ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரியில் கைதிகளுக்கு தனி சிகிச்சை வார்டு அமைவது எப்போது? போலீசார் எதிர்பார்ப்பு

நாகர்கோவில்: ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கைதிகளுக்கு தனி சிகிச்சை வார்டு உடனே தொடங்கப்பட வேண்டும் என போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு குறைந்த பட்சம் நாள் ஒன்றுக்கு சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் புற நோயாளிகளாக வந்து சிகிச்சை பெறுகிறார்கள். 900க்கும் மேற்பட்டவர்கள் உள் நோயாளிகளாக உள்ளனர். தேசிய தரச்சான்று பெற்ற மருத்துவமனையாக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. குமரி மாவட்டம் மட்டுமின்றி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இருந்தும் அதிகம் பேர் சிகிச்சைக்காக வருகிறார்கள்.
பொதுமக்கள் தவிர, வழக்குகளில் கைதாகி நாகர்கோவில் சிறையில் இருக்கும் கைதிகள் பலர் உடல் நிலை பாதிக்கப்பட்டாலும் ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தான் அழைத்து வரப்படுகிறார்கள். இவர்களில் கொலை, கொள்ளை வழக்குகளில் கைதாகும் நபர்களும் அடங்குவர்.

இங்கு கைதிகளுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு இல்லாததால் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறும் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டுள்ள சாதாரண வார்டுகளில் தான் கைதிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்கள். கைதிகள் அனுமதிக்கப்பட்டுள்ள வார்டில் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட வேண்டி உள்ளது. இது பொதுமக்களுக்கும் அசவுரியத்தை ஏற்படுத்தி இருப்பதுடன், கைதிகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லாத நிலையை உருவாக்கி உள்ளது. இது மட்டுமின்றி, கைதிகள் தப்பி செல்லும் சம்பவங்களும் நடக்கின்றன. நேற்று முன் தினம் கொலை வழக்கு கைதி ஒருவர் தப்பி ஓடினார். இது போன்ற சம்பவங்கள் நடந்தால் பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீஸ் தான் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டி உள்ளது. போலீசாருக்கு பணி பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படுகிறது.

கைதிகளுக்கு தனி சிகிச்சை வார்டு இருந்தால், அந்த வார்டில் கைதிகளை அனுமதித்து தனியாக பாதுகாப்பு அளிக்க முடியும் என போலீசார் கூறி உள்ளனர். ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கைதிகளுக்கு தனி சிகிச்சை வார்டு அமைக்க காவல்துறை பரிந்துரையின் பேரில் அப்போதைய மருத்துவக்கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. ஆனால் இந்த நடவடிக்கை அப்படியே கிடப்பில் போட்டு விட்டனர். இது குறித்து போலீசார் கூறுகையில், கைதிகளுக்கு சிகிச்சை அளிக்க, மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டு அமைக்க வேண்டும். இந்த சிறப்பு வார்டு, உள்ளே நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் ஒரே வழியுடன் சிறை மாதிரி இருக்கும். அதற்கு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு இருக்கும். பணி நியமனம் செய்யப்பட்ட டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் மட்டுமே வார்டுக்குள் நுழைய முடியும்.

இதனால் கைதிகள் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும். மாநிலத்தில் மாவட்ட சிறைகள் மற்றும் துணை சிறைகள் அமைந்துள்ள மருத்துவமனைகளில் இதுபோன்ற வார்டுகளை அமைக்குமாறு ஏற்கனவே விதிமுறைகள் உள்ளன. எனவே தனி சிகிச்சை வார்டுக்கான இடம் வழங்கப்பட வேண்டும் என்றனர். மருத்துவக்கல்லூரி நிர்வாகத்தினர் கூறுகையில், கைதிகளுக்கு தனி வார்டு அமைக்க தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையிலும், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் கைதிகளுக்கு உள்நோயாளிகளாக சிகிச்சை அளிக்க தனி வார்டுகள் உள்ளன. அதன் அடிப்படையில் இங்கும் அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது என்றனர்.

The post ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரியில் கைதிகளுக்கு தனி சிகிச்சை வார்டு அமைவது எப்போது? போலீசார் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: