×

அகமெனும் அட்சயப் பாத்திரம்

நன்றி குங்குமம் டாக்டர்

மனநல ஆலோசகர் யஸ்ரீ கண்ணன்

நார்சிசம்… தன்வழிபாட்டு ஆளுமைக் கோளாறு!

கடந்த இதழில் நார்சிசம் எனும் தன் வழிபாட்டு ஆளுமைக் கோளாறு என்றால் என்னவென கண்டோம். இந்தக் கோளாறு உள்ளவர்கள் எப்படி மற்றவர்கள் உளவியலைப் பாதிக்கிறார்கள். நாம் எப்படி இவர்களைப் புரிந்துகொள்வது எனக் காண்போம்.ஒரு தவறை ஒருமுறைச் செய்வது தெரியாமல் செய்வதாகும். இரண்டு முறைக்கு மேல் செய்வது பழக்கம் ஆகிவிடுகிறது மூன்று முறைக்கு மேல் செய்வது அவர்களுடைய குணமாகிவிடுகிறது. அதனை மாற்ற முடியாது என்று உணர்ந்து தற்காத்துக் கொள்ளுதல் நலம். அன்றாட வாழ்வின் சிறுசிறு முடிவுகளைக்கூட உங்களை எடுக்க விடாமல் ஆளுமை செலுத்துவதே உரிமை, அன்பு என்று எண்ணிக்கொள்ளும் இவர்கள், ஒருவிதத்தில் பரிதாபத்திற்கு உரியவர்களே. ஏனெனில், தம் குறை இதுவெனவே அறியாதவர்கள்.

இவர்களிடம் நீங்கள் உலகில் எங்கிருந்து எவ்வளவு பெரிய பிரபலங்களை / வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுத்துப் பேசினாலும் அவர்களைக் குறித்து புறணி பேசுவார்கள். அவர்கள் எப்படி அப்படி ஆனார்கள் தெரியுமா? அவர்களின் அந்தரங்கம் உனக்குத் தெரியுமா என்று புதிய கதைகளைக் கட்டுவார்கள்.எனவே, எத்தகையோரையும் குறை சொல்லும் இருள் விழைவு (Dark side highlighting) கொண்டவர்கள் என்பதைப் புரிந்து கொண்டு, பேச்சுக்களைக் குறைத்துக் கொள்ளுதலே அறிவான செயல்.

சரி, வெற்றியாளர்களைப் பற்றி உயர்வாக பேசினால்தானே உனக்குப் பிரச்சனை என்று நீங்கள் உங்கள் பக்கத்து வீட்டு நபர், உறவினர், யாரோ ஒரு மூன்றாம் நபரைக் குறித்து ஏதேனும் உண்மையான சிறுகுறையை எடுத்துச் சொல்லிப்பாருங்கள். கதை தலைகீழாக மாறும். ஆமாம் அவர்கள் ஏன் அப்படி இருக்கிறார்கள் என்று கேட்டு உங்கள் பக்கம் நிக்க வேண்டியவர் இப்போது எதிர்பக்கம்போய் நின்று விடுவார். ”அவர்கள் எல்லோரும் நல்லவர்கள்தான். சரியாகத்தான் இருக்கிறார்கள் நீதான் சரியில்லை. உன் புரிதலில் பிழை” என்று அதிர வைப்பார்கள். ஆகமொத்தம், நச்சுத்தன்மை நபர்களுக்கு ஒரே நோக்கம் நீங்கள் எது பேசினாலும் மறுக்க வேண்டும் (Deny) உங்களுக்கு வலி ஏற்படுத்த வேண்டும் என்பதே. அமைதிகுலைவையும், உறவுச் சீர்கேட்டையும் நோக்கியே அவர்களின் செயல்பாடுகள் இருக்கும். இது சில இடங்களில் அறிந்தும், பல இடங்களில் அறியாமலும் செய்யப்படுகிறது.

பொதுவாக, புதிதாக அறிமுகமாகும் இரண்டு மனிதர்கள் பேசுகிறார்கள் என்றால் இருவருக்கும் பொதுமையாக இருக்கக்கூடியவற்றைப் பேசுவார்கள்.இதுவே மனித இயல்பு. ஆனால், கூர்ந்து கவனித்துப் பாருங்கள். நார்சீசிஸ்ட்டுகள் அரிதான பொதுவில் அறியபடாதவற்றையே (Uncommon/ Unfamilier) ஆர்வமாய்ப் பேசுவார்கள். இதில் நீங்கள் முட்டாள். அவர் அறிவாளி. உங்களுக்கு அது தெரியவில்லை என்ற தோற்றத்தை உண்டு பண்ணுவதன் வழியாக சுயதிருப்தி அடைவார்கள். நாமும் இவர்களுக்கு நிறைய தெரிகிறது என்று அவர்களைப் பாராட்டுவோம். இனி எதுவாயினும் அவர்களிடம் கேட்போமே என்று அவர்களுடைய கட்டுப்பாட்டிற்குள் போய் விழுவோம். இவ்வாறு அவர்கள் செயற்கைப் பெருமித உணர்வை (Artificial Grandiose ) உருவாக்கிக் கொள்கிறார்கள்.

இத்தகையோரிடம் தப்பித் தவறி நீங்கள் தவறு செய்து, நேர்மையாக இருக்கிறேன் பேர்வழி என்று மன்னிப்புக் கேட்டு விட்டீர்களானால் கதை முடிந்தது.காதலி /கணவன் என்ற பரிசீலனை (Consideration) எதுவும் செல்லுபடியாகாது. உங்கள் மன்னிப்பு ஏற்கப்படவேபடாது. அதையே குத்திக்காட்டி அவமானப்படுத்தவே அடுத்தடுத்த நகர்வுகளைத் திட்டமிடுவார். உங்கள் தவறுக்கு எப்படிப் பழி வாங்கலாம் என்ற முனைப்புதான் முதலில் நிற்கும். ஆனால், ஒருபோதும் அவர்கள் உங்களிடம் மன்னிப்புக் கேட்கவே மாட்டார்கள்.

உடலியல்கூறுகளின்படி, அவர்களுடைய மூளையின் சிந்தனை ஆற்றல், தான் தவறுக்கு அப்பாற்பட்டவன் என்று தீர்மானித்து அங்கேயே நின்று விட்டது எனலாம். மேலும், வழக்கத்திற்கு மாறான மூளைச் செயல்பாடுகளின் காரணமாக (Abnormal brain functioning system) அவர்களால், அடுத்தவருடைய உணர்வுகளைப் பகுத்துணர (Process) முடியாது.தம்மை அங்கே பொருத்தி அவருக்கு எப்படி வலிக்கும் என்று யோசிக்க இயலாது. எனவேதான், தொடர்ந்து அதைச் செய்து கொண்டே இருக்கிறார்கள். அதை செய்யாவிட்டால் அவர்களால் உறங்கவே முடியாது என்ற அளவுக்குத் தீவிர சுயஉணர்வோடு இருப்பார்கள்.

நார்சீசிஸ்ட்டுகளின் உலகில் நீங்கள் புது உறவாக காலடி எடுத்துவைக்கும்போது அவர்களைச் சுற்றி இருக்கக்கூடியவர்கள் உங்களை நல்ல மனநிலையோடு வரவேற்க மாட்டார்கள். உங்களைப் போட்டியாகவே பார்ப்பார்கள். தொடர்ந்து நல்லவற்றை நீங்கள் செய்தாலும், அவற்றை எதிர்கொள்ள மற்றவர்களிடம் ஏற்கனவே உங்களைப் பற்றி தவறான பிம்பத்தை உருவாக்கி வைத்திருப்பார். அப்போதுதானே அவர்களைப் பாவம் என்று பிறர் நினைப்பார்கள். அதுவே அவர்களின் தேவை. இப்படி உங்களுக்கான எதிரிகளை அவர்களே உருவாக்கி விடுவார்கள்.

‘ஆசை’ திரைப்படத்தில் பூர்ணம் விஸ்வநாதன் அப்படித்தான் ‘நார்சீசிஸ்ட்’ மாப்பிள்ளையை அப்படி நம்பி இருப்பார். \”பாவம்..பொண்டாட்டியில்லாமல் குழந்தையை வைத்துக்கொண்டு எவ்வளவு சிரமம். எவ்வளவு நல்லவர் \”என்று உருகுவார்.நாயகன் அஜித் அவர் கெட்டவர் என்று நிரூபிக்க மிகவும் போராடுவார். ஆழமாகக் கூர்ந்து பார்த்து, அவருக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்டி நிரூபித்தால் மட்டுமே நம்மால் இப்படியான நச்சுத் தன்மை மனிதர்களோடு போராடி வாழ (surviva)l முடியும். இதனால் தான் நார்சீசிசம் எனும் மனக்கோளாறு (mental disorder) சர்வதேச உளவியலுக்கு மாபெரும் சவாலாக இருக்கிறது.

இன்னும் நுட்பமாக நார்சீசிச நபரை கவனித்தால் இயல்பான சூழல்கள் (Normal atmosphere ) அவருக்கு ஒவ்வாமையாக இருக்கும்.எல்லாம் சரியாகப் போய்க் கொண்டிருக்கும். காலை சேவல் கூவும்.உணவு தயாராகும். வேலைக்குச் செல்வீர்கள். இரவு உறங்குவீர்கள்.இப்படியான இயல்பை அவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. அந்த அமைதியான நிலையை எப்படியாவது மாற்றிவிட தாமாகவே சிக்கல்களை (Complicate) முன்வந்து உருவாக்கி விடுவார்கள். நீங்கள் அமைதியாக இருப்பது அவர்களுக்குப் பதற்றத்தை உருவாக்கும்.எந்தக் காரணமும், நோக்கமும் இல்லாமல்கூட அவர்கள் இப்படிச் செய்வார்கள் என்பதுதான் ஆச்சர்யம். அதனால்தான் நல்ல உறவுகளை இழக்கிறோம் என்பது கூட அவர்களுக்குப் புரியாது.பிறருடையை துன்பமே அவர்களுக்கு நிறைவைக் கொடுக்கும். இது நார்சீசிச மனிதர்களின் பண்புகளில் முக்கியமான ஒன்று எனலாம்.

அடித்தால் பிறருக்குத் தெரியும். ரத்தம் வரும்.ஆனால் நார்சீசிச மனிதரால் பாதிக்கப்படுபவர்களின் வலிகள் (NPD Victims) வெளியே தெரியாது. இதைச் சாதகமாக்கித்தான் நவீன இணைய உலகில் நார்சீசிசப்போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பழைய திரைப்படங்களில் வரும் வில்லன்களைப்போல் பெரிய மீசை, மச்சம் சகிதம், கைகளைப் பிசைந்துக் கொண்டே நீளமான வசனங்களை எல்லாம் இன்றைய நச்சுத்தன்மை நபர்கள் பேச மாட்டார்கள்.

‘புரியாத புதிர்’ படத்தில் வரும் ரகுவரனைப் போல் கத்திக் கொண்டிருக்க மாட்டார். நவீன நார்சீசிஸ்ட் ‘ஐ’ திரைப்டத்தில் வரும் சுரேஷ் கோபி கதாபாத்திரம்போல் இருப்பார் என்று சொன்னால் எளிதாக எல்லோருக்கும் புரியும். ஒருநாள் அவரா இப்படி என்று உலகத்துக்குத் தெரியும்போது, அவ்வளவு அதிர்ச்சியாக இருக்கும் அந்த அளவிற்கு போலியான நன்மதிப்புத் தோற்றத்தைச் சமூகத்தில் கட்டமைத்து இருப்பார்கள். மிகவும் அமைதியாக இருப்பதோடு அதீதத் தந்திரமாகவும் இருப்பதால் இனம் காணுவது கடினமே.எனவே, நாம்தான் நம் அறிவினை மேம்படுத்திக் கொண்டு சரியாக மனிதர்களை எடைபோட வேண்டும்.

உரிய நேரத்தில் விழிப்புணர்வோடு ஆபத்தானவர்களிடமிருந்து விலகிக் கொள்ள வேண்டும். நாம் ஏற்கனவே கூறியதுபோல் தீர்வு கடினம்.அமெரிக்கன் சைக்கியாட்ரிக் அசோசியேஷன் வரையறுத்துள்ள சில வழிகாட்டுதல்களின்படி நார்சீசிஸ்ட்டுகளை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரலாம். கேள்விதாள்களைக் கொடுத்து ஆராய முற்படுவதே இங்கு சிரமமாக இருக்கும். ஏனெனில்,அதிலும் பொய்த் திரிபுகளே இடம் பெறும்.. ஆகவே, மெல்ல மெல்ல அவர்களின் செயல்களின் விளைவுகளை அவர்களுக்கு நேரடியான உதாரணங்களைக் காட்சிப்படுத்திப் புரிய வைக்க வேண்டும்.இதனால் எப்படி உறவுச் சீர்கேடு ஏற்படுகிறது, எது அவர்களை வெறுக்க வைக்கிறது/கவனயீர்ப்பு பெறத் தூண்டுகிறது என்று கடந்த காலப் பாதிப்புகளையும் ஆராய வேண்டும். தன்னைப் போலவே பிறருக்கும் வலிக்கும் என்பதை, அவர் உண்மையாக நேசிக்கும் தாய், குழந்தை போன்றவர்களை வைத்து செயல் விளக்கம் ( Demo ) கொடுக்கலாம். ஒன்றாகக் கொண்டாடுவது, ஒருவரை ஒருவர் பாராட்டுவது, துன்பத்தில் உதவுவது போன்ற நேர்மறைச் செயல்கள் எத்தனை நல்ல உணர்வுகளை, விளைவுகளை ஏற்படுத்துகின்றன என உணர்த்துவதும் மிக முக்கியமானது.

ஒருவர் நமக்குச் சரியான நபரில்லை என்றால், நாம் மகிழ்ச்சிகரமாக இருக்க முடியாது. அவர் நம்முடைய முன்னேற்றத்தை நோக்கி நம்மைச் செலுத்த மாட்டார். அப்போதே அவர் நமக்குரியவர் அல்ல என்று தெளிவாகிவிட வேண்டும். ஒரு பிணைப்பு தொடர்ந்து வலி கொடுக்கிறது எனில், இறையோ/ இயற்கையோ நமக்கு சமிக்ஜை கொடுக்கிறது. இப்பிரபஞ்சப் பெருஞ்சக்தி ‘விலகிவிடு ‘என்று குறிப்புகள் மூலம் உணர்த்துகிறது என்று புரிந்துகொள்ளுதல் நலம்.

தன்னம்பிக்கையும், சுயமரியாதையையும் கொண்ட வேறு சிலர் எங்கும் தன் இலக்கை விட்டுக்கொடுக்காமல் அவர்கள் வழியில் இயல்பாக நடப்பார்கள். முன்னேற்றம் பெறுவார்கள். திறன்மிக்க செயல்களோடு ( Smart work இயங்கிக் கொண்டே இருப்பார்கள்.சிலநேரம் தவறுகளுக்கு அதிக கோபம் கொள்வார்கள். எதையும் முன்னெடுத்துச் செல்லும் ஆளுமைப் பண்போடிருப்பார்கள். அவர்களை எல்லாம் இவர் சுயதொழுகைக்காரர் (Narcissit ) என்று உடனே சொல்லிவிடக்கூடாது.

நமக்குப் பிடிக்காதவர்களை/எண்ண அலைவரிசை ஒத்துப் போகாமல் மாற்றுக் கருத்து உள்ளவர்களை எல்லாம் கட்டம் கட்டி விடக்கூடாது. நார்சீசிஸ்டை இனம் காணும் காரணிகள் பலவும் பிறரிடத்தும் இருக்க வாய்ப்புகளுண்டு. இறுதியாக, பிறர் மீதான கருணை உணர்வு குறைபாடு (Lack of empathy ) எனும் முதன்மைக் காரணியை வைத்தே ஒருவரை நார்சீசிஸ்ட் என எண்ணலாம். அதனை, முறையான உளவியல் பரிசோதனை (Psycho -disagnositic ) மூலமும் மட்டுமே உறுதி செய்ய முடியும்.

இந்த நார்சீசிஸ்ட்டுகளைத்தான் “நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத்திறனும் இன்றி வஞ்சனைகள் செய்வாரடி கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி என்றும்,” “பிறர் வாடப் பல செயல்கள் செய்து… ” என்றும் மகாகவி எச்சரித்துச் சொல்லியிருப்பார் என்றே தோன்றுகிறது. மனித மூளையும், உடலும் சோர்ந்து போகச் செய்யும் ஆழமான பாதிப்பைத் தரும் நார்சீசத்தைக் குறித்து தெளிவு பெறுவோம். நுட்பமான மதியூகத்தோடு பிரித்தறிந்து, பயனுள்ள செயல்களை (Progressive) நோக்கி நகர்வோம்.

The post அகமெனும் அட்சயப் பாத்திரம் appeared first on Dinakaran.

Tags : Agamen ,Atsai ,Saffron ,Yasree Kannan ,Ahamenum ,Atsayap Bhatram ,
× RELATED அதிசுத்தம் சோறு போடுமா? ஓசிடி Obessessive Compulsive disorder