×

செயலி மூலம் போதைப்பொருட்கள் விற்பனை; பிரபல தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 5 பேர் அதிரடியாக கைது: மாணவிகள் உட்பட 100 பேர் போதைப்பொருள் வாங்கியது விசாரணையில் அம்பலம்

* பின்னணி குறித்து பரபரப்பு தகவல்கள்

சென்னை: தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவர்களிடையே செயலி மூலம் (APP) போதைப்பொருள் விற்பனை செய்து வந்த 5 மாணவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 700 கிராம் கஞ்சா, 94 எல்எஸ்டி ஸ்டாம்புகள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை பெருநகர காவல் எல்லையில் போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் வகையில் போலீஸ் கமிஷனர் அருண் பல்ேவறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அதன்படி போதை பொருட்களை விற்பனை மற்றும் கடத்தும் நபர்களை கைது செய்யும் வகையில் உதவி கமிஷனர் ஒருவர் தலைமையில் போதைப்பொருள் நுண்ணறிவு தடுப்பு பிரிவு ஒன்று புதிதாக பெருநகர காவல்துறையில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பிரிவினர் போதை பொருட்களை விற்பனை மற்றும் கடத்தும் நபர்கள் மீது மட்டுமே கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அந்தவகையில் போதைப்பொருள் சிறப்பு பிரிவுக்கு ஜே.ஜே.நகர் பகுதியில், மாணவர்களிடையே போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி தனிப்படையினர் கடந்த 3ம் தேதி மாலை ஜே.ஜே.நகர் பகுதியில், 21 வயது வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் கையில் பையுடன் சுற்றியதை கண்டனர். அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தியபோது, அவரது பையில் 17 எல்எஸ்டி போதை ஸ்டாம்புகள், 3 கிராம் ஓ.ஜி கஞ்சா இருந்தது தெரியவந்தது. உடனே அந்த வாலிபரை பிடித்து ஜே.ஜே.நகர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்திய போது, ஜே.ஜே.நகர் பகுதியை ேசர்ந்த கார்த்திகேயன் (21) என்றும், இவர் வண்டலூர் அருகே உள்ள பிரபல தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பொறியியல் படிப்பு படித்து வருவதும் தெரியவந்தது.

இவர் தனது நண்பர்களான காட்டாங்குளத்தூரில் உள்ள பிரபல தனியார் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வரும் மாணவர்களிடம் இருந்து மொத்தமாக வாங்கி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கார்த்திகேயன் அளித்த தகவலின்படி தனிப்படையினர் பிரபல தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வரும் மந்தவெளியை சேர்ந்த அரவிந்த் பாலாஜி (20), கூடுவாஞ்சேரியை சேர்ந்த வத்சல் (21), மறைமலைநகரை சேர்ந்த ஆருணி (20), திரிசண் சம்பத் (20) ஆகியோர் தங்கியுள்ள இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இச் சோதனையில் அந்த தனியார் கல்லூரியில் படித்து வரும் 4 பேர், அவர்கள் தங்கும் அறையில் பதுக்கி வைத்திருந்த 94 எல்எஸ்டி போதை ஸ்டாம்புகள், 48 போதை மாத்திரைகள், 700 கிராம் உயர் ரக கஞ்சா, 5 செல்போன்களை கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.

பிடிபட்ட 5 மாணவர்கள் பயன்படுத்திய செல்போனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தியபோது, அவர்கள் படிக்கும் காட்டாங்குளத்தூரில் உள்ள பல்கலைக்கழகத்தில் உடன் படிக்கும் சக மாணவ, மாணவிகளுக்கு போதைப்பொருட்கள் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதற்காக “ரெடிட்” எனும் செல்போன் செயலியை பயன்படுத்தி வந்துள்ளனர். இதனை தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் 5 பேரையும் தனிப்படையினர் கைது செய்தனர்.  இதையடுந்து இந்த செயலி மூலம் யார், யாருக்கு போதைப்பொருட்களை விற்றுள்ளனர் என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெளிமாநில மாணவிகளுக்கு அதிகம் விற்பனை
காட்டாங்குளத்தூரில் உள்ள பிரபல பல்கலைக்கழகத்தில் படித்து வரும் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் போதைப்பொருட்களை ரெகுலராக பயன்படுத்தி வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதில் வெளிமாநிலத்தை சேர்ந்த மாணவிகள்தான் அதிகளவில் போதைப் பொருட்களை வாங்கியுள்ளனர் என்றும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கைது செய்யப்பட்ட 5 மாணவர்களும் அரசு மருத்துவமனையில் உள்ள மத்திய உயர் வேதியியல் ஆய்வு கூடத்தில் வைத்து பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர். இதில் 5 கல்லூரி மாணவர்களும் போதைப்பொருட்கள் பயன்படுத்தி வந்தது அறிவியல் பூர்வமாக உறுதிபடுத்தப்பட்டது. எனவே மாணவர்களிடையே போதைப்பொருட்கள் விற்பனை செய்த சக கல்லூரி மாணவர்களை பிடித்த தனிப்படையினருக்கு போலீஸ் கமிஷனர் அருண் பாராட்டு தெரிவித்துள்ளார்.

The post செயலி மூலம் போதைப்பொருட்கள் விற்பனை; பிரபல தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 5 பேர் அதிரடியாக கைது: மாணவிகள் உட்பட 100 பேர் போதைப்பொருள் வாங்கியது விசாரணையில் அம்பலம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED வி.சி.க. தலைவர் திருமாவளவனுக்கு எதிரான...