×

நடப்பாண்டில் ஏப்.1 முதல் நேற்று வரை 8,62,544 விவசாயிகளுக்கு ரூ.7,666 கோடி பயிர்க்கடன் : அமைச்சர் பெரியகருப்பன்

சென்னை: நடப்பாண்டில் ஏப்.1 முதல் நேற்று வரை 8,62,544 விவசாயிகளுக்கு ரூ.7,666 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான விவசாயிகளின் நலன்காக்கும் சீர்மிகு நல்லாட்சியில், ஒரு சில அரசியல் தலைவர்கள் ஆதாயம் தேடுகின்ற வகையில் உண்மைக்கு புறம்பாக, அர்த்தமற்ற, அவதூறு செய்திகளை பரப்புகின்றனர். அவற்றை எல்லாம் பொதுமக்கள் புறம் தள்ள வேண்டும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது :-

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பருவ காலங்களில் பயிர்சாகுபடி செய்து பயன்பெறுவதற்கு ஏதுவாக பயிர்க்கடன் மற்றும் உரங்கள் தங்குதடையின்றி விநியோகிக்கப்பட்டு வருகின்றது. இந்த சூழ்நிலையில் ஒரு சில அரசியல் தலைவர்கள் ஆதாயம் தேடும் வகையில் வெளியிட்டுள்ள அர்த்தமற்ற அவதூறு செய்திகளில் எள்ளளவும் உண்மை இல்லை.

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் சீர்மிகு நல்லாட்சியில், விவசாயிகள் அந்ததந்த பருவ காலங்களில் பயிர்சாகுபடி செய்ய ஏதுவாக மாநில தொழில்நுட்ப குழுவால் அங்கீகரிக்கப்பட்ட கடனளவிற்கு (Scale of Finance) உட்பட்டு விவசாயிகளின் தேவைகளுக்கு ஏற்பவும் மற்றும் NABARD, RBI வழிகாட்டு நெறிமுறைகளுக்குட்பட்டும் பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது.கடந்த 2021-2022-ஆம் ஆண்டில் 14,84,052 விவசாயிகளுக்கு ரூ.10,292 கோடி பயிர்க்கடனும், 2022-2023-ஆம் ஆண்டில் 17,43,817 விவசாயிகளுக்கு ரூ.13,442 கோடி பயிர்க்கடனும், 2023-2024-ஆம் ஆண்டில் 18,36,345 விவசாயிகளுக்கு ரூ.15,542 கோடி பயிர்க்கடனும் வழங்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் 01.04.2024 முதல் 06.11.2024 வரை 8,62,544 விவசாயிகளுக்கு ரூ.7,666 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டை விட ரூ.450 கோடி கூடுதலாகும். சென்ற ஆண்டு இதே நாள் வரை ரூ.7216 கோடி கடன் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். பயிர்க்கடன்கள், மத்திய கூட்டுறவு வங்கிகளில் உள்ள விவசாயிகளின் சேமிப்பு கணக்கில் வரவு வைக்கப்பட்டு வழங்கப்படுகிறது. மேலும், விவசாயிகள் தங்கள் வீட்டிலிருந்தே பயிர் கடன் பெற ஏதுவாக மொபைல் செயலி (Online Mobile App) மூலம் பயிர்க்கடன் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு விவசாயிகளின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதேபோல, பயிர்க்கடன்களை குறித்த காலத்தில் திருப்பி செலுத்திடும் விவசாயிகளிடம் வட்டி வசூலிக்கப்படுவதில்லை. அரசே அவ்வட்டி தொகையை ஏற்றுக்கொள்கிறது.

அதேபோன்று, விவசாயிகளுக்கு தங்குதடையின்றி உரம் அவர்களின் தேவைக்கேற்ப வழங்கப்பட்டு வருகின்றன. உரங்கள் வேளாண்மை துறை மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் மற்றும் தஞ்சாவூர் கூட்டுறவு விற்பனை இணையம் மூலம் நகர்வு செய்யப்பட்டு, அந்தந்த சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. ஏதேனும் சங்கங்களில் இருப்பின்மை ஏற்பட்டால் Buffer Stock-இல் இருந்து உரங்கள் நகர்வு செய்யப்படும்.

1.4.2024 முதல் 6.11.2024 வரை 77,797 மெட்ரிக் டன் யூரியா, 41,119 மெட்ரிக் டன் DAP, 18,490 மெட்ரிக் டன் MOP, 70,116 மெட்ரிக் டன் காம்ப்ளெக்ஸ் உரங்களும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை 32,755 மெட்ரிக் டன் யூரியா, 16,792 மெட்ரிக் டன் DAP, 13,373 மெட்ரிக் டன் MOP, 22,866 மெட்ரிக் டன் காம்ப்ளெக்ஸ் உரங்கள் கூட்டுறவு சங்கங்களில் இருப்பில் வைக்கப்பட்டு, உரங்கள் விவசாயிகளின் தேவைக்கேற்ப சிரமமின்றி பெற்றிட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் 4456 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இச்சங்கங்கள் மூலம் அந்தந்தப் பகுதிகளில் உள்ள விவசாயிகள், குறு, சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்குத் தேவையான பயிர்க்கடன், நகைக்கடன், சுய உதவிக்குழு கடன், தாட்கோ, டாம்கோ, டாப்செட்கோ என 26 வகையான கடன்கள் குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
இச்சூழ்நிலையில், ஒரு சில அரசியல் தலைவர்கள் ஆதாயம் தேடுகின்ற வகையில் உண்மைக்கு புறம்பாக, அர்த்தமற்ற, அவதூறு செய்திகளை பரப்புவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அவற்றை எல்லாம் பொதுமக்கள் புறம் தள்ள வேண்டும்.

கூட்டுறவுத்துறையின் மூலம் அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் எண்ணற்ற திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் அவ்வப்போது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவிக்கும் சிறப்புத்திட்டங்கள் முதல் வெள்ள நிவாரணம் வரை அனைத்தும் பொதுமக்களிடம் சென்றடையும் வகையில் கூட்டுறவுத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் அவதூறு செய்திகளை புறம் தள்ளி, கூட்டுறவுத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.கேஆர்.பெரியகருப்பன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

The post நடப்பாண்டில் ஏப்.1 முதல் நேற்று வரை 8,62,544 விவசாயிகளுக்கு ரூ.7,666 கோடி பயிர்க்கடன் : அமைச்சர் பெரியகருப்பன் appeared first on Dinakaran.

Tags : Minister ,Periyakaruppan ,Chennai ,Periyagaruppan ,Tamil Nadu ,Chief Minister ,Mr. ,M.K.Stalin ,
× RELATED கூட்டுறவுத் துறை அமைச்சர்...