சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கான கலந்தாய்வு: 21ம் தேதிக்கு ஒத்திவைப்பு


சென்னை: சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி ஆகிய படிப்புகளுக்கான கலந்தாய்வு வருகிற 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி (பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎச்எம்எஸ்) பட்டப்படிப்புகளுக்கு 2024-25-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு மொத்தம் 8,797 மாணவ – மாணவியர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 8,397 பேரின் விண்ணப்பங்கள் மட்டுமே தகுதியுடையதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யும் பணிகள் முடிவடைந்து தகுதியான மாணவ – மாணவியரின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகத்தில் வரும் 17ம் தேதி கலந்தாய்வு தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சென்னைக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், வருகிற 21ம் தேதிக்கு கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான கூடுதல் விவரங்கள் www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

The post சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கான கலந்தாய்வு: 21ம் தேதிக்கு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: