திமுக அரசின் நடவடிக்கைகளை தாங்கிக்கொள்ள முடியாமல் பக்தியை பகல் வேஷ அரசியலுக்கு பயன்படுத்துவதா? முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: திமுக அரசின் நடவடிக்கைகளை தாங்கிக் கொள்ள முடியவில்லை பக்தியை பகல் வேஷ அரசியலுக்கு சிலர் பயன்படுத்துகிறார்கள் என்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 31 ஜோடிகளுக்கு நேற்று திருமணம் நடத்தி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.சென்னை, திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நேற்று நடைபெற்ற விழாவில் 31 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்து, புதுமண தம்பதிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நான் முதலில் இந்த 31 இணையர்களுக்கு உங்கள் அனைவரின் சார்பில் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நான் ஒன்றை கவனித்து பார்த்தேன். அதாவது ஒவ்வொரு ஜோடிகளும் வரும்போது, அவர்கள் கையில் ஒரு தட்டை கொடுத்திருக்கிறார்கள். அந்த தட்டை யாரிடத்தில் கொடுத்திருக்கிறார்கள் என்றால், மாப்பிள்ளையிடம் கொடுத்திருக்கிறார்கள். மாப்பிள்ளை தட்டு ஏந்த வேண்டும்; நான் குறைத்து பேச விரும்பவில்லை; விமர்சித்து பேச விரும்பவில்லை. அப்படிதான் பெண்களுக்குரிய தகுதியை, பெண்களுக்குரிய உரிமையை நாம் தந்து கொண்டிருக்கிறோம் என்பதற்கு இது ஒரு சாட்சி, இது ஒரு அடையாளம்.

கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த துறையின் சார்பில் பல்வேறு சாதனைகளை நம்முடைய அமைச்சராக இருக்கக்கூடிய சேகர்பாபு முயற்சியோடு நாம் செய்து கொண்டிருக்கிறோம். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, கோயில்களை பழமை மாறாமல் புதுப்பிக்க மாநில அளவிலான ஒரு வல்லுநர் குழுவை அமைத்தோம். அவர்கள் வழங்கிய ஆலோசனைப்படி, தான் அந்த பணியை நாம் தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். கடந்த மூன்றாண்டு காலத்தில், 2,226 கோயில்களில் திருப்பணிகள் முடித்து குடமுழுக்கு விழா சிறப்பாக நடத்தப்பட்டிருக்கிறது. 10,238 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. நன்கொடையாளர்கள் கொடுத்திருக்கக்கூடிய ரூ.1,103 கோடி நிதியின் மூலமாக 9,163 பணிகள் கோயில்களில் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த மூன்று வருட காலத்தில் 7 ஆயிரத்து 69 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.6,792 கோடி ஆகும். இந்த சாதனையை பார்த்து பக்தர்கள் மகிழ்ச்சி பெருக்கோடு நம்முடைய அரசை மனதார பாராட்டி கொண்டிருக்கிறார்கள்.

ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 894 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு எல்லைக்கற்கள் நடப்பட்டு, கோயில் சொத்துகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு எடுத்த சிறப்பு திட்டங்களில் ஒன்று என்னவென்றால், 1000 ஆண்டு பழமையான கோயில்களை பாதுகாப்பது ஆகும். ரூ.426.62 கோடி மதிப்பீட்டில் 2774 கோயில்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 37 கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. கோயில்களுக்கு ரூ.1 லட்சம் வழங்கி அதில் இருந்து கிடைக்கப்பெறும் வட்டி தொகையில் வழிபாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. அந்த தொகையை 2 லட்சமாக உயர்த்தியதும் நம்முடைய திமுக அரசு தான். இத்திட்டத்தின்படி, 17 ஆயிரம் கோயில்களுக்கு முதலீட்டு தொகையாக ரூ.200 கோடியை ஒதுக்கீடு செய்தோம். இந்த 17 ஆயிரம் கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை நமது அரசு தான் தொடங்கியது. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு மலைக் கோயில்களிலும், அதிக அளவில் பக்தர்கள் வருகை தரும் திருக்கோயில்களிலும் பக்தர்களின் நலன் கருதி மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டன. இப்படி ஏராளமான சாதனைகளை இந்து சமய அறநிலையத்துறை செய்து வருகிறது. இதைப்பற்றி சேகர்பாபுவிடம் கேட்டால், ஒரு புத்தகமாகவே போட்டு வழங்கிடுவார்.

அந்த அளவுக்கு திட்டங்களும், சாதனைகளும் நடந்து கொண்டிருக்கின்றன. அறநிலையத் துறையின் சிறப்பான செயல்பாட்டில் முக்கியமானது என்னவென்றால், கோயில் தொடர்பான வழக்குகளை எதிர்கொள்வது ஆகும். அதில் கண்ணுங்கருத்துமாக இருந்து வழக்கை நடத்தி தொடர்ந்து வெற்றி பெற்று கொண்டிருக்கிறோம். இதையெல்லாம் உண்மையான பக்தர்கள் பாராட்டுகிறார்கள்; நன்றாக கவனியுங்கள் – உண்மையான பக்தர்கள் பாராட்டுகிறார்கள். பக்தியை தங்களது பகல் வேஷ அரசியலுக்கு பயன்படுத்தி வருபவர்களால் இதனை தாங்கிக் கொள்ள முடியவில்லை. தலைவர் கலைஞர் பராசக்தி திரைப்படத்தில் ஒரு வசனத்தை வைத்திருப்பார். கோயில்களை கூடாது என்பது நம்முடைய கொள்கை அல்ல, கோயில்களை கொடியவர்கள் கூடாராமாக ஆக்கிவிடக்கூடாது என்பதுதான் நம்முடைய லட்சியம் என்று சொன்னார். நம்முடைய சாதனைகளை தடுக்கத்தான் இப்படிப்பட்ட பல்வேறு வழக்குகள் போடப்பட்டு வருகிறது. ஆனால் அந்த வழக்குகளை எல்லாம் சட்டப்படி முறியடித்து நம்முடைய சாதனை பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.

அத்தனை மதங்களையும் சமமாக மதித்து, எல்லோருடைய உரிமைகளையும் காக்கின்ற அரசாக நம்முடைய அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது. அதனால்தான் இது திராவிட மாடல் அரசு என்று கம்பீரமாக சொல்லிக் கொண்டிருக்கிறோம். இத்தகையை சிறப்பான ஆட்சி காலத்தில், மணக்கோலம் பூண்டிருக்கக்கூடிய இந்த தம்பதியர்களை மனதார வாழ்த்துவதற்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். வாழ்க்கையில் அனைத்து நன்மைகளையும் பெற்று நீங்கள் சிறப்போடு வாழ்ந்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த விழாவில் அமைச்ர்கள் பொன்முடி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, திருப்பெரும்புதூர், உலகாரிய ராமானுஜ எம்பார் ஜீயர் சுவாமிகள், தொண்டை மண்டல ஆதீனம் தவத்திரு சிதம்பரநாத ஞானபிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன், எம்எல்ஏ தாயகம் கவி, அசன் மவுலானா, வெற்றியழகன், ஜோசப் சாமுவேல், அரவிந்த் ரமேஷ், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை செயலாளர் சந்தரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.தர், கூடுதல் ஆணையர் சுகுமார், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post திமுக அரசின் நடவடிக்கைகளை தாங்கிக்கொள்ள முடியாமல் பக்தியை பகல் வேஷ அரசியலுக்கு பயன்படுத்துவதா? முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: