×

செவ்விது செவ்விது பெண்மை!

நன்றி குங்குமம் டாக்டர்

பிறப்பிலிருந்து பேதை வரை சமூகவியல் பார்வை

மனநல மருத்துவர் மா . உஷா நந்தினி

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கி இவ் வையம் தழைக்குமாம்
பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்
போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்;

என்று பாரதியார் ஆயிரத்தி தொள்ளாயிரத்தி பன்னிரண்டுகளிலே எழுதிவிட்டார். ஆனால் இன்றும் நமது நாட்டில் பெண் சிசுக்கொலையை தவிர்ப்பதற்கான சட்டங்கள் இயக்க வேண்டிய
நிலையில் உள்ளோம்.

இது வரை இந்தத் தொடரில் முதல் பாகமாக நாம் எடுத்துள்ள பேதை பருவத்து பெண்ணின் உடல்நலவியல், உளவியல் மற்றும் மூளையின் வளர்ச்சி என்று நாம் பார்த்து வந்த கட்டுரையை கவனித்துப் பார்த்தால், பெரிதாக பெண்களிலும் ஆண்களிலும் வித்யாசம் இல்லை என்பதை தான் எடுத்துரைத்திருப்போம். சிறு சிறு வித்யாசங்கள் இருந்தாலும் பெண் பிள்ளைகளும் ஆண் பிள்ளைகளும் இந்த வயதில் ஒரே மாதிரி தான் இருக்கிறார்கள். (வாசகர்கள் சில பேர் யோசித்திருப்பார்கள் முன்னுரையில் பெண்களை பற்றி எழுதும் தொடர் என்று கூறிவிட்டு பொதுவாக குழந்தையை பற்றி எழுதிக்கொண்டிருக்கிறாரே என்று). இந்த கட்டுரையில் நம்மால் அந்த வித்யாசத்தை பெரிதாக உணர முடியும். ஏன் என்றால் இது சமூகவியல் பார்வை, இந்த சமூகம் பெண் பிள்ளைகள் பிறப்பதற்கே வழி இல்லாமல் செய்து விடுகிறது.

ஆயிரம் ஆண்களுக்கு எத்தனை பெண்கள் இருக்கின்றனர் என்பதை பாலின விகிதம் என குறிப்பிடுகிறார்கள். இந்தியாவின் பாலின விகிதம் பல வருடங்களாக குறைவாகவே இருக்கிறது. ஏன் என்றால் பெண் குழந்தைகள் பிறந்தால் வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு (மது அருந்துவதில் கூட இவ்வளவு எச்சரிக்கை இல்லை) என்று எண்ணி பெண் பிள்ளை பிறந்தால் தானே பிரச்னை என்று கருவிலேயே களைத்து விடுவது. அப்படி தப்பி பிறந்து விட்டால் பிறந்த உடனே தரமான கள்ளி பாலை பரிசாக கொடுத்து விடுவது.

இதையெல்லாம் தடுக்க வேறு வழி தெரியாமல் நமது அரசாங்கம் இதற்கு தடையாக நிறைய சட்டங்களை கொண்டு வந்தது. கருவிலிருக்கும் சிசுவின் பாலினத்தை தெரிவிக்கக் கூடாது என்பது மிக கண்டிப்பாக கடைபிடிக்க படுகிற ஒரு சட்டம். இதனால் சமீப காலங்களில் எடுத்த கணக்கெடுப்பில் பாலின விகிதம் சற்று முன்னேறியுள்ளது. எவ்வளவு சட்டங்கள் போட்டாலும் நமது மக்கள் அதில் ஓட்டைகளை கண்டுபிடிப்பதில் வல்லுநர்கள் அல்லவே? இங்கு தானே சிசுவின் பாலினம் சொல்ல மாட்டார்கள். இதற்காக நான் காசு செலவழித்து வெளிநாட்டுக்கு சென்று சிசுவின் பாலினத்தை தெரிந்து கொள்வேன் (சமீபமாக ஒரு யூடியூப் பிரபலம் கூட இதை பெருமையாக செய்து மாட்டிக்கொண்டார்).

இவ்வளவு செலவழித்து அந்த சிசு பெண்ணாக இருக்கிறதா என்று கண்டுபிடித்து அதை கொல்வதற்கு பதிலாக, அந்தப் பணத்தை Mutual Fund இல் போட்டு வைத்தால் அந்தப் பெண் பிள்ளையை வளர்த்து படிக்க வைக்க உதவியாக இருந்திருக்கும் (திருமணம் செய்து வைக்க என்று வேண்டுமென்று தான் எழுதவில்லை). இன்னும் வித்யாசமான ஓட்டைகள் எல்லாம் உண்டு, ஸ்கேன் சென்டரில் வேலை செய்பவர்களுக்கு லஞ்சம் கொடுத்து Code word இல் தெரிந்து கொள்வது இன்னும் பிரபலமாக இருக்கும் பழக்கம்.

ஆண் பிள்ளை என்றால் கொக்காகோலா என்றும் பெண் பிள்ளை என்றால் மிராண்டா என்றும் பேசிக் கொள்வார்கள். இது செலவழித்து வெளிநாடு செல்ல முடியாத பாமர மக்களின் முயற்சி. இவ்வளவு சட்டங்கள் இருந்தும் இது இன்றும் நடக்கின்றன. சமூக ரீதியான மாற்றம் இன்னும் பெரிதாக ஏற்பட்டால் தான் நூறு வருடங்கள் முன்பு எழுதிய பாரதியின் ஆத்மா சாடன்ஹி அடையும்.பெண் சிசுக்கள் பிறப்பதில் இருந்த சமூக சிக்கல்களை தாண்டி பிறந்த பின் உள்ளாகும் சமூகவியலையும் பார்க்கலாம். பெரிதாக போகும் என்பதால் முதல் சில வருடங்களோடு இந்தக் கட்டுரையில் நிறுத்தி விடுவோம்.

பெண் பிள்ளைகள் பாலியல் ரீதியான பாகுபாடுகளுக்குள் உள்ளாகுகின்றன. இது எல்லோரும் அறிந்த உண்மை. சுகாதாரம், போஷாக்கு மற்றும் கல்வியில் புறக்கணிப்பிற்குள்ளாகும் பெண் குழந்தைகளுக்கு, ஆண் குழந்தைகளுடன் ஒப்பிடுகையில் குறைந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பல குடும்பங்களில், தடுப்பூசி செலுத்துதல், மருத்துவ பராமரிப்பு மற்றும் தரமான கல்வி போன்றவை ஆண் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றன. இதனால் பெண் குழந்தைகளின் உடல்நலன் மற்றும் அறிவாற்றல் வளர்ச்சிக்கு தடை ஏற்படுகிறது. இவ்வாறு வாழ்வின் ஆரம்ப காலத்திலேயே ஏற்படும் சமநிலையின்மை, அவர்கள் எதிர்கால வாழ்வைச் சிக்கலாக்குகிறது மற்றும் சமூகத்தில் நிலவும் பாலின சமநிலையற்ற சூழ்நிலைக்கு வழிவகுக்கிறது. இந்தப் புறக்கணிப்பு பெண்களின் மேம்பாட்டுக்கு பெரிய தடையாக மாறுகிறது.

பாலின அடிப்படையிலான பேதத்தை குறைக்க, பெற்றோர், சமூகம் மற்றும் அரசாங்கம் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம். பெற்றோர்கள் இருபாலருக்கும் சமமான மருத்துவ பராமரிப்பு, போஷாக்கு மற்றும் கல்வி வழங்க வேண்டும்; பெண் குழந்தைகளின் வளர்ச்சியை ஊக்குவித்து, பாலின கட்டமைப்புகளுக்குப் புறம்பான வளர்ப்பு முறைகளை பின்பற்ற வேண்டும். சமூகம் பெண் குழந்தைகளின் மதிப்பை உயர்த்தும் வகையில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தி, வெற்றிகரமான பெண்களின் கதைகளை முன்னிறுத்தி, பாசிடிவ் ரோல் மாடல்களை உருவாக்க வேண்டும். பெண்களை புறக்கணிக்கும் பழக்கங்களை எதிர்த்து, குடும்பங்களைப் பழக்கப்படுத்தவும் மற்றும் பெண் குழந்தைகளின் கல்விக்கு ஊக்கங்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசாங்கம், பாலினத்தை அடிப்படையாகக் கொண்ட கருக்கலைப்பை தடுக்க சட்டங்களை கடுமையாக அமல்படுத்தி, நாடு முழுவதும் பெண் குழந்தைகளின் அருமை மற்றும் அவசியத்தை விளக்கும் பிரச்சாரங்களை நடத்த வேண்டும். ஸுகன்யா சம்ருத்தி யோஜனா போன்ற திட்டங்களை ஊக்குவித்து, பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்கச் செய்வதுடன், பாலின சமநிலையை அடையும் விதமாக பொதுச்சட்டங்களை உருவாக்கவும் செயல்படுத்தவும் வேண்டும்.

எவ்வளவு தான் அறிவுறுத்தினாலும், எவ்வளவு சட்டங்கள் வந்தாலும் ஒரு பொது சமூகமாக நமது சிந்தனை மாறவில்லை என்றால் இது மாறாது. முன்னைக்கு இப்பொழுது எவ்வளவோ மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது என்றாலும், இது பத்தாது. என்று பெண் குழந்தையா ஆண் குழந்தையா என்ற கேள்வியை உள்நோக்கத்துடன் கேட்பதை இந்த சமூகம் தவிர்க்கிறதோ, என்று ஆண் பிள்ளை வேண்டும் என்பதற்காக மட்டும் இரண்டுக்கும் மேலாக குழந்தைகள் பெற்றுக்கொள்ளணும் என்ற எண்ணம் இல்லாமல் போகிறதோ, என்று இரு பாலினருக்கும் ஒரே மாதிரியான உடைகள், உணவுகள், உரிமைகள் கொடுக்கிறோமோ அன்றைக்கு நாம் சமூகத்தின் மாற்றத்தின் அளவு போதுமா என்று யோசிக்கலாம்.இதோடு பிறப்பிலிருந்து பேதை வரை முடிவடைகிறது. அடுத்த கட்டுரையிலிருந்து பெதும்பை பருவத்து பெண்ணைப் பற்றி பார்க்கலாம்.

The post செவ்விது செவ்விது பெண்மை! appeared first on Dinakaran.

Tags : Kungumam ,Ma. ,Usha Nandini ,Shiva… ,Dinakaran ,
× RELATED குடி குடியை கெடுக்கும்!