கவரப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக இதுவரை 200 பேரிடம் விசாரணை: வாட்ஸ்அப், இன்ஸ்டா கால் விவரமும் சேகரிப்பு

சென்னை: கவரப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக இதுவரை 200 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 10ம் தேதி பொன்னேரிக்கும் கும்மிடிப்பூண்டிக்கும் இடையே உள்ள கவரப்பேட்டை ரயில் நிலைய பகுதியில் சென்றபோது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஏசி பெட்டி உள்பட 13 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் பொன்னேரி, ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.

இதுகுறித்து கவரப்பேட்டை ஸ்டேஷன் மாஸ்டர் முனி பிரசாத் பாபு கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் கொருக்குப்பேட்டை ஆய்வாளர் சசிகலா மற்றும் போலீசார் இந்த ரயில் விபத்து குறித்து 5 பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து லைன்மேன், தொழில்நுட்ப வல்லுநர்கள், சிக்னல்மேன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தினர். மேலும், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தொழில்நுட்பம் மூலம் போன் செய்து இதுதொடர்பாக பேசியுள்ளனரா என்பது குறித்தும் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிக்னல் கோளாறு, நாசவேலை உள்ளிட்ட கோணங்களிலும் விசாரணை நடத்தப்படுகிறது.

The post கவரப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக இதுவரை 200 பேரிடம் விசாரணை: வாட்ஸ்அப், இன்ஸ்டா கால் விவரமும் சேகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: