2023 அக்.7ம் தேதி இஸ்ரேல் மீது ஒரே நேரத்தில் காசா பகுதியில் இருந்து சுமார் 2000 ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இஸ்ரேலை சேர்ந்த 1200 பேர் அந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர். சுமார் 250 பேர் பிணைக்கைதிகளாக பிடித்துச்செல்லப்பட்டனர். அதை விட முக்கியமாக இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்த ஹமாஸ் போராளிகள், இஸ்ரேல் பெண்களை பாலியல்ரீதியாக துன்புறுத்தினார்கள். உலகமே அதிர்ந்து விட்டது. காரணம் இஸ்ரேல் உளவுப்பிரிவான மொசாட் எப்படி கோட்டை விட்டது என்பது தான் அத்தனை நாடுகளின் கேள்வி.
இங்கு பதில் சொல்ல நேரம் இல்லை. உடனேயே பதிலடி தாக்குதலை ஆரம்பித்தது இஸ்ரேல். 378 நாட்கள் கடந்தும் இன்று வரை காசா பகுதியை வேட்டையாடி வருகிறது இஸ்ரேல் படை. காசா என்ற பகுதியே இப்போது இல்லை. இஸ்ரேல் படைகளால் உருக்குலைந்த வேட்டைக்காடாகத்தான் அந்த பகுதி இப்போது காட்சியளிக்கிறது. 2024 ஜூலை 31 அன்று, ஹமாஸ் படைகளின் தலைவர் இஸ்மாயில் ஹனியே, ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அவரது விருந்தினர் மாளிகையில் வைத்து இஸ்ரேலின் மொசாட் அமைப்பால் கொல்லப்பட்டார்.
அதை தொடர்ந்து லெபனானில் இருந்து இஸ்ரேலை அடிக்கடி தாக்கி வரும் ஹிஸ்புல்லா குழுவினரை குறிவைத்து பேஜர், வாக்கி டாக்கிகளை வெடிக்க வைத்து தாக்குதல் நடத்தியது இஸ்ரேல். அதை தொடர்ந்து தரைவழியாகவும் லெபனானில் புகுந்து ஹிஸ்புல்லாக்களை வேட்டையாடி வருகிறது. ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவையும் செப்.28ல் குறிவைத்து கொன்றுவிட்டாலும், காசாவில் நடத்தும் தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தவில்லை. காரணம் ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவர் யாஹ்யா சின்வார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழு நடத்திய தாக்குதலின் மூளையாகச் செயல்பட்டவர்தான் 61 வயதான யாஹ்யா சின்வார். அந்தத் தாக்குதலைத் தொடர்ந்து அவர் தலைமறைவான நிலையில் இஸ்ரேல் படையினர் ஓராண்டுக்கும் மேலாக அவரைத் தேடி வந்தனர். இஸ்ரேலில் பிடிபட்டவர்களை மனித கேடயங்களாக பயன்படுத்தி சுரங்கப்பாதை வழியாக அடிக்கடி தப்பி வந்தார். இந்த நிலையில் தான் புதன்கிழமை காசாவில் உள்ள ரபா நகரில் தல்-அல்-சுல்தான் பகுதியில் இஸ்ரேல் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் தான் ஹமாஸ் அமைப்பை ேசர்ந்த 3 போராளிகள் அங்கும் இங்கும் தப்பி ஓட முயற்சிப்பதை கண்டனர்.
அவர்களை கடுமையாக குறிவைத்து தாக்கியது இஸ்ரேல் படை. தப்பியவர்களை பிடிக்க டிரோன் மூலம் வேட்டை நடத்தப்பட்டது. இதில் டிரோன் மூலம் சோதித்ததில் கட்டிடத்திற்குள் பதுங்கி இருந்த 3 பேரும் குறிவைத்து கொல்லப்பட்டனர். இந்த 3 பேர் இறந்ததை இஸ்ரேல் படை பெரிதாக கருதவில்லை. அந்த சடலங்களையும் அகற்றவில்லை. மறுநாள் வியாழக்கிழமை காலை வரை இஸ்ரேல் படையினர் அந்தப் பகுதிக்கு மீண்டும் செல்லவில்லை.
அதன்பிறகு அங்கு சென்று இஸ்ரேல் படைகளின் வழக்கப்படி இறந்த சடலங்கள் குறித்து பரிசோதனை செய்யும் போதுதான், அங்கிருந்த ஒரு சடலம், நம்ப முடியாத வகையில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரின் தோற்றத்தை ஒத்திருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அதிர்ச்சி அடைந்த இஸ்ரேல் படையினர் உடனடியாக சின்வாரின் விரலை மட்டும் வெட்டி டிஎன்ஏ பரிசோதனைக்காக இஸ்ரேலுக்கு அனுப்பி வைத்தனர். அப்போது கொல்லப்பட்டது யாஹ்யா சின்வார்தான் என்பது உறுதி செய்யப்பட்டது.
கொண்டாடி தீர்த்து விட்டது இஸ்ரேல். அவர்கள் ஓராண்டாக தேடிய, குறிவைத்த யாஹ்வா சின்வார் கொல்லப்பட்டுவிட்டார். அமெரிக்கா உள்ளிட்ட இஸ்ரேல் ஆதரவு நாடுகளும் மகிழ்ச்சி அடைந்துவிட்டன. இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி கூறுகையில்,’யாஹ்யா சின்வார் அங்கிருப்பார் என்பது எங்கள் படைகளுக்குத் தெரியாது, ஆனாலும் நாங்கள் தாக்குதலைத் தொடர்ந்தோம்.
அந்தப் பகுதியில் மூன்று நபர்கள் அங்கும் இங்கும் ஓடியதால், எங்கள் படைகள் அவர்களைக் கண்டறிந்து தாக்குதலில் ஈடுபட்ட நிலையில், அவர்கள் மூவரும் பிரிந்து சென்றனர். சின்வார் என அடையாளம் காணப்பட்ட நபர் தனியாக ஒரு கட்டிடத்திற்குள் ஓடினார். இருப்பினும் டிரோன் மூலம் அவரது இருப்பிடம் அடையாளம் காணப்பட்டு அவர் கொல்லப்பட்டார்’ என்றார் டேனியல் ஹகாரி. இப்போது இஸ்ரேலின் முக்கிய இலக்கு முடிக்கப்பட்டு விட்டது. இனி அடுத்த குறி ஈரானா என்பது தான் உலக நாடுகளின் கேள்வி.
ஹமாஸ் அமைப்பின் தலைவர் யாஹ்யா சின்வார் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள இஸ்ரேல் கைதிகளை மனித கேடயமாகப் பயன்படுத்தியிருக்கலாம் என்று இஸ்ரேல் ராணுவம் நம்பியது. ஆனால் அவர் கொல்லப்பட்ட போது கைதிகள் யாரும் இல்லை. அப்படியானால் ஒருவேளை யாரும் அறியாத வகையில், குறைந்த பாதுகாவலர்களுடன் அவர் வேறு இடத்திற்கு நகர்ந்து செல்லும் முயற்சியில் கொல்லப்பட்டு இருக்கலாம் அல்லது அவரது பாதுகாப்பு வீரர்கள் அத்தனை பேரும் இஸ்ரேல் படையால் வேட்டையாடப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் கூறுகையில், ‘சின்வார் தப்பி ஓடும்போது டிரோன் மூலம் தாக்கப்பட்டதில் உயிரிழந்தார். அவர் ஒரு படைத் தலைவராக இறக்கவில்லை. தன்னுடைய நலனை மட்டுமே சிந்தித்த ஒருவராகவே அவர் இறந்தார். எங்களுடைய அனைத்து எதிரிகளுக்கும் இது ஒரு செய்தி’ என்று தெரிவித்தார். இஸ்ரேல் ராணுவத்தால் நேற்று வெளியிடப்பட்ட டிரோன் காட்சியில், சின்வார் கொல்லப்படுவதற்கு முன்பு நிகழ்ந்த கடைசி தருணங்கள் காட்டப்பட்டன.
மிகவும் உருக்குலைந்து போன கட்டிடத்தின் முதல் தளத்தில் தலை, முகம் முழுவதும் மூடப்பட்ட நிலையில் நாற்காலியில் அமர்ந்து இருக்கிறார் சின்வார். காயமடைந்த நிலையில் அமர்ந்து இருக்கும் அவரை டிரோன் படம் பிடிப்பதை கண்டு அங்கு இருந்த கட்டையை எடுத்து டிரோன் மீது வீசுகிறார். அத்துடன் அந்த வீடியோ முடிவடைந்தது. சின்வார் தனது கடைசி தருணத்தில் தனியாக இஸ்ரேல் ராணுவத்திடம் சிக்கிக்கொண்டு பலியாகி உள்ளார்.
* போர் முடிவடையவில்லை இஸ்ரேல் பிரதமர் ஆவேசம்
ஹமாஸ் தலைவர் சின்வார் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது: ஈரான் கட்டமைத்த பயங்கரவாதத்தின் அச்சு சரிந்து வருகிறது. ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். பின்னர் அவருக்கு அடுத்த நிலையில் இருந்த மோஷன், அதற்கு முன்பு ஹமாஸ் முன்னாள் தலைவர் இஸ்மாயில் ஹனியாவும் கொல்லப்பட்டார். ஹமாஸ் ராணுவத் தலைவர் முகமது டெய்பை வீழ்த்தினோம்.
ஈரான் தனது சொந்த மக்கள் மீதும், அண்டை நாடுகளான ஈராக், சிரியா, லெபனான், ஏமன் மக்கள் மீது செலுத்தும் பயங்கரவாதத்தின் படியும் முழுமையாக விரைவில் முடிவுக்கு வரும். ஈரான் தலைமையிலான தீவிரவாத அச்சுறுத்தலை முடிவுக்குக் கொண்டுவந்தது மாறுபட்ட எதிர்காலத்தை உருவாக்க எங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிட்டியுள்ளது. யாஹ்யா சின்வர் கொல்லப்பட்டதன் மூலம் இந்தப் போரில் மிக முக்கிய இலக்கை நாங்கள் எட்டியுள்ளோம்.
மிகப் பெரிய யூத இனப் படுகொலைக்குப் பின்னர் எங்கள் மக்களின் மீது மோசமாக தாக்குதலை நடத்தியவரின் கணக்கைத் தீர்த்துள்ளோம். இருப்பினும் ஹமாஸ் மற்றும் ஈரான் ஏவிவிட்டுள்ள பயங்கரவாதிகளுக்கு எதிரான எங்களின் போர் இன்னும் முடிவடையவில்லை. கடினமான நாட்கள் இன்னும் இருக்கின்றன. இறுதியில் நாங்கள் நிச்சயம் வெல்வோம்’ என்று கூறியுள்ளார். இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறுகையில்,’ நமது வரலாற்றில் இஸ்ரேலுக்கு எதிரான மிகக் கொடூரமான தாக்குதலுக்கு சின்வார் இப்போது கொல்லப்பட்டுள்ளான் என்றார்.
* உலகிற்கு நல்ல நாள் அமெரிக்க அதிபர்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறுகையில்,’ ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள். டி.என்.ஏ., பரிசோதனை மூலம் சின்வர் கொல்லப்பட்டது உறுதியாகி உள்ளது. ஹமாஸ் தலைவர்களை வேட்டையாட இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவி வருகிறது. சின்வார் கொல்லப்பட்டதை அறிந்து நெதன்யாகுவை தொடர்பு கொண்டு வாழ்த்தினேன். இந்தச் சம்பவத்தின் மூலம் உலகில் எங்கும் எந்த பயங்கரவாதியும், நீதியிலிருந்து தப்பிக்க முடியாது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது’ என்றார்.
* போர் அடுத்த கட்டத்திற்கு செல்கிறது ஹமாஸ் போராளிகள் ஆவேசம்
ஹமாஸ் போராளிகளின் தலைவர் யாஹ்யா சின்வார், காசாவில் இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்டதை அடுத்து ஹமாஸ் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில்,’இஸ்ரேலில் இருந்து பிடிக்கப்பட்ட பணயக்கைதிகளை போர் நிறுத்தப்படும் வரை விடுவிக்க மாட்டோம். காசா மீதான ஆக்கிரமிப்பு முடிந்து, இஸ்ரேல் படைகள் காசாவிலிருந்து வெளியேறும் வரை அந்தக் கைதிகள் உங்களிடம் திரும்ப மாட்டார்கள். சின்வார் ஒரு வீர தியாகியாக உயர்ந்தார். அவரது இறப்பு மூலம் போர் அடுத்த கட்டத்திற்கு செல்கிறது’ என்று தெரிவித்துள்ளது.
* யார் இந்த யாஹ்யா சின்வார்?
2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலில் ஹமாஸ் ஆயுதக்குழு நடத்திய தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர். 250க்கும் மேற்பட்டோர் பணயக்கைதிகளாக கொண்டு செல்லப்பட்டனர். இதற்குக் காரணமானவர்களில் ஒருவராக யாஹ்யா சின்வாரை இஸ்ரேல் குற்றம் சாட்டி வந்தது. அவ்வளவு தான் அவரைப்பற்றி வெளியுலகிற்கு தெரியும். ஆனால் உண்மையிலேயே அவர் யார்?
* காசாவின் தெற்கு முனையில் உள்ள கான் யூனிஸ் அகதிகள் முகாமில் பிறந்தார் 61 வயதாகும் யாஹ்யா சின்வார். இவர் அபு இப்ராஹிம் என்று பரவலாக அறியப்படுகிறார்.
* பாலஸ்தீனர்கள் ‘அல்-நக்பா’ (பேரழிவு) என்று அழைக்கும் சம்பவத்திற்குப் பிறகு அகதிகளான குடும்பத்தைச் சேர்ந்தவர்.1948 ம் ஆண்டு நடந்த இந்தச் சம்பவத்திற்கு பிறகு இஸ்ரேல் என்ற நாடு உருவானது.
* சின்வார் முதன்முதலாக 1982ம் ஆண்டு, அவரது 19வது வயதில் இஸ்ரேல் படையால் கைது செய்யப்பட்டார். பின்னர் மீண்டும் 1985ம் ஆண்டு கைதான போது ஹமாஸின் நிறுவனர் ஷேக் அகமது யாசினின் நம்பிக்கையைப் பெற்றார்.
* ஹமாஸ் அமைப்பு 1987ல் உருவான போது சின்வார் அக்குழுவின் உள்நாட்டுப் பாதுகாப்பு அமைப்பான அல்-மஜ்தை உருவாக்கினார்.
* 1988ம் ஆண்டு சின்வார் , 12 பாலஸ்தீனர்களைக் கொன்றதற்காக இஸ்ரேலால் அவருக்கு நான்கு ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டன.
* சின்வார் தனது வாழ்வில் 22 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரேலிய சிறைகளில் கழித்துள்ளார். அவர் 2011 ம் ஆண்டு ஒரு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக விடுவிக்கப்பட்டார்.
* 2013ம் ஆண்டு, அவர் காஸா பகுதியில் உள்ள ஹமாஸின் அரசியல் பணியகத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
* 2015ம் ஆண்டில், அமெரிக்க வெளியுறவுத்துறை, சின்வாரை உலகளாவிய பயங்கரவாதி என்று அதிகாரப்பூர்வமாக வகைப்படுத்தியது.
* இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்ட பிறகு 2024 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், சின்வார் ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
The post ஒரு வருட தேடுதல் வேட்டை, இஞ்ச் இஞ்ச்சாக அலசிய துல்லியம் ஹமாஸ் தலைவரை தட்டித்தூக்கிய இஸ்ரேல்: டிரோன் மூலம் பழிக்கு பழி appeared first on Dinakaran.