×
Saravana Stores

அதிரடியாக குறைந்த தங்கம் விலை தீபாவளிக்கு உச்சத்தில் இருந்த நிலையில் சவரனுக்கு ரூ.560 குறைந்தது: நகை வாங்குவோர் கடைகளுக்கு படையெடுப்பு

சென்னை: தீபாவளிக்கு உச்சத்தில் இருந்த நிலையில், நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 அதிரடியாக குறைந்ததால் நகை வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.

அதன்படி, தங்கம் விலை கடந்த மார்ச் மாதத்தில் ஒரு சவரன் ரூ.50 ஆயிரத்தை தொட்டது. அதன் பின்னர் அப்படியே நீடித்து வந்த நிலையில், மெல்ல மெல்ல அதிகரித்து மே மாதத்தில் ரூ.55 ஆயிரத்தை தொட்டது. கடந்த ஜூலை மாதம் ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால் விலை மளமளவென சரிந்து, ஒரு சவரன் ரூ.51 ஆயிரத்துக்கும் கீழ் வந்தது. மேலும் விலை குறையும் என எதிர்பார்த்தவர்களுக்கு நினைத்து பார்க்க முடியாத அதிர்ச்சி காத்திருந்தது.

அடுத்த சில மாதங்களில் தங்கம் விலை படிப்படியாக உயர்ந்து செப்டம்பர் மாதம் ரூ.56 ஆயிரத்தை தொட்டது. அதன் பின்னரும் ஏற்ற, இறக்கத்துடன் நீடித்தது. அதாவது ரூ.57 ஆயிரம் தொடும் நிலைக்கு வருவதும், பின்னர் குறைவதுமாக இருந்தது. கடந்த மாதம் ஆரம்பத்தில் இருந்து விலை தாறுமாறாக உயர்ந்து வந்தது. இந்த சூழ்நிலையில், அக்டோபர் மாதம் தொடக்கம் முதலே தங்கம் விலை ஏற்றத்தை சந்தித்து வந்தது. அதாவது, தங்கம் விலையானது கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடும் போது ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.

அக்டோபர் மாத இறுதியில் தங்கம் சவரனுக்கு ரூ.59,640க்கும் கிராமுக்கு ரூ.7,455க்கும் விற்பனையானது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கம் விலை தீபாவளிக்கு மறுநாளான நேற்று தான் சற்று குறைந்துள்ளது. அதாவது, நேற்று முன்தினம் நிலவரப்படி கிராமுக்கு ரூ.15ம், சவரனுக்கு ரூ.120ம் உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,455க்கும், ஒரு சவரன் ரூ.59,640க்கும் விற்பனை செய்யப்
பட்டது.

இன்னும் ஓரிரு நாட்களில் தங்கம் விலை ரூ.60 ஆயிரத்தை தாண்டும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று தங்கம் விலை அதிரடியாக சரிந்துள்ளது. அதன்படி, தங்கம் விலை ரூ.560 குறைந்து ரூ.59,080க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.7,385க்கு விற்பனையாகிறது. தீபாவளிக்கு மறுநாள் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளதால், விலை உயர்வால் தங்கம் வாங்காமல் காத்திருந்தவர்கள் நேற்று நகை கடைகளுக்கு படையெடுத்தது குறிப்பிடத்தக்கது.

 

The post அதிரடியாக குறைந்த தங்கம் விலை தீபாவளிக்கு உச்சத்தில் இருந்த நிலையில் சவரனுக்கு ரூ.560 குறைந்தது: நகை வாங்குவோர் கடைகளுக்கு படையெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Sharan ,Shavaran ,Diwali ,Chennai ,Tamil Nadu ,South India ,
× RELATED தீபாவளி பண்டிகை முடிந்ததும் தங்கம்...