ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க தமிழ்நாடு ஏ.ஐ இயக்கத்துக்கு ரூ14 கோடி ஒதுக்கி அரசாணை

சென்னை: ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க தமிழ்நாடு ஏ.ஐ. இயக்கத்திற்கு ரூ13.93 கோடி நிதியை அரசு ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அரசாணையில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024-25ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடரில் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்துறை, ஆராய்ச்சி மற்றும் மருத்துவ துறைகளில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவது குறித்து வரையறைகளை வகுத்திட முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ‘‘தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம்’’ TNAIM செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்தவகையில் இயக்கத்தை செயல்படுத்தும் விதமாக ரூ13.93 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

மேலும், முன்கணிப்பு கொள்கை உருவாக்கம், திறன் மேம்பாடு, திறன் மற்றும் கல்வி, சமூக ஒத்துழைப்பு, ஸ்டார்ட்-அப்களை ஈடுபடுத்துதல், புத்தாக்கம் மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஏஐ கிடைப்பதை எளிதாக்குவதன் மூலம் கணக்கீடு மற்றும் சேமிப்பிற்கான உள்கட்டமைப்பை வழங்குதல் ஆகியவற்றில் செயற்கை நுண்ணறிவு கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் இந்த இயக்கம் கவனம் செலுத்தும். இதில் முன்னணி கல்வி நிறுவனங்களின் உறுப்பினர்கள், ஏஐ துறையை சேர்ந்த தொழில்முறை வல்லுநர்கள் மற்றும் இணைக்கப்பட்ட தொழில்துறையை சேர்ந்த முன்னணி நபர்களும் இருப்பார். தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கத்தின் முக்கிய நோக்கமாக, அடுத்த 5 ஆண்டுகளில் மாநிலத்தை முன்னணி செயற்கை நுண்ணறிவு மையங்களில் ஒன்றாக நிலைநிறுத்துவதை கொண்டு செயல்பட உள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க தமிழ்நாடு ஏ.ஐ இயக்கத்துக்கு ரூ14 கோடி ஒதுக்கி அரசாணை appeared first on Dinakaran.

Related Stories: