தீபாவளி சிறப்பு தொகுப்பு விற்பனை தொடக்கம் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பட்டாசு விற்பனை ரூ.20 கோடியை தாண்டும்: அமைச்சர் பேட்டி

சென்னை: தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் சென்னை தேனாம்பேட்டை டியுசிஎஸ் காமதேனு கூட்டுறவு அங்காடியில் கூட்டுறவுத் துறையின் மூலம் நடந்து வரும் பட்டாசு விற்பனையை நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் கூட்டுறவு கொண்டாட்டம் “தீபாவளி சிறப்பு தொகுப்பு விற்பனையை தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் பெரியகருப்பன் அளித்த பேட்டி: தீபாவளியை முன்னிட்டு அதிரசம், முறுக்கு தொகுப்பு ரூ.190 அளவில் வழங்கப்படுகிறது. அதேபோல சமையலுக்கு பயன்படுத்துகின்ற பருப்பு உள்ளிட்ட 14 வகையான பொருட்களின் தொகுப்பை பிரீமியம் மளிகைப் பொருட்கள் ரூ.199 மதிப்பிலும், எலைட் மளிகைப் பொருட்கள் ரூ.299 என்ற மதிப்பில் அனைத்தும் தரமான பொருட்களாக, மிகக் குறைந்த விலையில் சிறிய குடும்பங்களும் சேமிக்கக் கூடிய அளவிற்கான தொகுப்புகளாக வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டும் கூட்டுறவு சங்கங்களின் மூலமாக 107 கூட்டுறவு நிறுவனங்கள் வாயிலாக 166 பட்டாசு மையங்களில் விற்கப்படுகிறது. இந்த ஆண்டு விற்பனை ரூ.20 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீவுத்திடலில் சுற்றுலாத் துறையின் சார்பில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான ஏலமுறைகள் விடப்படும். தற்போது கூட்டுறவுத் துறையின் கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாக இந்த பணிகளை நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதன் அடிப்படையில், 50 விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது.

அதில் 10 கடைகளை டியுசிஎஸ் மொத்த விற்பனை பண்டகச்சாலை, பூங்கா நகரக் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகச்சாலை மற்றும் வடசென்னை கூட்டுறவு சங்கங்களின் சார்பாக அமைக்கப்பட்டு விற்பனை நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன், கூடுதல் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) ப.காயத்ரி கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post தீபாவளி சிறப்பு தொகுப்பு விற்பனை தொடக்கம் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பட்டாசு விற்பனை ரூ.20 கோடியை தாண்டும்: அமைச்சர் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: