ஊட்டி நகரில் கொட்டித்தீர்த்த கன மழையால் தாழ்வான பகுதியில் நீர் தேக்கம்

ஊட்டி : ஊட்டியில் நேற்று பகலில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டிய கனமழை காரணமாக சேரிங்கிராஸ் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
நீலகிரி மாவட்டத்தில் இம்மாத துவக்கத்தில் இருந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது. வங்க கடலில் உருவான புயல் காரணமாக கடந்த வாரத்தில் கனமழை கொட்டியது.

இதனால் குன்னூர், கோத்தகிரி சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. அதன் பின்னர் மழை குறைந்த நிலையில் அவ்வப்போது பகல் மற்றும் இரவு நேரங்களில் விட்டு விட்டு கனமழை கொட்டி வருகிறது.

நேற்று முன்தினம் புறநகர் பகுதிகளான முத்தோரை பாலாடா, கப்பத்தோரை உள்ளிட்ட பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக விவசாய நிலங்களுக்குள் மழைநீர் புகுந்தது.
இந்நிலையில் நேற்று காலை முதல் மேகமூட்டமான காலநிலை நிலவிய நிலையில் மதியம் 12 மணிக்கு துவங்கி 2 மணி வரை ஊட்டி நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை கொட்டியது.

2 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டிய மழையால் ஊட்டி நகரின் கமர்சியல் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஊட்டி நகரில் சேரிங்கிராஸ் பஸ் நிறுத்த பகுதி, கூட்ஷெட், ரயில் நிலைய பகுதி என தாழ்வான பகுதிகளில மழைநீர் தேங்கியது.

இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மழை காரணமாக கடும் குளிர் நிலவியது.கோத்தகிரி: கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பிற்பகல் முதல் மிதமான மழை பெய்து வந்த நிலையில் கடும் குளிர் நிலவியது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் நேற்று பிற்பகல் முதல் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒருசில இடங்களில் அவ்வப்போது கனமழையும், மிதமான மழையும் பெய்தது. இதன் காரணமாக கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளான அரவேனு,எஸ்.கைக்காட்டி, கீழ் கோத்தகிரி, சோலூர் மட்டம், கோடநாடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. தொடர்ந்து பிற்பகல் முதலே காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு மிதமான மழை பெய்த நிலையில், கடும் குளிர் நிலவியது.

மேலும் உதகை, குன்னூர், மேட்டுப்பாளையம் செல்லக்கூடிய நெடுஞ்சாலை பகுதிகளில் மேக மூட்டம் சூழ்ந்து காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பகல் நேரங்களில் வாகனங்களில் முகப்பு விளக்குகள் மற்றும் இருபுற திசை விளக்குகளை எரிய விட்டவாறு வாகனங்களை இயக்கிச்சென்றனர்.

The post ஊட்டி நகரில் கொட்டித்தீர்த்த கன மழையால் தாழ்வான பகுதியில் நீர் தேக்கம் appeared first on Dinakaran.

Related Stories: