குரங்கணியிலிருந்து சென்னைக்கு 300 கிலோ கருங்காலி மரங்கள் கடத்தல்

*6 பேர் கைது; ஒருவருக்கு வலை

போடி : குரங்கணியிலிருந்து சென்னைக்கு 300 கிலோ கருங்காலி மரங்களை கடத்திய 6 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தப்பிய ஒருவரை தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி மலைப்பகுதியிலிருந்து கேரள பதிவெண் கொண்ட வாகனத்தில் 300 கிலோ கருங்காலி மரக்கட்டைகளை மறைத்து சென்னைக்கு கடத்த முயன்றுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு பகுதியில் வைத்து அந்த கும்பல் சென்னைக்கு கருங்காலி மரக்கட்டைகளை விற்பனைக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்துக் கொண்டிருப்பதாக வனம் மற்றும் வன உயிரின குற்றங்கள் கட்டுப்பாட்டு தனிப்பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின்பேரில் அந்த வாகனத்தை வத்தலக்குண்டுவில் சுற்றி வளைத்து பிடித்து தனிப்பிரிவு அதிகாரிகள் 6 பேரை கைது செய்தனர். அங்கிருந்து ஒருவர் தப்பியோடிவிட்டார். மேலும் கடத்தப்பட்ட எல்லையான போடி வனச்சரக அலுவலகத்தில், வாகனத்துடன் குற்றவாளிகளை நேற்று முன்தினம் மாலை ஒப்படைத்தனர். அவர்களிடம், போடி வனச்சரக அலுவலர் நாகராஜன் தலைமையிலான வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள், போடி குரங்கணியை சேர்ந்த சிவராஜ் (30), யோகேஷ்குமார் (36), கருப்பசாமி (50), கொட்டகுடியை சேர்ந்த பால்பாண்டி (53), திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டுவை சேர்ந்த சங்கிலிமுத்து (59), கலைச்செல்வன் (32) என்பதும், 300 கிலோ கருங்காலி மரக்கட்டையை கடத்தியது தெரிந்தது. அவர்களிடமிருந்து கருங்காலி மரக்கட்டைகளையும், வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து அவர்கள் மீது வனம் மற்றும் வன உயிரின குற்றங்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, மேலும் கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளரான போடி பகுதியை சேர்ந்த தெய்வேந்திரன் (38) என்பவரையும் வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
300 கிலோ கருங்காலி மரக்கட்டைகளை வெட்டி கடத்த முயன்ற சம்பவம் போடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post குரங்கணியிலிருந்து சென்னைக்கு 300 கிலோ கருங்காலி மரங்கள் கடத்தல் appeared first on Dinakaran.

Related Stories: