தமிழ்நாட்டின் 2ம் நகரங்களான கோவை-மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் தலைமையிலான அரசால் கடந்த 2007ம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டு, அப்போதைய துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலினால் கடந்த 2009ம் ஆண்டு ஜூன் மாதம் பணிகள் தொடங்கப்பட்ட 54.1 கி.மீ நீளத்திலான சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-Iன் இரண்டு வழித்தடங்களில் முழுமையாக பயணிகள் சேவை இயக்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தின் கீழ் நாளொன்றிற்கு சராசரியாக 3.1 லட்சத்திற்கும் மேல் மக்கள் பயணம் செய்து வருகின்றார்கள். அதன்படி, ரூ.63,246 கோடி மதிப்பீட்டிலான சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் -II க்கு ஒன்றிய அரசு பங்களிப்பினை அளிப்பதற்கான ஒப்புதலை தற்போது வழங்கியுள்ளது.

சென்னை மாநகரின் பொதுப் போக்குவரத்து கட்டமைப்பில் முதுகெலும்பாக விளங்கும் மெட்ரோ ரயில் போக்குவரத்தின் இரண்டாம் கட்டமும் செயல்பாட்டிற்கு வரும் நிலையில், மொத்தம் 172 கி.மீ மெட்ரோ ரயில் கட்டமைப்பாக இருக்கும். சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் -IIன் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப்பணிகள் குறித்து சென்னை, நந்தனத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமையகத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் மனோகர்லால் கட்டார் ஆகியோர் தலைமையில் 2ம் கட்ட மெட்ரோ பணிகள் குறித்தான ஆய்வுக்கூட்டம் நடந்தன.

இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கலைஞர் ஆட்சி காலத்தில் கடந்த 2007ம் ஆண்டு தமிழ்நாடு அரசும் – ஒன்றிய அரசும் மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்ட பணிகளை தொடங்கினோம். ரூ.22 ஆயிரத்து 150 கோடி மதிப்பீட்டில் 54.1 கிலோ மீட்டர் நீளத்திற்கு 2 வழித்தடங்களில் இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. இதனால் சென்னை மக்கள் பெரும் பயனடைந்து வருகின்றனர். தினமும் 3 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேல் பயணிகளுக்கு பலனளித்து இத்திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக ரூ.63 ஆயிரத்து 246 கோடி மதிப்பீட்டில் 118.9 கிலோ மீட்டர் நீளத்திற்கு 3 வழித்தடங்களில் 2வது கட்ட பணிகளை செயல்படுத்தி வருகிறோம். இதுவரை ரூ.19 ஆயிரத்து 229 கோடி செலவிடப்பட்டு பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. முதல் கட்டம் செயல்படுத்தப்பட்ட அதே முறையில் 2வது கட்ட பணிகளும் செயல்படுத்தப்பட வேண்டும் என்று நான் பலமுறை வலியுறுத்திய கோரிக்கையை ஏற்று, அதற்கான ஒப்புதலை அண்மையில் அளித்த பிரதமருக்கும் ஒன்றிய அரசுக்கும் நன்றியை தெரிவிக்கிறேன். இந்த 2வது கட்டத்திற்கான பணிகளை விரைந்து செயல்படுத்துமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.

இப்பணிகளை முடிக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள கால வரையறைக்குள் முடிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் எனது அரசும், அலுவலர்களும் மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல், சென்னை புறநகர் ஒட்டிய முக்கிய பகுதியான விமானநிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான வழித்தடத்திற்கும் மற்றும் தமிழ்நாட்டின் இரண்டாம் கட்ட நகரங்களான கோயம்புத்தூர் மற்றும் மதுரை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தினை செயல்படுத்துவதற்கான செயற்குறிப்புகளுக்கும் முன்னுரிமை அளிக்குமாறு ஒன்றிய அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் தலைமைச்செயலர் முருகானந்தம், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக், சிறப்பு முயற்சிகள் துறை செயலர் ஹர் சஹாய்மீனா, ஒன்றிய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை கூடுதல் செயலர் தாரா, இயக்குநர்கள் இஷா காலியா, சுபாஷ்குமார், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர்கள் அர்ச்சுனன், ராஜேஷ் சதுர்வேதி, முதன்மை நிதி அலுவலர் முரளி, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post தமிழ்நாட்டின் 2ம் நகரங்களான கோவை-மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: