பவானி: பவானி நகராட்சியில் மேட்டூர் ரோட்டில் புதிய பஸ் நிலையம் கடந்த 1990ம் ஆண்டு கட்டப்பட்டது. பவானி ஆற்றின் கரையோரம் நகரின் மையப்பகுதியில் இயங்கி வந்த பழைய பஸ் நிலையத்தில் பஸ்கள் நிறுத்த போதிய இடவசதி இன்மை, பொதுமக்கள், பயணிகள் வந்து செல்வதற்கான இடையூறுகள், நகர விரிவாக்கம் என பல்வேறு காரணங்களால் நகருக்கு வெளியே புதிய பஸ் நிலையம் தொடங்கப்பட்டது.
மேட்டூர் – ஈரோடு வழித்தடத்தில் மிக முக்கிய நகராகவும், கோயில் நகராகவும் பவானி விளங்கி வருகிறது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் நிலையில் பஸ் நிலைய விரிவாக்கம் அவசியமானதாக கருதப்பட்டது.இதில், நகரப்பேருந்துகள் நிற்கும் பகுதி மற்றும் தனியார், தொலைதூர பேருந்துகள் நிற்கும் பகுதி என 28 பஸ்கள் நிறுத்தி, பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் இரு பிரிவுகளாக கட்டப்பட்டது. இருபுறங்களிலும் நகராட்சிக்கு வருவாய் அதிகரிக்கும் கிடைக்கும் வகையில் 43 கடைகள் கட்டப்பட்டன. பயணிகளுக்கு தேவையான உணவு கிடைக்கும் வகையில் இரு உணவுக் கூடங்கள் அமைக்கப்பட்டன.
மேலும், கட்டணக் கழிப்பிடம், இலவச கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டது. மேலும், பஸ் நிலைய வளாகத்திற்குள் இரு சக்கர வாகன நிறுத்துமிடம், தாய்மார்கள் பாலூட்டும் அறை, அம்மா உணவகம் ஆகியன தொடங்கப்பட்டன. இங்கிருந்து, கோவை, மேட்டூர், சேலம், ஈரோடு, கோபி, சத்தி, அந்தியூர், வேளாங்கண்ணி உட்பட பல்வேறு நகரங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும், மேட்டூர் – ஈரோடு, கோவை வழித்தடத்தில் தொலைதூர பேருந்துகள் பஸ் நிலையத்தில் வந்து செல்கின்றன.
இந்த பஸ் நிலையம் கட்டப்பட்டு, 35 வருடங்களானதால் பஸ் நிலையத்தின் மேற்கூரை, கடைகளின் மேல்தளம் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால், மழைக்காலங்களில் கடைகளுக்குள் தண்ணீர் கசிந்து வருகிறது. எனவே, இப்பஸ் நிலையத்தில் இடித்து அகற்றி விட்டு, பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்புக்கேற்ப கூடுதல் வசதிகளுடன் புதிதாக கட்டிடங்கள் கட்ட வேண்டும் எனும் கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
பஸ் நிலையத்துக்குள் வராத பஸ்கள்:
பவானி புதிய பஸ் நிலையத்திற்குள் அனைத்து பஸ்களும் வந்து பயணிகளை இறக்கியும், ஏற்றியும் செல்ல வேண்டும். ஆனால், மேட்டூர் – ஈரோடு வழித்தடத்தில் இயங்கும் தனியார், அரசு பஸ்கள் பஸ் நிலையத்திற்குள் வராமல், வெளியிலேயே பயணிகளை ஏற்றியும் இறக்கியும் விட்டு செல்வதால் வியாபாரம் பாதிக்கப்படுவதாக நகராட்சி பஸ் நிலைய கடை வியாபாரிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
வருவாய் இழப்பு:
பயணிகள் வரத்து பஸ் நிலையத்திற்குள் இல்லாததால் பெரும்பாலான கடைகள் பூட்டப்பட்டு உள்ளது. தொலைதூர பஸ்கள் நிற்கும் பகுதியில் இரு கடைகள் மட்டுமே இயங்குகிறது. பாக்கியுள்ள கடைகள் அனைத்தும் ஏலம் போகாததால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்துத்துறை அதிகாரிகள், நகராட்சி நிர்வாகம் இணைந்து நடவடிக்கை எடுத்த போதிலும் பஸ்கள் வராமலேயே சென்று வருகின்றன.
பஸ் நிலையம் கட்டப்பட்டு 35 வருடங்களுக்கு மேலாவதால் கட்டுமானங்கள் வலுவிழந்து காணப்படுகிறது. மழைக்காலங்களில் பயணிகள் அவதிக்குள்ளாகும் நிலை காணப்படுகிறது. எனவே, அனைத்து வசதிகளுடன் பவானி புதிய பஸ் நிலையத்தை மேம்படுத்தி, புத்துயிர் அளிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
The post வசதிகள் குறைவு, கடைகளுக்குள் தண்ணீர் கசிவு பவானி புதிய பஸ் நிலையம் புத்துயிர் பெறுமா? appeared first on Dinakaran.