கொடைக்கானலில் ரூ.5.80 கோடி மதிப்பீட்டில் வாரச்சந்தை பணி துவக்கம்

கொடைக்கானல், அக். 18: கொடைக்கானல் கவி தியாகராஜர் சாலையில் அமைந்துள்ளது வாரச்சந்தை. இப்பகுதியில் நகராட்சி சார்பில் தற்காலிக தகர அமைப்புகள் அமைக்கப்பட்டு வாரச்சந்தை நடந்து வந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதை தவிர்க்க கூடுதல் கடைகளுடன் வாரச்சந்தை அமைக்க விவசாயிகள், பொதுமக்கள் பழநி எம்எல்ஏ ஐ.பி. செந்தில்குமாரிடம் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

இதையடுத்து எம்எல்ஏ தீவிர முயற்சியில் ரூ.5 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் புதிய இரண்டு அடுக்கு மாடியுடன் வாரச்சந்தை அமைக்க முடிவு செய்யப்பட்டு நேற்று பூமி பூஜை நடந்தது. நகர் மன்ற தலைவர் செல்லத்துரை தலைமை வகித்தார். துணை தலைவர் மாயக்கண்ணன், நகராட்சி ஆணையாளர் சத்யநாதன் முன்னிலை வகித்தனர். விழாவில் பூமி பூஜை செய்து புதிய வாரச்சந்தை அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டன.

இதில் முன்னாள் நகர்மன்ற தலைவர் முகமது இப்ராஹிம், நகர் மன்ற உறுப்பினர் அப்பாஸ் அலி, நகராட்சி உதவி பொறியாளர் செல்லத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த இடத்தில் ஞாயிற்றுக்கிழமை வாரச்சந்தையும், மற்ற 6 நாட்கள் வாகன நிறுத்துவதற்கு பயன்படுத்தப்படவுள்ளதாகவும், இனி சாலையில் காய்கறி கடைகள் அமைக்காமல் இந்த புதிய வளாகத்திலேயே கடைகள் அமைப்பதன் மூலம் இப்பகுதியில் வாகன போக்குவரத்து தடையின்றி நடக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post கொடைக்கானலில் ரூ.5.80 கோடி மதிப்பீட்டில் வாரச்சந்தை பணி துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: