திருவாரூர் மாவட்டத்தில் இளம் சாதனையாளர்களுக்கு பிரதமர் கல்வி உதவித்தொகை

 

திருவாரூர், அக்.17: திருவாரூர் மாவட்டத்தில் இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை பெற வரும் 31ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் சாரு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் (ஓ.பி.சி, இ.பி.சி, டி.என்.டி) ஆகிய பிரிவுகளைச்சேர்ந்த நாடு முழுவதும் 30 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் வகையில் பிரதமமந்திரியின் கல்விஉதவித்தொகை திட்டம் ஒன்றிய அரசால் செயல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, 2024-25ம் ஆண்டிற்கு தேசிய கல்வி உதவிதொகை இணையமுகவரியில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இருந்து வரும் பள்ளிகளில் பயிலும் தமிழகத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்திற்கான பெற்றோரது உச்சகட்ட வருமான வரம்பு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க கடைசிநாள் வரும் 31ந் தேதி.

கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தினை சரிபார்க்க கடைசிநாள் அடுத்த மாதம் (நவம்பர்) 15ந் தேதி. இத்திட்டத்தின்கீழ் கடந்த நிதியாண்டில் பயனடைந்த மாணவ,மாணவிகள் தேசிய கல்விஉதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பத்தினை புதுப்பித்துக் கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் புதியதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் 11ம் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகள் முறையே 8 மற்றும் 10ம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டு இக்கல்வி உதவித் தொகையானது வழங்கப்படும்.

The post திருவாரூர் மாவட்டத்தில் இளம் சாதனையாளர்களுக்கு பிரதமர் கல்வி உதவித்தொகை appeared first on Dinakaran.

Related Stories: