சென்னை: நிர்வாக காரணங்களால் சென்னையில் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். சென்னையில் இருந்து நேற்று மாலை 6.10 மணிக்கு கவுகாத்திக்கும், இரவு 10.40 மணிக்கு கொல்கத்தாவுக்கும் செல்ல வேண்டிய 2 புறப்பாடு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதேபோல் மாலை 5.35 மணிக்கு பெங்களூரில் இருந்து சென்னைக்கும், இரவு 10.05 மணிக்கு கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கும் வரவேண்டிய 2 வருகை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானங்கள் என மொத்தம் 4 விமானங்கள் நேற்று ஒரே நாளில் சென்னை விமான நிலையத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, நிர்வாக காரணங்களால் இந்த 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்றனர். ஆனால் பயணிகள் தரப்பில் கூறுகையில், எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கின்றனர். இதனால் திட்டமிட்டபடி பயணம் மேற்கொள்ள முடியாமல், அவதிப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. நிர்வாக காரணம் என்று ஒட்டுமொத்தமாக அறிவித்தாலும், விமானங்களை இயக்க போதிய விமானிகள் இல்லாததுதான் விமானங்கள் ரத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது என்றனர்.
The post நிர்வாக காரணத்தால் 4 விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி appeared first on Dinakaran.