1. தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நிலையான விலையில் 2022-23ம் ஆண்டில் (விரைவுமதிப்பீடு) ரூ.14,51,929 கோடியாகவும், நடப்பு விலையில் ரூ.23,93,364 கோடியாகவும், 2023-24ம் ஆண்டில் (முன்மதிப்பீடு) நிலையான விலையில் ரூ.15,71,368 கோடியாகவும், நடப்பு விலையில் ரூ.27,21,571 கோடியாகவும் இருந்தது.
2. தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 2022-23ம் ஆண்டில் 8.13 சதவீதமாகவும், 2023-24ம் ஆண்டில் 8.23 சதவீதமாகவும் நிலையான விலையில் இருந்தது, அதே நேரத்தில் நடப்பு விலையில் வளர்ச்சி விகிதம் 2022-23ம் ஆண்டில் 15.48 சதவீதமாகவும், 2023-24ம் ஆண்டில் 13.71 சதவீதமாகவும் இருந்தது.
3. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விகிதம் நடப்பு விலையில் 2022-23ம் ஆண்டில் 8.88 சதவீதமாகவும், 2023-24ம் ஆண்டில் 9.21 சதவீதமாகவும் இருந்தது. நிலையான விலையில் 2022-23ம் ஆண்டில் 9.03 சதவீதமாகவும், 2023-24ம் ஆண்டில் 9.04 சதவீதமாகவும் இருந்தது.
4. தமிழ்நாடு, மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில், 2022-23ம் ஆண்டில் நடப்பு விலையில் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அடுத்தபடியாக 2வது இடத்தில் உள்ளது. நிலையான விலையில், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களுக்கு அடுத்தபடியாக 3வது இடத்தில் உள்ளது. 2023-24ம் ஆண்டிற்கு சில மாநிலங்களுக்கான மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி தரவுகள் வெளியிடப்படாததால் ஒப்பீட்டுத் தரவரிசைகளை மதிப்பிட இயலவில்லை.
5. அகில இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் நிலையான விலையில் 2022-23ம் ஆண்டில் 6.99 சதவீதமாகவும், 2023-24ம் ஆண்டில் 8.15 சதவீதமாகவும் இருந்தது, அதே நேரத்தில் நடப்பு விலையில், வளர்ச்சி விகிதம் 2022-23ம் ஆண்டில் 14.21 சதவீதமாகவும், 2023-24ம் ஆண்டில் 9.60 சதவீதமாகவும் இருந்தது.
6. தமிழ்நாட்டின் பணவீக்க விகிதங்கள் 2022-23ம் ஆண்டில் 5.97 சதவீதமாகவும், 2023-24ம் ஆண்டில் 5.37 சதவீதமாகவும் இருந்தன. இதே காலகட்டத்தில் அகில இந்திய பணவீக்க விகிதங்கள் 6.65 சதவீதமாகவும் மற்றும் 5.38 சதவீதமாகவும் இருந்தன.
7. தமிழ்நாட்டின் சராசரி பொருளாதார வளர்ச்சி விகிதம் நிலையான விலையில் 2012-13 முதல் 2020-21 வரை 5.80 சதவீதமாக இருந்தது. 2021-22, 2022-23 மற்றும் 2023-24ம் ஆண்டுகளுக்கான வளர்ச்சி விகிதங்கள் நிலையான விலையில் முறையே 7.89%, 8.13% மற்றும் 8.23% ஆக இருந்தன. இதன் விளைவாக 2012-13 முதல் 2020-21 வரையிலான முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது மாநிலத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்து 2021-22 முதல் 2023-24 முடிய மூன்றாண்டுளில் அடைந்த சராசரி வளர்ச்சி விகிதம் 8.08 சதவீதமாக ஆக உள்ளது.
8. தமிழ்நாட்டின் தலா வருமானம் நிலையான விலையில் 2022-23ம் ஆண்டில் ரூ.1,66,590 ஆகவும், 2023-24ம் ஆண்டில் ரூ.1,79,732 ஆகவும் இருந்தது. இந்தியாவின் தலா வருமானம் 2022-23ம் ஆண்டில் ரூ.99,404 ஆகவும், 2023-24ம் ஆண்டில் ரூ.1,06,744 ஆகவும் இருந்தது. இரண்டு ஆண்டுகளில், இந்தியாவின் தலா வருமானத்துடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டின் தலா வருமானம் 1.68 மடங்காக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நடப்பு விலையில், தமிழ்நாட்டின் தலா வருமானம் 2022-23ம் ஆண்டில் ரூ.2,77,802 ஆகவும் 2023-24ம் ஆண்டில் ரூ.3,15,220 ஆகவும் இருந்தது. அகில இந்திய தலா வருமானம் 2022-23ம் ஆண்டில் ரூ.1,69,496 ஆகவும் 2023-24ம் ஆண்டில் ரூ.1,84,205 ஆகவும் இருந்தது. எனவே, தமிழ்நாட்டின் தலா வருமானம் 2023-24ம் ஆண்டில் தேசிய தலா வருமானத்தை விட 1.71 மடங்காக இருந்தது.
9. தமிழ்நாட்டில் முதன்மை துறையின் மொத்த மதிப்பு கூடுதல், நிலையான விலையில் 2022-23ம் ஆண்டில் ரூ.1,50,230 கோடியாகவும், 2023-24ம் ஆண்டில் ரூ.1,56,058 கோடியாகவும் இருந்தது. தமிழ்நாட்டின் மொத்த மதிப்பு கூடுதலில் முதன்மை துறையின் பங்களிப்பு 2022-23ல் 11.61 சதவீதமாகவும், 2023-24 ல் 11.18 சதவீதமாகவும் இருந்தது.
10. கால்நடைத்துறை, முதன்மை துறையின் மொத்த மதிப்பு கூடுதலுக்கு நிலையான விலையில் அளித்த பங்களிப்பு 2022-23ம் ஆண்டில் 48.99 சதவீதமாகவும் மற்றும் 2023-24ம் ஆண்டில் 49.03 சதவீதமாகவும் இருந்தது.
11. மொத்த மதிப்பு கூடுதலில் இரண்டாம் நிலை துறையின் பங்களிப்பு நிலையான விலையில் 2022-23 மற்றும் 2023-24ம் ஆண்டுகளில் முறையே ரூ.4,83,328 கோடியாகவும் மற்றும் ரூ.5,18,619 கோடியாகவும் இருந்தது. இந்த இரண்டு ஆண்டுகளில் மாநில மொத்த மதிப்பு கூடுதலில் இரண்டாம் நிலைத்துறையின் பங்களிப்பு முறையே 37.36 சதவீதமாகவும், 37.15 சதவீதமாகவும் இருந்தது.
12. உற்பத்தி துறை, இரண்டாம் நிலை துறைக்கு 65 சதவீதம் பங்களித்து 2022-23 மற்றும் 2023-24ம் ஆண்டுகளில் வலுவான வளர்ச்சியை கண்டது. உற்பத்தி துறை, மாநில மொத்த மதிப்பு கூடுதலுக்கு அளித்த பங்களிப்பு 2022-23 ஆண்டில் 24.44 சதவீதமாகவும், 2023-24ம் ஆண்டில் 24.10 சதவீதமாகவும் இருந்தது. மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில், உற்பத்தி துறையின் பங்களிப்பு, நிலையான விலையில், முறையே 9.29 சதவீதம் மற்றும் 6.37 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
13. தமிழ்நாட்டில் பணி துறையின் மொத்த மதிப்பு கூடுதல், நிலையான விலையில் 2022-23ம் ஆண்டில் ரூ.6,60,230 கோடியும், 2023-24ம் ஆண்டில் ரூ.7,21,309 கோடியும் ஆகும். இந்த இரண்டு ஆண்டுகளில் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பணித்துறையானது 45.47 சதவீதமும், 45.90 சதவீதமும் பங்களித்தது.
2023-24ம் ஆண்டில் பணித்துறை நிலையான விலையில் 9.25% வளர்ச்சி அடைந்துள்ளது. போக்குவரத்து, சேமிப்புகிடங்கு மற்றும் தகவல் தொடர்பு துறைகளில் 8.76%, பிறவகை போக்குவரத்துத்துறையில் 7.46%, நிதி தொடர்பான பணிகளில் 9.29%, கட்டிட மனை துறையில் 10.08%, பிறவகை பணிகளில் 9.96% என வளர்ச்சி காணப்பட்டது. தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பணித்துறை குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது.
The post 2022-23 மற்றும் 2023-24ம் ஆண்டுகளுக்கான தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகளில் வலுவான வளர்ச்சி அடைந்துள்ளது: பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை அறிவிப்பு appeared first on Dinakaran.