×

குடி குடியை கெடுக்கும்!

நன்றி குங்குமம் தோழி

“குடி குடியை கெடுக்கும்” என்கிற வரி அனைவருக்கும் பரிச்சயமான ஒன்று. ஆனால், அந்த வரியை படிக்கும் நமக்கு அது எந்தவித மாற்றத்தையும் சமூகத்தில் நிகழ்த்தவில்லை என்பதுதான் மிகவும் வருத்தத்திற்குரியது.குடி போதை மறுவாழ்வு மையத்தின் உள்ளே சென்று என்ன மாதிரியான சிகிச்சை முறைகள் அங்கே வழங்கப்படுகிறது? அந்த சிகிச்சை முறைகள் குடி
நோயாளிகளுக்கு என்ன மாதிரியான நன்மைகளை அளிக்கிறது? என்ன மாதிரியான ஆபத்துகளை குடி நோயாளிகளிடம் இது உருவாக்குகிறது? இவற்றைப் பற்றியெல்லாம் தெரியுமா எனக் கேட்டால், பலரது பதில் இங்கே தெரியாது என்பதே.

முதியவர்கள் பலர் ஆங்காங்கே பிச்சை எடுப்பதையும், நிராதரவாக சாலைகளிலும், கோயில் வளாகங்களில் விடப்பட்டு, பிச்சைக்காரர்களாக மாறியிருப்பதையும் பார்த்து அது குறித்து விவாதிக்கின்ற, கேள்விகளை எழுப்புகின்ற நாம்… குடி நோய்க்கு அடிமையானவர்கள், தங்களின் ரத்த சொந்தங்களால் கைவிடப்பட்டவர்களாய், போதை மறுவாழ்வு இல்லங்கள் இவர்களின் புகலிடமாக மாறி வருவதையும் அறிந்து வைத்திருக்கிறோமா?

பெரும்பான்மையான குடும்பங்களில் மதுப்பழக்கத்துக்கு ஒருவராவது ஆளாகி அந்தக் குடும்பத்திற்கு உபத்திரம் கொடுக்கிற நபராய் மாறிப்போய் இருப்பார்கள். அடிக்கடி நம்மைத் தொந்தரவு செய்யும் நபர்களிடம் இருந்து ஓடி, ஒளிந்து, தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள இன்றைய மக்கள் சில இடங்களை நாடுகின்றனர். இன்றைய கால சூழலில் எவ்வளவு பணம் செலவானாலும், அம்மாதிரியான இடங்களுக்கு கொண்டு சேர்க்கிற மனநிலைக்கு குடும்ப உறுப்பினர்கள் வந்துவிட்டார்கள் என்று சொல்லலாம். ஏனெனில் இந்த மாதிரியான குடும்பங்களில் உள்ளவர்களின் வாழ்க்கை எப்போதும் பதட்டத்துடனும், பரபரப்புடனுமே எப்போதும் நகர்கிறது.

இந்த தாக்கத்தில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்ளவே சிறிது வாய்ப்புக் கிடைத்தாலும், பாதுகாப்பு என்று உணரும் இடங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கி விடுகின்றனர். குடிப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள், போதை மறுவாழ்வு மையங்களில் தனக்கான வேலையை நிம்மதியாகச் செய்யவும், தனக்குப் பிடித்த விஷயங்களில் தங்களை ஈடுபடுத்தவும் செய்யும் அதே வேளையில், குடும்ப உறவுகளை விட்டு ஒதுங்கி நிற்கவும் பழகுகின்றனர். இந்த சிறு இடைவெளி சில நேரங்களில் இருதரப்பிற்கும் நன்றாக இருந்தாலும், சில நேரங்களில் கடுமையான மன உளைச்சலையும் இது உருவாக்கிவிடுகின்றது.

குடி மற்றும் போதைப் பழக்கத்தில் இருந்து குடிமகன்களை மீட்டெடுத்து, அவர்களை ஆரோக்கியமான மனிதராக மாற்றி விடுவோம் என தற்போது பெருகி வரும் போதை ஒழிப்பு மறுவாழ்வு மையங்களை நம்பிக்கைக்குரிய ஒன்றாக நாம் பார்த்தாலும், நம்முடைய இந்த நம்பிக்கை சரியான நபர்களின் கைகளில் இருக்கிறதா? போதை மறுவாழ்வு மையங்கள் சரியான பாதையில் செல்கின்றதா என்றும் கவனிக்க வேண்டிய சூழலும் தற்போது இருக்கின்றது.

ஒவ்வொரு குடும்பமும், தங்களின் தன்மானம், மரியாதை, கவுரவம் போன்ற இத்தியாதி… இத்தியாதிகளை… தங்கள் உயிருக்கு மேலானதாக, வாழ்நாள் சொத்தாகவே கருதுவார்கள். அப்படிப்பட்ட கலாச்சாரத்தில் ஊறிய குடும்பங்களில், குடிமகன்கள் தங்கள் வீட்டுப் பெரியவர்களிடமும், பெண்களிடமும், தங்கள் பிள்ளைகளிடமும் மரியாதை இன்றிப் பேசுவதை, தங்கள் உறவினர்களும், நண்பர்களும், அக்கம் பக்கத்தினரும் பார்க்கும் போது கூனிக்குறுகி நிற்கின்றனர்.

இவை ஓரிரு நாட்களுக்கான கதையாக இல்லாமல், வருடக் கணக்கில் தொடரும் போது, இந்தக் குடிமகன்களால், குறிப்பிட்ட குடும்பத்திற்கான அடிப்படை மரியாதை கிடைக்காமலே போய்விடுகிறது. மேலும் குடிமகன்கள் வேலைக்கே போகாமலும், தங்கள் உழைப்பை குடும்பத்திற்கான வருமானமாகச் செலுத்தாமலும், பொறுப்பற்ற நபராக வீட்டில் உட்கார்ந்து, என் நேரமும் குடிபோதையில் இருப்பதை பார்க்கும் போது, ஒவ்வொரு குடும்பமும் மனதளவில் நொறுங்கித்தான் போய்விடுகிறது.

இதை எல்லாம் கருத்தில்கொண்டே, தங்கள் வீட்டு ஆணை எப்படியாவது குணமாக்குங்கள் என மறுவாழ்வு மையம் நோக்கி குடும்ப உறவுகளும், நண்பர்களும் வருகிறார்கள். போதை மறுவாழ்வு மையங்களில் மருந்துடன், குடிக்கு அடிமையானவர்களின் மனநல ஆரோக்கியத்திற்கும் தனிப்பட்ட முறையில் கவுன்சிலிங் வழங்கப்படுவதுடன், குறிப்பிட்ட நாட்கள் அல்லது மாதங்கள் அங்கேயே தங்கி குடி நோய்க்கான சிகிச்சையை முடித்துக்கொண்டு அவர்கள் வெளியே வரும்போது, இனி நாங்கள் குடிப்பழக்கத்திற்கு ஆளாக மாட்டோம் என்கிற உறுதி மொழியோடுதான் வெளியே வருவார்கள்.

ஆனால் சிலர் மீண்டும் குடிக்கும், போதைக்கும் அடிமையாவார்கள். இந்த சூழலில்தான் சாதாரண குடும்ப நபரும் குடிமகன்களை கொலை செய்யும் கொலைகாரர்களாக மாறி நிற்கிறார்கள். சில நேரங்களில், சிகிச்சை முடிந்து மறுபடியும் மதுப்பழக்கத்துக்கும், போதைக்கும் அடிமையாகும் ஆண்களை அக்குடும்பத்தினர் என்ன செய்வதென்று தெரியாமலே, போதை மறுவாழ்வு மையங்களில் போலி முகவரிகளைக் கொடுத்துவிட்டு, மொத்தக் குடும்பமும் ஊரையே காலி செய்து விடுகின்றனர்.

அளவுக்கு அதிகமாக குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களில் சிலர், எந்த வேலையை பார்க்கவும் தெம்பற்றவர்களாக, சிந்திக்கவும் தெம்பின்றி இருப்பார்கள். இவர்களின் வயது பெரும்பாலும் நாற்பதுகளில் இருக்கும். இவர்கள் மறுவாழ்வு மையங்களில் பாத்திரங்களைச் சுத்தம் செய்யவும், சுற்றுப்புறத்தை தூய்மையாக்கவும், ஊதியம் இல்லாத வேலையாட்களாக, போதை மறுவாழ்வு மையங்களில் தங்க வைக்கப்படுகிறார்கள்.

மனநல ஆலோசகர்: காயத்ரி மஹதி

The post குடி குடியை கெடுக்கும்! appeared first on Dinakaran.

Tags : Kungumam ,Dinakaran ,
× RELATED செவ்விது செவ்விது பெண்மை!