தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தீபாவளி பண்டிகையான இன்று 15 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மன்னார் வளைகுடா பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திண்டுக்கல், மதுரை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நாளைய தினம் பொருத்தவரை, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பொருத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

* சென்னையில் ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழை
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நேற்று காலை 11.30 மணி முதல் மதியம் 1 மணி இடையே திடீரென கனமழை கொட்டி தீர்த்தது. சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், மாம்பலம், தி.நகர், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், நுங்கம்பாக்கம், அண்ணாநகர், எழும்பூர், புரசைவாக்கம், சைதாப்பேட்டை, கோயம்பேடு, வடபழனி, போரூர், மதுரவாயல், நெற்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. அண்ணாநகரில் அதிகபட்சமாக 11 செ.மீ மழை கொட்டியது. வில்லிவாக்கம் 10 செ.மீ, திருவிக நகர் 6.7 செ.மீ, கோடம்பாக்கம் 5.5 செ.மீ, நுங்கம்பாக்கம் 4.7 செ.மீ., அம்பத்தூர் 4.5 செ.மீ, நந்தனம் 4 செ.மீ., அண்ணா பல்கலைக்கழகத்தில் 2.7 செ.மீ மழை பதிவானது.

The post தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: