. இந்தத் தேர்தலின் முடிவு நாம் விரும்பியது அல்ல. நாம் எதற்காகப் போராடினோம், எதற்காக வாக்களித்தோமோ அது இந்த முடிவு அல்ல. எனக்குப் புரிகிறது.

ஆனால் இந்த தேர்தல் முடிவுகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்வதுதான் ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கை. நமது நாட்டில் நாம் ஜனாதிபதிக்கு அல்லது ஒரு கட்சிக்கு அல்ல, நமது அமெரிக்காவின் அரசியலமைப்புக்கு விசுவாசமாக இருக்கிறோம். நமது நாட்டின் அடிப்படைக் கொள்கைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தை கைவிட வேண்டாம். சில நேரங்களில் சண்டை சிறிது நேரம் எடுக்கும், ஆனால் நாம் வெற்றி பெற மாட்டோம் என்று அர்த்தம் இல்லை. முக்கிய விஷயம் என்னவென்றால், ஒருபோதும் கைவிடாதீர்கள். அனைத்து மக்களின் சுதந்திரம், வாய்ப்பு, நேர்மை மற்றும் கண்ணியத்திற்கான போராட்டம் தொடரும். ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் சம நீதிக்கான போராட்டத்தை ஒருபோதும் கைவிடமாட்டேன். நமது சுதந்திரத்திற்கான போராட்டத்திற்கு கடின உழைப்பு தேவைப்படும்.

ஆனால் நான் எப்போதும் சொல்வது போல் நாங்கள் கடின உழைப்பை விரும்புகிறோம். நம் நாட்டிற்கான போராட்டம் எப்போதும் மதிப்புக்குரியது. ஒரு பழமொழி உண்டு, இருட்டாக இருந்தால் மட்டுமே நட்சத்திரங்களைப் பார்க்க முடியும். நாம் ஒரு இருண்ட காலத்திற்குள் நுழைவது போல் பலர் உணர்கிறார்கள் என்பதை நான் அறிவேன். ஆனால், நம் அனைவரின் நலனுக்காக, அப்படி இல்லை என்று நம்புகிறேன். ஆனால், அப்படித்தான் என்றால், கோடிக்கணக்கான புத்திசாலித்தனமான நட்சத்திரங்களின் ஒளியால் வானத்தை நிரப்புவோம். நேர்மறை எண்ணம், நம்பிக்கை, உண்மை மற்றும் சேவையின் ஒளி பின்னடைவுகளைச் சந்தித்தாலும், அமெரிக்காவின் அசாதாரண வாக்குறுதி நம்மை வழிநடத்தட்டும். கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும், மேலும் கடவுள் அமெரிக்காவை ஆசீர்வதிக்கட்டும். உங்கள் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த கூட்டம் மிகவும் அமைதியாக இருந்தது. இதில் முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசியும், மேயர் முரியல் பவுசர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கமலா ஹாரிஸின் இளைய குடும்ப உறுப்பினர்கள் பலர் கண்ணீருடன் இதில் கலந்து கொண்டனர்.

அதிபர் பதவியேற்ற 2 வினாடியில் சிறப்பு ஆலோசகரை பதவி நீக்கம் செய்வேன்: டிரம்ப் ஆவேசம்
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் நேற்று, கன்சர்வேடிவ் வானொலி தொகுப்பாளர் ஹக் ஹெவிட் உடனான ஒரு நேர்காணலின் போது டிரம்ப் முதலில் மன்னிப்பாரா அல்லது அதிபரின் சிறப்பு ஆலோசகர் ஜாக் ஸ்மித்தை நீக்குவாரா என்று கேட்கப்பட்டது. ஏனெனில் கடந்த 2022ம் ஆண்டில் அட்டர்னி ஜெனரல் மெரிக் கார்லண்டால் நியமிக்கப்பட்ட ஜாக் ஸ்மித், 2020ல் நடந்த அதிபர் தேர்தலை மாற்றியமைக்கவும், ரகசிய ஆவணங்களை டிரம்ப் தவறாகக் கையாண்டதாகவும் குற்றம் சாட்டினார். இதனால் ஜாக் ஸ்மித் குறித்த கேள்விக்கு டிரம்ப் பதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. இதுகுறித்து டிரம்ப் கூறுகையில்,’ இது மிகவும் எளிதானது. இரண்டு வினாடிகளில் அவரை பதவி நீக்கிவிடுவேன். ஜாக் ஸ்மித் ஒரு அயோக்கியன்’ என்றார்.

டிரம்ப்புக்கு பைடன் வாழ்த்து
அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்பிற்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். மேலும் அமெரிக்க பாரம்பரிய முறைப்படி அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்பை வெள்ளை மாளிகையில் வந்து தன்னை சந்திக்குமாறும் பைடன் அழைப்பு விடுத்தார். தேர்தல் முடிவுகள் மற்றும் அரசியல் மாற்றம் குறித்து பைடன் இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட கமலா ஹாரிசையும், அதிபர் பைடன் தொடர்பு கொண்டு வாழ்த்தினார்.

கமலா ஹாரிஸ் தோற்றது ஏன்?
அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிசுக்கு முன்னாள் அதிபர்கள் ஒபாமா, பில் கிளின்டன் தொடங்கிய ஒட்டுமொத்த ஹாலிவுட் பட்டாளமும் களமிறங்கியும் கூட அத்தனையும் வீணாகிப் போகின. நேரடி விவாதத்தில் அதிபர் பைடன் சொதப்பியதால் திடீர் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் மாறினார். 4 மாதத்தில் தேர்தல் பிரசாரத்தை திட்டமிடுவது அவருக்கு மிகக் கடினமான பணியாக மாறியது. அதிலும், பைடனை விட தான் எந்த விதத்தில் மாறுபட்டவர், வலிமையானவர் என்பதை தெளிவுபடுத்த கமலா ஹாரிஸ் தவறி விட்டார். அவர் தனது பிரசாரத்தில் முழுக்க முழுக்க டிரம்பை தனிப்பட்ட ரீதியாக குறிவைப்பதிலேயே கவனம் செலுத்தினார். இதன் மூலம் அதிபரானால் எப்படிப்பட்ட நிர்வாகத்தை தருவேன் என்பதை அமெரிக்கர்கள் மனதில் கமலா ஆழமாக பதிய தவறி விட்டார்.

பைடன் ஆட்சி நிர்வாகத்தில் பணவீக்கம் அதிகரித்ததால் அமெரிக்க மக்களின் மாதாந்திர செலவுகள் கணிசமாக அதிகரித்தன. இதில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பாக கமலா ஹாரிஸ் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. மக்களின் இந்த அதிருப்தியை பயன்படுத்தி மக்களை தன்பக்கம் இழுத்தார் டிரம்ப். இதனால், பைடன் அரசின் சில கொள்கைகளை அவசரப்பட்டு கமலா ஹாரிஸ் மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டதும் அவருக்கு எதிராக திரும்பியது. டிரம்பின் ’மீண்டும் அமெரிக்காவை வலிமையாக்குவேன்’ என்ற பிரசாரத்திற்கு கமலா ஹாரிஸ் ஈடுகொடுக்கத் தவறினார். மேலும், சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பது, வெளியுறவுக் கொள்கைகளில் அழுத்தமான உத்தரவாதங்களை கமலா ஹாரிஸ் தரத் தவறினார்.

இந்தியாவுடனான நெருக்கத்தை பயன்படுத்தி இந்திய வம்சாவளிகளையும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வாக்குறுதிகளை வழங்கி கறுப்பினத்தவர்களின் ஓட்டுக்களையும் டிரம்ப் கைப்பற்றினார். அதோடு, கமலா ஹாரிசின் நிறம், கறுப்பின அடையாளம் குறித்து டிரம்ப் விமர்சித்து இன ரீதியாகவும் ஓட்டுக்களை அள்ளினார். எல்லாவற்றையும் தாண்டி, பெண்களுக்கு அமெரிக்கா வாக்களிக்காது என்ற மறைமுகமான உண்மையும் கமலாவை வீழ்த்தியது. இனவெளி, பெண் வெறுப்பு ஆகியவற்றுடன் அமெரிக்கா நீண்டகால தொடர்பை கொண்டுள்ளது. இது வெளிப்படையாக இல்லாவிட்டாலும், பெண் என்பதும் கமலாவின் தோல்விக்கான காரணங்களில் ஒன்று என்பது மறுப்பதற்கில்லை.

தெலுங்கு சமுதாயத்திற்கு பெருமை: துணை அதிபராகும் ஜேடி வான்ஸ் மனைவி உஷா வான்ஸ்க்கு சந்திரபாபு நாயுடு வாழ்த்து
அமெரிக்க அதிபர் தேர்தலில் துணை அதிபராக ஜே.டி. வான்ஸ் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார். இதனால் அவரது மனைவி உஷா வான்ஸ் அமெரிக்காவின் 2வது பெண்மணியாக இருக்கிறார். ஆந்திரா மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட இவருக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்து செய்தியில் ‘அமெரிக்காவின் துணை அதிபராகும் ஜே.டி.வான்ஸ்க்கு வாழ்த்துக்கள். அவரது வெற்றியால் ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட உஷா வான்ஸ் அமெரிக்காவின் 2வது பெண்மணியாக உள்ளார். இது உலகத்தில் உள்ள ஆந்திர சமுதாயத்திற்கு பெருமை சேர்க்கும் தருணம். ஆந்திராவுக்கு வருகை தருவதற்காக அவர்களுக்கு அழைப்பு விடுப்பதை எதிர்நோக்கி இருக்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த உஷா சிலுக்குரியின் தந்தை1970-களில் சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். அங்கேயே பிறந்து வளர்ந்த உஷா, யேல் பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் இளங்கலை பட்டமும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதுகலை தத்துவப்பட்டமும் பெற்றுள்ளார். உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கீழ் சட்ட வல்லுநராக பணியாற்றினார். கடந்த 2014ம் ஆண்டில் ஜே.டி.வான்சை சந்தித்துள்ளார். இருவருக்கும் இடையில் காதல் ஏற்படவே அதே ஆண்டில் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைகளின்படி திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

அமெரிக்கர்களுக்கானவர் டிரம்ப்: விவேக் ராமசுவாமி புகழாரம்
அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் வெற்றி குறித்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளருக்கு போட்டியிட்டவருமான விவேக் ராமசாமி கூறுகையில்,’ நவீன வரலாற்றில் எந்த ஒரு ஜனாதிபதியும் இல்லாத அளவுக்கு அதிக வாக்கு வித்தியாசத்தில் டிரம்ப் வெற்றி பெற்றதற்கான காரணம் இதுதான். அவர் கருத்தியல்வாதி அல்ல. அவர் கொள்கை பிடிப்பு கொண்டவர் அல்ல. அவர் ஒரு தீவிர அமெரிக்கவாதி. அமெரிக்கர்களுக்கானவர். அவரை சிறையில் அடைத்தனர், அவரை இரண்டு முறை கொல்ல முயன்றனர். எதுவுமே வேலை செய்யவில்லை.

இந்த பிரச்சாரத்தின் போது ஒரு முறை கூட டிரம்ப் தன்னை தவறாக புரிந்து கொள்ளவில்லை, குறைத்து மதிப்பிடவில்லை அல்லது சந்தேகிக்கவில்லை. வெற்றி பெற்ற பிறகு அனைவரும் அவரைச் சுற்றிக் கொண்டாடியபோது, ​​நான் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன், அவர் முழு நம்பிக்கையுடன் இருந்தார். டிரம்பின் மறுபிரவேசம் அமெரிக்க மறுபிரவேசம். நம் தேசம் இப்போது ஒரு தீவிரமான தளபதியின் தலைமைக்குத் தகுதியானது, அதுதான் நமக்குக் கிடைத்தது. நமது ஜனநாயகம் உண்மையில் எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது என்பது வேடிக்கையானது’ என்றார்.

சீன அதிபர் வாழ்த்து
அமெரிக்க அதிபராக வெற்றி பெற்றுள்ள டிரம்புக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் நேற்று வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்துச் செய்தியில், அமெரிக்காவும், சீனாவும் இருதரப்பு பேச்சுவார்த்தை மற்றும் தகவல் தொடர்பை வலுப்படுத்தி, வேறுபாடுகளை களைந்து, பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை விரிவுபடுத்த அழைப்பு விடுத்துள்ளார். சீனாவுக்கு எதிரான கொள்கைகளை டிரம்ப் கொண்டிருக்கும் நிலையில் அவருடன் சமாதானமாக செல்ல சீனா விரும்புவதை இது காட்டுகிறது.

டிரம்ப் வெற்றிக்கு பிறகு ஜாக்பாட்: எலான் மஸ்க் சொத்து மதிப்பு ஒரே நாளில் ரூ2.2 லட்சம் கோடி உயர்வு
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட டிரம்ப்புக்கு, உலகின் நம்பர் 1 தொழில் அதிபர் எலான் மஸ்க் ரூ.11 ஆயிரம் கோடி நன்கொடை அளித்தார். தற்போது டிரம்ப் வெற்றி பெற்று விட்டதால் எலான் மஸ்க் வைத்துள்ள நிறுவனங்களின் மதிப்பு உயர்ந்துள்ளது. அவரது நிறுவன பங்குகளின் மதிப்பு அதிகரித்ததால் ஒரே நாளில் எலான் மஸ்க் சொத்து மதிப்பு ரூ.2.2 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அவரது அனைத்து நிறுவனங்களில் நிகர மதிப்பு ரூ.24 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. அவரது டெஸ்லா நிறுவன பங்குகளின் மதிப்பு 15 சதவீதம் உயர்ந்துள்ளது. இனியும் அவரது நிறுவனங்களின் பங்கு மதிப்பு உயரும் என்று தெரிகிறது.

டிரம்ப் வெற்றிக்கு பிறகு எலான் மஸ்க் சொத்து மதிப்பு மட்டுமல்ல, உலகின் முதல் 10 இடங்களில் உள்ள மற்ற தொழில் அதிபர்களின் பங்குகளும் உயர்ந்துள்ளன. ப்ளூம்பெர்க்கின் பில்லியனர்கள் பட்டியலின்படி உலகின் மிகப் பெரிய செல்வந்தர்களின் நிகர மதிப்பு ரூ.5 லட்சம் கோடி உயர்ந்துள்ளது. இவர்களில் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ், ஆரக்கிளின் லாரி எலிசன் ஆகியோரும் அதிக பயன் பெற்றுள்ளனர். கிரிப்டோ தலைவர்களான காயின் பேஸ் நிறுவனத்தின் பிரையன் ஆம்ஸ்ட்ராங், பினான்சின் செங்பங் சாவோ உட்பட பிற பில்லியனர்களின் சொத்து மதிப்பும் உயர்ந்துள்ளது. காயின் பேஸ் நிறுவன ஆம்ஸ்ட்ராங்கின் நிகர மதிப்பு 30% அதிகரித்துள்ளது. அமெரிக்க டாலர் மதிப்பும் சர்வதேச அளவில் உயர்ந்துள்ளது.

டிரம்பை வரவேற்கும் இந்திய வம்சாவளிகள்
அமெரிக்க அதிபராக மீண்டும் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளிகள் பலத்த வரவேற்பை தந்துள்ளனர். கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை, ‘‘மகத்தான வெற்றி பெற்ற டிரம்புக்கு வாழ்த்துக்கள். அமெரிக்காவில் புதிய கண்டுபிடிப்புகளின் பொற்காலத்தில் உள்ள நாம், அனைவருக்கும் பலனளிக்க உதவும் வகையில் டிரம்ப் நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற உறுதி அளிக்கிறோம்’’ என்றார். வட கரோலினா முன்னாள் கவர்னர் நிக்கி ஹாலே, லூசியானா முன்னாள் கவர்னர் பாபி ஜிண்டால் ஆகியோர் அமெரிக்காவிற்கான மிகச்சிறந்த நாள் வந்துவிட்டதாக புகழ்ந்துள்ளனர். அமெரிக்காவுக்கு விடிவு பிறந்தது என தொழிலதிபரும், அரசியல்வாதியுமான விவேக் ராமசாமி கூறி உள்ளார். கமலா ஹாரிசின் முக்கிய நிதி திரட்டுபவரான அஜய் ஜெயின் பதூரியா கூட டிரம்ப்பை வரவேற்றுள்ளார்.

The post தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்கிறேன்: கமலா ஹாரிஸ் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags :
× RELATED சிரியா அதிபர் சென்ற விமானம் ரேடாரில் இருந்து மாயமானது!