நடிகை ஜியா கான் மரண வழக்கு நடிகர் சூரஜ் பஞ்சோலி விடுவிப்பு

மும்பை: இந்தியில் ‘கஜினி’ (2008), ‘ஹவுஸ்ஃபுல்’ (2010), ‘நிஷப்த்’ (2007) உள்ளிட்ட படங்களில் நடித்த, அமெரிக்க குடியுரிமை பெற்ற பாலிவுட் நடிகை ஜியா கான் (25), கடந்த 2013ம் ஆண்டு மும்பையின் ஜூகு பகுதியில் தனது வீட்டில் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது அறையில் 6 பக்க தற்கொலை குறிப்பு கடிதம் மீட்கப்பட்டது. இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்தி வந்த சிபிஐ, ஜியா கானின் காதலரான நடிகர் சூரஜ் பஞ்சோலி என்பவரை கைது செய்தது. இவர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதியப்பட்டது. தற்போது சூரஜ் பஞ்சோலி ஜாமீனில் உள்ளார். ஆனால் ஜியா கானின் தாய் ரபியா கான், தனது மகளை கொலை செய்துள்ளனர் என்று தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.

மேலும், இந்த வழக்கை எப்பிஐ-க்கு (அமெரிக்க புலனாய்வு முகமை) மாற்றவேண்டும், வழக்கை முதலில் இருந்து புதிதாக விசாரிக்க வேண்டும் என மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். கடந்தாண்டு இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஜியா கானின் தாய் ரபியா கானின் கோரிக்கையை நிராகரித்தனர். மேலும், புதிய விசாரணைக்கு உத்தரவிட முடியாது என்று உத்தரவிட்டனர். இந்நிலையில் 10 ஆண்டுகளாக விசாரணை நடத்தி வந்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், நேற்று தீர்ப்பு வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

முன்னதாக கடந்த வார விசாரணையின்போது, சிபிஐ சிறப்பு நீதிபதி ஏ.எஸ்.சயத், இருதரப்பு இறுதி வாதங்களையும் கேட்டறிந்து, வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தார். இந்நிலையில் நேற்று வழக்கின் தீர்ப்பு காலை 10.30 மணிக்கு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜியா கானின் தாயார் ரபியா கான் எழுத்துப்பூர்வ சில தகவல்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய விரும்புவதாக கூறினார். அதனால் வழக்கின் தீர்ப்பு மதியம் 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ஜியா கான் மரண வழக்கில், நடிகர் சூரஜ் பஞ்சோலியை விடுவித்து தீர்ப்பளித்தது.

The post நடிகை ஜியா கான் மரண வழக்கு நடிகர் சூரஜ் பஞ்சோலி விடுவிப்பு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: