மேற்கு தொடர்ச்சி மலையில் மழை குறைந்தது கவியருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி: வனத்துறை தொடர்ந்து கண்காணிப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த கவியருவியில் நீர் வரத்து குறைந்ததால், சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளித்து வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் 2வது வாரம் வரை தென்மேற்கு பருவமழை பெய்தது. அதன்பின், இந்த மாதம் துவக்கம் வரையிலும் மழை குறைவால், கவியருயில் தண்ணீர் ரம்மியமாக கொட்டியது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை தொடர்ந்து அதிகமாக இருந்தது.

இந்நிலையில் கடந்த 20ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் துவங்கிய மழையானது விடிய விடிய வெளுத்து வாங்கியது. இதனால், 21ம் தேதி அதிகாலை முதல் கவியருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கவியருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் வனத்துறையினர் வால்பாறை ரோட்டில் நின்று, சுற்றுலா பயணிகள் விதிமீறி செல்கிறார்களா? என கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை குறைவால், நேற்று முன்தினம் மாலை முதல் கவியருவியில் நீர்வரத்து குறைந்து தண்ணீர் ரம்மியமாக கொட்டியது. இதையடுத்து நேற்று முதல், கவியருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். கவியருவியில் தடை நீக்கப்பட்டதையறிந்த சுற்றுலா பயணிகள் பலரும் காலை முதல் வந்திருந்தனர். அவர்கள், ரம்மியமாக கொட்டிய தண்ணீரில் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தனர். இன்று மற்றும் நாளை விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகமாக இருக்கும் எனவும், அருவியில் தண்ணீரின் அளவு அதிகமாக இருந்தால் பாதுகாப்பு கருதி, அருவியில் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

அதுபோல், கடந்த 21ம் தேதி பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளபெருக்கால், நா.மூ.சுங்கம் வழியாக செல்லும் பாலாற்றங்கரையில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பக்தர்கள் செல்லும் வழித்தட தரைமட்ட பாலம் மூழ்கியது. இதையடுத்து அங்கு பக்தர்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டு, அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இந்நிலையில் பாலாற்றில் தண்ணீர் வரத்து குறைவால் நேற்று முதல் ஆஞ்சநேயர் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

The post மேற்கு தொடர்ச்சி மலையில் மழை குறைந்தது கவியருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி: வனத்துறை தொடர்ந்து கண்காணிப்பு appeared first on Dinakaran.

Related Stories: