மும்பை: இந்திய அணியுடன் நடந்த 3வது மற்றும் கடைசி டெஸ்டில், 25 ரன் வித்தியாசத்தில் போராடி வென்ற நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி மொத்தம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. பெங்களூரு, புனேவில் நடந்த முதல் 2 போட்டியிலும் அபாரமாக வென்ற நியூசிலாந்து 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
இந்த நிலையில், 3வது மற்றும் கடைசி டெஸ்ட் மும்பை வாங்கடே மைதானத்தில் நவ.1ம் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 235 ரன், இந்தியா 263 ரன் எடுத்தன. 28 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து, 2ம் நாள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 171 ரன் எடுத்திருந்தது. அஜாஸ் படேல் 7 ரன், வில்லியம் ஓ’ரூர்கே இருவரும் நேற்று 3வது நாள் ஆட்டத்தை தொடங்கினர். அஜாஸ் மேற்கொண்டு 1 ரன் மட்டுமே சேர்த்து ஜடேஜா சுழலில் ஆகாஷ் வசம் பிடிபட, நியூசிலாந்து 2வது இன்னிங்சில் 174 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (45.5 ஓவர்). ஓ’ரூர்கே 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய பந்துவீச்சில் ஜடேஜா 5, அஷ்வின் 3, ஆகாஷ், வாஷிங்டன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 3 நாள் ஆட்டம் எஞ்சியிருக்க 147 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ஜெய்ஸ்வால், ரோகித் இணைந்து துரத்தலை தொடங்கினர். 11 ரன் எடுத்த ரோகித், தேவையில்லாமல் தூக்கி அடித்து விக்கெட் தானம் செய்தார். அடுத்து வந்த கில், கோஹ்லி தலா 1 ரன் மட்டுமே எடுத்து அஜாஸ் சுழலில் பெவிலியன் திரும்பினர். ஜெய்ஸ்வால் 5, சர்பராஸ் 1 ரன்னில் ஜகா வாங்க… இந்தியா 7.1 ஓவரில் 29 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து திக்கு தெரியாமல் திணறியது.
ரிஷப் பன்ட் – ரவீந்திர ஜடேஜா ஜோடி 6வது விக்கெட்டுக்கு 42 ரன் சேர்த்தது சற்று நம்பிக்கை அளித்த நிலையில், ஜடேஜா 22 பந்தில் 6 ரன் எடுத்து அஜாஸ் பந்துவீச்சில் யங் வசம் பிடிபட்டார். அடுத்து ரிஷப் – வாஷிங்டன் இணைந்து 35 ரன் எடுத்தனர். தனி ஒருவனாகப் போராடி அரை சதம் அடித்த ரிஷப் 64 ரன் (57 பந்து, 9 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி அஜாஸ் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் பிளண்டெல் வசம் பிடிபட்டார். கள நடுவர் அவுட்டில்லை என மறுத்த நிலையில், நியூசிலாந்து டிஆர்எஸ் கேட்க… 3வது நடுவர் அவுட் கொடுத்தது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்தது.
அஷ்வின் (8), ஆகாஷ் (0) இருவரும் பிலிப்ஸ் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுக்க, வாஷிங்டன் 12 ரன் எடுத்து அஜாஸ் சுழலில் கிளீன் போல்டானார். இந்தியா 2வது இன்னிங்சில் 121 ரன்னுக்கு சுருண்டு (29.1 ஓவர்) 25 ரன் வித்தியாசத்தில் ஹாட்ரிக் தோல்வியைத் தழுவியது. சிராஜ் (0) ஆட்டமிழக்காமல் இருந்தார்.
நியூசிலாந்து பந்துவீச்சில் அஜாஸ் படேல் 14.1 ஓவரில் 1 மெய்டன் உள்பட 57 ரன்னுக்கு 6 விக்கெட், பிலிப்ஸ் 3, ஹென்றி 1 விக்கெட் வீழ்த்தினர். நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக வென்று வரலாற்று சாதனை படைத்தது. 2 இன்னிங்சிலும் சேர்த்து 11 விக்கெட் வீழ்த்திய அஜாஸ் ஆட்ட நாயகன் விருதும், வில் யங் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.
* கடுமையான விமர்சனம்…
சொந்த மண்ணியில் இந்தியா சந்தித்த படுதோல்வி சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் சொதப்பலான வியூகங்களே தோல்விக்கு முக்கிய காரணம் என்று ரசிகர்கள் வசைபாடி வருகின்றனர். எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத் தவறிய மூத்த வீரர்கள் ரோகித் ஷர்மா, விராத் கோஹ்லி இருவரும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
* அஜாஸ் அசத்தல்
வாங்கடே மைதானத்தில் அஜாஸ் விளையாடிய 2 டெஸ்டில் மொத்தம் 25 விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார். இந்தியாவில் ஒரே மைதானத்தில் இத்தனை விக்கெட் அள்ளிய வெளிநாட்டு வீரர் அஜாஸ் தான். இங்கிலாந்தின் இயான் போத்தம் வாங்கடேவில் 22 ரன் விக்கெட் கைப்பற்றியதே முந்தைய சாதனையாகும்.
* உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முன்னேறுவதில் சிக்கல்
நியூசிலாந்துக்கு எதிராக ஒயிட்வாஷ் ஆனதால், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் பைனலுக்கு தகுதி பெறுவதில் இந்திய அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அடுத்ததாக, பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் விளையாட உள்ள பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் (5 போட்டி), இந்தியா 4-0 என்ற கணக்கில் வென்றால் மட்டுமே கம்பீரமாக பைனலுக்கு முன்னேறலாம். இல்லையென்றால், மற்ற அணிகளின் வெற்றி/தோல்வி முடிவுகளுக்காக காத்திருக்க வேண்டியிருக்கும்.
* முதல் முறையாக…
* சொந்த மண்ணில் 200 ரன்னுக்கு குறைவான இலக்கை துரத்திய டெஸ்ட் போட்டிகளில் இந்தியா தோற்பது இதுவே முதல் முறை. இந்த வகையில் தொடர்ச்சியாக 30 வெற்றிகளைக் குவித்திருந்த இந்தியா, நேற்று 121 ரன்னில் சுருண்டு ஏமாற்றமளித்தது. முன்னதாக, பெங்களூருவில் பாகிஸ்தானுக்கு எதிராக 221 ரன்னை துரத்திய போது தோற்றிருந்தது (1987).
* ஒரு டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி 3 வெற்றிகளைப் பெறுவது இதுவே முதல் முறையாகும்.
* இந்தியா வெற்றியை கோட்டைவிட்ட 2வது குறைந்தபட்ச இலக்கு இது (147). இதற்கு முன் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 120 ரன்னை துரத்தியபோது (1997, பிரிட்ஜ்டவுன்) 81 ரன்னுக்கு சுருண்டது.
* கேப்டன் ரோகித் மோசம்
சொந்த மண்ணில் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் அதிக தோல்விகளை சந்தித்த இந்திய அணி கேப்டன்கள் வரிசையில் ரோகித் 2வது இடம் பிடித்துள்ளார். மன்சூர் அலிகான் பட்டோடி (9 தோல்வி), ரோகித் (5), அசாருதீன் (4), கபில் தேவ் (4). ரோகித் தலைமையில், நடப்பு சீசனில் மட்டுமே இந்தியா 4 டெஸ்ட் தோல்விகளை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, 1969ல் இப்படி தோற்றிருந்தது.
நடப்பு உள்ளூர் சீசனில் ரோகித் ஷர்மா விளையாடிய 10 டெஸ்ட் இன்னிங்சில் அவரது சராசரி ரன் குவிப்பு 13.3 ரன் மட்டுமே. இதற்கு முன் இங்கிலாந்தின் நாசர் உசைன் 6 டெஸ்டில் சராசரியாக 10.22 ரன் எடுத்துள்ளார் (2000).
The post சொந்த மண்ணில் சொதப்பியது இந்தியா: ஹாட்ரிக் வெற்றியுடன் ஒயிட்வாஷ் நியூசிலாந்து வரலாற்று சாதனை: ரிஷப் போராட்டம் வீண் appeared first on Dinakaran.