×

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் அதிரடி வெற்றியால் தங்கம் விலை கடும் வீழ்ச்சி

சென்னை: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு எதிரொலியாக தங்கம் விலை நேற்று அதிரடியாக சவரனுக்கு ரூ.1320 குறைந்தது. இந்த விலை குறைவு நகை வாங்குவோரை மிகுந்த மகிழ்ச்சியடைய செய்துள்ளது. தங்கம் விலை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஏற்றம் இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. கடந்த 2ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.58,960 ஆக விற்கப்பட்டது. 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை.

4ம் தேதி தங்கம் விலையில் எந்தவித மாற்றமுமின்றி ஒரு சவரன் ரூ.58,960க்கு விற்கப்பட்டது. 5ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.58,840க்கும் விற்கப்பட்டது. அதே நேரத்தில் நவம்பர் 1ம் தேதி முதல் நவம்பர் 5ம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 வரை குறைந்தது. இதற்கிடையில் நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ஒரு கிராம் ரூ.7,365க்கும், சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு சவரன் ரூ.58,920க்கும் விற்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கம் விலை மள, மளவென சரிவை சந்தித்தது. அதாவது, நேற்று மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.165 குறைந்து ஒரு கிராம் ரூ.7200க்கும், சவரனுக்கு ரூ.1320 குறைந்து ஒரு சவரன் ரூ.57,600க்கும் விற்கப்பட்டது.  இதுகுறித்து சென்னை தங்கம், வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறுகையில், ‘‘அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இதனால் தொழில் துறையில், முதலீட்டாளார்களால் அதிக முதலீடுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

அந்த அடிப்படையில் இன்னும் சில தினங்களுக்கு தங்கம் விலை குறைய வாய்ப்பு இருக்கிறது” என்றார். அதே நேரத்தில் அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பொறுப்பேற்றதால், கடந்த சில மாதங்களாக சரிந்திருந்த பங்கு சந்தையானது மீண்டும் உயர வாய்ப்பு உள்ளது. ஆகையால் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வதை குறைத்து பங்கு சந்தைகளில் முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர்.

இதனால் தங்கத்தின் விலை குறைந்துள்ளது என்றும் சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர். அதேபான்று வெள்ளி விலையும் அதிரடியாக கிராமுக்கு ரூ.3 குறைந்து ஒரு கிராம் ரூ.102க்கு விற்கப்பட்டது. ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.3000 குறைந்து, ஒரு கிலோ ரூ.1,02,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம், வெள்ளி விலை குறைவால் நேற்று நிறைய பேர் நகைகள் வாங்க ஆர்வம் காட்டினர். இதனால் நகைக்கடைகளில் வழக்கத்தை விட சற்று கூட்டம் அதிகம் காணப்பட்டது.

The post அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் அதிரடி வெற்றியால் தங்கம் விலை கடும் வீழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Trump ,US presidential election ,Chennai ,Shavran ,Dinakaran ,
× RELATED அமெரிக்க அதிபர் தேர்தலில், டோனல்ட்...