×

அதிசுத்தம் சோறு போடுமா? ஓசிடி Obessessive Compulsive disorder

நன்றி குங்குமம் டாக்டர்

மனநல ஆலோசகர் ஜெயஸ்ரீ கண்ணன்

அகமெனும் அட்சயப் பாத்திரம்

‘‘சுத்தம் சோறு போடும்’’.‘‘சுத்தம் சுகாதாரம் தரும்” என்று சுத்தத்தைக் குறித்துதான் எத்தனை வலியுறுத்தல்கள்? பேச்சு வழக்கில், பழமொழிகளில்” கூழானாலும் குளித்துக்குடி’’ ,‘‘கந்தையானாலும் கசக்கிக்கட்டு’’எனக்கேட்டு வளர்ந்த தலைமுறை நாம். சுத்தம் குறித்து ஒருவர் அதிக கவனம் எடுத்துக் கொள்வதெல்லாம்கூட ஒரு நோய்மையா? என்று ஆராயும் நிலைக்கு வந்துவிட்டோம். என்ன செய்வது? எதுவுமே அளவுக்கு மிஞ்சும்போது நஞ்சாகும் என்பதும் ஏற்றுக்கொள்ள வேண்டிய இயற்கை நியதிதானே.

நம்முடைய தமிழ் மரபில் சுத்தம் என்பது அளவுக்கு உட்பட்டதாக இருக்கிறது. ‘‘ரொம்ப தொடைச்சி சுத்தம் பண்ணினா வீட்டு லட்சுமி போய்விடும்” என்பார்கள் பாட்டிகள். வீட்டைக் காலி செய்து குடிமாறிப் போகும்பொழுது எல்லாவற்றையும் நேர்த்தியாக எடுத்துப் பளிச்சென விட்டுபோகாமல் பழைய சாமிப்படம், துடைப்பம், இரும்புப் பொருள் இப்படி ஒன்றிரண்டை வைத்துவிட்டுதான் செல்ல வேண்டும் என்றும் சொல்வார்கள்.மொத்தமாகத் துடைத்து வழித்தல் என்பது வாழும் வீட்டின் உயிர்ப்பை, பொருள் செல்வத்தைக் கொண்டுபோய் விடுமென ஒரு நம்பிக்கை. ‘‘இது என்ன எப்போதும் கண்ணைப் பறிக்கும்படி ஈர்க்க கண்காட்சியா? விற்பனைக் கூடமா?” கலைந்து இருந்தாத்தான் வீடு” என ஒரு சாரர் அதிசுத்தக்காரர்களிடம் சிக்கிப் புலம்புவதையும் கேட்கிறோம்.

சுவற்றில் கிறுக்கும் குழந்தையை அசுத்தம் பண்ணுகிறாய் என அடிப்பவர்களும், அது புத்தாக்கத்தின் தூண்டல் (Creativity Inducement ) என ஊக்கம் கொடுப்பவர்களும் இங்கே இருக்கிறார்கள். சுத்தம் என்பதில் எங்கேதான் பிரச்னை? எதுதான் வரையறை?உளவியலில்,அமெரிக்கன் சைக்கியாட்ரிக் அசோசியேஷன் (DSM 4) வகுத்துள்ள மனநலக் குறைபாடுகளின் பட்டியலில் Obsessive Compulsion Disorder என்பது மூன்றாவது பிரிவு C -யில் இடம் பெறுகிறது. சுருக்கமாக OCD என உலகெங்கும் எல்லோராலும் பரவலாக இது பேசப்பட்டு வருவதை அறிவோம். OCD என்பது தொடர்ந்து ஒரே விதமான எண்ணங்கள், காட்சிகள் அல்லது படங்கள் மனதில் ஓடுவதும், ஒரு செயலை உடனடியாகச் செய்தே ஆகவேண்டும் எனவொரு கட்டாயப் பெருவிழைவும் ஏற்படுவதே ஆகும். இது மிக மென்மையான வாழ்வியல் சிக்கலே அன்றி கவலைக்குரிய நோய்மை என்று நிச்சயம் சொல்ல முடியாது.

ஆனால், நடைமுறையில் இத்தகு தொடர் உந்துதலான செயல்பாடுகள் கட்டுப்பாட்டினை இழந்து, உடனிருப்பவரகள் மீதும் திணிக்கும் ஆதிக்கமாகவும் நீளும்போது உறவுச் சிக்கலாகி விடுகிறது. குடும்பத்தில் ஒருவர் தன் மனதில் வீட்டின் ஒழுங்கு, தூய்மை, மதச்சடங்கு, காதல், காமம் போன்றவற்றைச் சார்ந்து சிலவற்றை இப்படி, இப்போது செய்தாக வேண்டுமென கண்டிப்புடன் இருப்பார்கள். அதுவே தனக்கும் தன் குடும்பத்திற்கும் நன்மை தரும் என உறுதியாக நம்புவார்கள். அது நடைபெறாவிட்டால் பதட்டமும், அதிகக் கோபமும் கொண்டு நிலை குலைந்து விடுவார்கள். இத்தன்மை கட்டுக்குள் வைக்கப்படவில்லை எனில் மூர்க்கமான எதிர்ப்புணர்வு, கைநடுக்கம் என பாதிப்புகளைக் கொண்டுவரும்.

மீண்டும் மீண்டும் கைகளைக் கழுவுதல்,கிருமித் தொற்று ஏற்படுமோ என அஞ்சிக் கொண்டே இருப்பது, மீண்டும் மீண்டும் எண்ணிக்கை செய்வது, செய்த செயல்களை சந்தேகம்கொண்டு மறுபடி சரிபார்த்துக் கொண்டேயிருப்பது, தன்னை அறியாமல் தனக்குள் ஒரே விதமான சொற்களை முணுமுணுத்துக் கொண்டே இருப்பது, தீவிரமாக மந்திரம்/ ப்ரார்த்தனை போன்றவற்றில் ஈடுபடுவது, இறப்பு அல்லது எதிர்மறை விளைவுகள் குறித்து சிந்தித்துக் கொண்டே இருப்பது போன்றவற்றை OCD- யின் அறிகுறிகளாகக் குறிப்பிடுகிறோம். இவை வழக்கமான வேலைகள் தடைபடும்வரை ஈடுபடுவது எனக் கட்டுப்பாட்டை மீறும்போது உரிய உளவியல் ஆலோசனை அவசியமாகிறது.

ஒரு நல்ல தம்பதி.. கணவன் நல்ல உழைப்பாளி. மென்மையான சுபாவம். ஆனால் அதிசுத்தவிரும்பி. வெள்ளை உடைகளையே அதிகம் விரும்பியும் அணிவார். மனைவி துவைத்த ஆடைகளை நாற்றம் அடிக்கிறது, சரியாகத் துவைக்கவில்லை என்று மீண்டும் துவைக்கச் சொல்லி கூடையில் போட்டு வந்தார். மனைவியும் நல்ல குணம் படைத்த பொறுமைசாலிதான். திருமணம் ஆன புதிதில் ‘‘அடடே அவருக்கு எல்லாம் perfect ஆக இருக்க வேண்டும் ஒரு கறை இருந்தால்கூடப் பிடிக்காது” என்று ஆசையோடு இன்னும் தன்னை நேர்த்தியாக்கிக் கொண்டார். அவரின் அதிசுத்தத்தின் சான்றிதழைப் பெறும்நோக்கில் தொடர்ந்து வேலை செய்து வந்தார்.

பிரச்னையோ தொடர்ந்தது. வெள்ளை வேட்டிகள், வெள்ளை சட்டைகள், வெள்ளை ஜீன்ஸ்கள், வெள்ளைத் தலையணை உறைகள், மெத்தை விரிப்புகள், துண்டுகள் என தினமும் மலைமலையாய் விழ நொந்து போனார். எவ்வளவு செய்தாலும் சரி இல்லை. கையில் துவைக்க வேண்டும், வாசனைத் திரவியம் இன்னும் சேர்க்க வேண்டும் எனத் திருப்தி இல்லாமல் குறைகூறல்களே வந்தன. ஒருகட்டத்தில் மனைவி இது சரியில்லை எனச் சுட்டிக்காட்டி எதிர்த்துப் பேச வாக்குவாதங்கள் உருவாகின.

ஆலோசனை பெறும் காலகட்டத்தில் அந்தப் பெண் ‘‘நான் உடம்பு சரியில்லைனு ஒருநாள் இரவு பாத்திரம் விளக்காமல் படுத்துட்டேன்ங்க அன்னிக்கு அதை புகைப்படம் எடுத்து அவங்க நண்பர்கள் உறவினர்களுக்கு காட்டி, இதுதான் இவ குடும்ப லட்சணம்னு சொல்லிருக்காரு.. அன்னிக்குதான் இவர் சுயரூபம் தெரிஞ்சது எவ்வளவு அவமானம்… தெரியுமா.. ஒவ்வொரு குடும்ப விழாக்களின் போதும் என் காதுபடவே வீடு கூட்ட மாட்டாளாமா.. பாத்திரம் நாத்தமடிக்குமாம்.

துவைக்கக்கூட தெரியாதாமா.. என்று அவர்கள் பேசக்கேட்ட அவமானம் வலி உங்களுக்கு தெரியுமா” என்று கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்துவிட்டார். ஆம் ஒரு கட்டத்தில் இது OCD ஆனால் அவர் ஒப்புக்கொள்ள மாட்டார் என அறிந்து விவாகரத்து பெற்றுச் சென்று விட்டார். அந்தக்கணவர் தற்போது தனியாக தன் தூயவெண்மைக் கனவுகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையைப் பார்த்தபோது, அதிசுத்தம் எனும் OCD தீவிரமானால் நிச்சயம் சோறுபோடாது போலிருக்கிறதே என்று தோன்றியது.

நன்றாகப் படிக்கக்கூடிய ஒரு கல்லூரிப் பெண்ணை அறிவேன். அவள் அம்மா கண்டிப்பான ஆசிரியை. தந்தையும் நல்ல வேலையில் இருப்பவர்.எளிமையான நடுத்தரக் குடும்பம். மூவரும் காலை 9 மணிக்குள் வீட்டில் இருந்து கிளம்ப வேண்டும். வீட்டைப் பெருக்கித் துடைப்பது அந்தப் பெண்ணின் பொறுப்பு என பெற்றோர் கொடுத்திருந்தனர். அதனை ஆர்வமாகச் செய்து வந்த அந்த இளம்பெண் நாளாக நாளாக அதில் அதிக நேரம் செலவழித்தார்.

தாயும் தன் மகளின் வீட்டுப்பொறுப்பை எண்ணி அகம் மகிழந்து எல்லோரிடமும் பெருமையாகப் பேசி வந்தார் ஒருநாள் செமஸ்டர் தேர்வு. வீட்டை விட்டுக் கிளம்பும்போது தந்தை காப்பியைக் கொட்டிவிட்டார். தாய் சமைத்ததில் ஒன்றிரண்டு மிஞ்சிய வெங்காயச் சருகுகள் கூடத்தில் பறக்கின்றன.அதைப் பார்த்தவுடன் ‘‘இதோ பெருக்கி சுத்தம் செய்துவிட்டு வருகிறேன் நீங்கள் போங்க” என்று சொல்லிவிட்டாள். அரை மணி நேரம் எல்லாவற்றையும் மீண்டும் மீண்டும் துடைத்து சுத்தம் செய்து வெகுதாமதமாக தேர்வுக்குச் சென்று தேர்வில் தோல்வி அடைந்துவிட்டார். ஒரு தோழியின் வழியாக இதைக் கேட்டபோது, எனக்கு மிகவும் மனவருத்தம் ஏற்பட்டது. அவளுக்கு OCD என்றே அவர்களுக்குத் தெரியவில்லை. தற்போது நிலைமை கேள்விக்குறியான பிறகு, சிகிச்சை எடுத்து வருகிறார்.

பெற்றோர் தன்னுடைய அறைக்கு வந்தால் தன்னுடைய கட்டிலில் கைகளையோ, கால்களையோ தவறியும் வைத்துவிடக்கூடாது என்றும் தன்னைக் கட்டியணைக்க வேண்டுமென்றால் ஒவ்வொரு முறையும் கைகழுவி வரவேண்டும் என்றும் கட்டளை இடும் பதின்பருவப் பெண்ணைக் குறித்து தாய் கலங்கிய ஒரு உளவியல் சிக்கலை சமீபத்தில் கண்டேன்.

அதிசுத்தமெனும் கட்டாயப்பெருவிழைவு உந்துதல் உள்ளவர்கள் நேரம், காலம்,தற்போதைய சூழல் என்றெல்லாம் யோசிக்காமல் இப்படித்தான் தொடர்ந்து சுத்தம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். செய்ய வேண்டிய மற்ற முக்கியமான செயல்கள் தாமதம் ஆகும். தள்ளிப் போகும். பயணங்களில் நேரமின்மையின் பரபரப்புத் தொற்றி கொள்ளும். இவ்வாறு OCD என்பது..’பிறகு .வந்து செய்து கொள்ளலாமே, இது உடனே செய்தாகத்தான் வேண்டுமா’ என்று சிந்திக்கும் ஆற்றலை மெல்ல மெல்ல இழக்கச் செய்து விடும்.முதன்மையான பணிகளின் வரிசைக் கட்டமைப்பைச் (Priorirty Ordering ) சிதைத்து, அதிசுத்தமாக இருக்க வேண்டுமென்பதே எப்போதும் முதன்மை இலக்கு என்ற நிர்பந்த வட்டத்தில் சிக்கிவிடுவார்கள்.

பொருளாதார வசதி படைத்தவர்களிடமும், அதி பாதுகாப்புடன் (Over Protective ) கவனமாக வளர்க்கப்படும் குழந்தைகளிடத்தும் OCD- யின் தாக்கம் ஒப்பீட்டளவில் அதிகம் உள்ளதாக உளவியல் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. புத்திக்கூர்மை நிறைந்தவர்கள், தனிமை விரும்பிகள், புத்தாக்கம் கொண்ட கலைஞர்களும் கூட OCD பாதிப்புகளைக் கொண்டிருக்க வாய்ப்பு அதிகம். எனவே இது ஆபத்து நிறைந்த உளவியல் நோய்மை அல்ல. சமநிலையில் கவனித்து கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டிய அன்றாடக் குறைபாடேயாகும்.

தன்னைப் போலவே பிறரும் அதிசுத்த விரும்பிகளாக தொடர்ந்து அவர்கள் விரும்பும் செயல்களில் ஈடுபட வேண்டுமென எதிர்பார்ப்புகள் எழும்போது பிரச்சனைகள் வலுவாகின்றன. அப்போது ‘‘சுத்தமாக இருக்கச் சொல்வது ஒரு தவறா நல்லதுக்குதானே சொல்கிறேன்” என்று ஒரு பக்கம்.. ‘‘நாங்கல்லாம் சுத்தம் இல்லையா ரொம்ப ஓவர்”என்று எதிர்வினைகள் ஒரு பக்கம் என்று இழுக்க குடும்ப அமைதியே குலையும். பொதுவாக, ஒருவர் ஒன்றை அதிகமாக வலியுறுத்தியோ, அடுத்தவர் மேல் கட்டுப்பாடுகளை விதித்தோ செய்ய நிர்பந்திக்கும்போது இன்னொருவர் தன்னைத் தாழ்த்துகிறாரே என்று எண்ணுவார்.அதெல்லாம் செய்ய முடியாது என வேண்டுமென்றே புறக்கணிக்க ஆரம்பித்து விடுவார்.

அவர் இயல்புக்கு மாறாகக் கேலி செய்கிறார், அதிகம் கோபப்படுகிறார்.. எனவே நான் இதைச் செய்ய மாட்டேன் என்று ஒருவரும், முறையாகச் சொன்னால் செய்வதில்லை அதனால் கோபப்படுகிறேன் என்று மற்றொருவரும் மாறி மாறி யார் பிழை என்று இனம்காண முடியாத அளவுக்கு குழம்பிப்போய் நிம்மதி இழந்து போவது பல வீடுகளில் இன்று நடக்கிறது. இவ்வாறு வீட்டின் தூய்மை சார்ந்த பணிகளை எப்போது / எவ்வளவு செய்வது என்பதில் எழும் முரண்பாடுகள் உறவுகளில் விரிசலை ஏற்படுத்தி விடுகின்றன. பேச்சிலும், செயலிலும் தீவிரம் வெளிப்படும்போது இது கவனிக்கத்தக்க குறைபாடென உணர வேண்டும்.

மீளவே முடியாமல் ஒரே விதமான சிந்தனைச் சுழலில் சிக்கி, அதி ஒழுங்கு விழைவின் கட்டுப்பாட்டுப் பிடியில் இருப்பவர்களை (OCD ) பல திரைப்படங்கள் காட்சிப்படுத்தியிருக்கின்றன. கேளடி கண்மணி படத்தில் அஞ்சு அரவிந்த் ஏற்றிருந்த கதாபாத்திரம் தன் பொட்டு அழிவதுபோல மீண்டும் மீண்டும் எதிர்மறைக் காட்சிமனதிற்குள் வரக்கண்டு தவிக்கும்.

ஒரு ஒழுங்குமுறையோடு சுற்றி எல்லாமே 100% Perfection ஆக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்புகளைத் தாங்கிய தந்தை கதாபாத்திரத்தை ‘சந்தோஷ் சுப்பிரமணியன்’ திரைப்படத்தில் காணலாம். தான் குடும்பத்தின் மீது வைத்திருக்கும் அக்கறை, பொறுப்பு என்ற பெயரில் எல்லோரையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்து அவர்களின் உணர்வுகள், சிறுசிறு இயல்பான ஆசைகள் நசுக்கப்படுவதை உணராமல் இருப்பார்.

அன்றாடச் செயல்கள் மட்டுமன்றி ஒரு குறிப்பிட்ட நபர் குறித்த தொடர் சிந்தனைவயப்படுதலும் Obsession என்று சொல்லப்படுகிறது. காதலில் இருக்கும்போது இணையின் நினைவு 24 மணி நேரமும் உள்ளுக்குள் இருக்கும் என்பது உலகம் அறிந்த ஒன்றே. ஆனால் அதுவும் Thinking என்ற நிலையில் இருந்து தீவிரமாகி, அதில் மூழ்குதல் என்ற நிலையை எட்டும்போது dangerous Obsession என்று சொல்லப்படுகிறது. அதாவது வேறு எந்த வேலையையும் செய்யாமல் மனதை திசை திருப்ப இயலாத அளவுக்கு காதல் நினைவில் சுயம் இழந்து விடுவது.

நம் வாழ்வில் எல்லோருமே ஒரு முறையாவது இத்தகைய அபாயகரமான Obsession நிலையில் சிக்கித் தவித்திருப்போம். உதாரணத்திற்கு, தன்னுடைய காதலி தன்னை விரும்பாவிட்டாலும் தன்னை விட்டு நீங்கவே கூடாது அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன் ”என்பதாகக் ‘காதல் கொண்டேன்’ திரைப் படத்தில் தனுஷ் கதாபாத்திரம் காட்டப்பட்டிருக்கும். அதிசுத்த விழைவின் தன்மையாக, ‘பிகிலு’ திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் வந்த ஜாக்கிஷெராஃப் அடிக்கடிக் கைகளை கழுவிக்கொண்டே இருப்பதைப் பார்த்திருக்கிறோம். இவற்றின்மூலம் OCD பற்றி எளிமையாகப் புரிந்துகொள்ளலாம்.

The post அதிசுத்தம் சோறு போடுமா? ஓசிடி Obessessive Compulsive disorder appeared first on Dinakaran.

Tags : Saffron ,Jayasree Kannan Ahamenum Atsai ,Dinakaran ,
× RELATED சரும பராமரிப்பில் சீரத்தின் பங்கு!