கொட்டி தீர்த்த கன மழையால் சாலை, குடியிருப்புகளை சூழ்ந்து நிற்கும் மழை தண்ணீர்

*வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவிப்பு

*தேங்கிய நீரை அகற்ற வலியுறுத்தல்

ராமநாதபுரம்/திருவாடானை : ராமநாதபுரம்,திருவாடானை குடியிருப்பு பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது, ராமநாதபுரம் சக்கரக்கோட்டை பஞ்சாயத்து மகாசக்தி நகரில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் பெய்த மழைக்கு மழைநீர் வடிந்தோட வழியில்லாமல் சாலை, தெரு நடை பாதைகளில் தேங்கி நிற்கிறது. இதனால் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவிப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

மகாசக்தி நகர் 8வது தெரு மக்கள் கூறும்போது, மழை காலம் துவங்கி விட்டாலே மகாசக்தி நகர் பகுதியில் மழைநீர் தேங்குவது வாடிக்கையாக உள்ளது. சமீபத்தில் பெய்த மழைக்கு சாலை, தெருக்கள், வீடுகளை சூழ்ந்து மழைநீர் தேங்கி கிடக்கிறது. 3 நாட்கள் ஆகியும் மழைநீர் வழிந்தோடவில்லை, சக்கரக்கோட்டை பஞ்சாயத்து நிர்வாகத்திடம் கூறியும் மழைநீரை அகற்ற நடவடிக்கை இல்லை. மழைநீர் குளம் தேங்கி கிடப்பதால், துர்நாற்றம் வீச துவங்கி விட்டது.

இதனால் குழந்தைகள் முதல் முதியோர் வரை சளி,இருமல்,காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் வரும் அபாயம் உள்ளது.சிறுவர்கள் பள்ளிக்கு போகும்போது தேங்கி நிற்கும் மழைநீரால் சீருடைகள் நனைகிறது. டூவீலர் உள்ளிட்ட வாகனங்களை வெளியே எடுக்க முடியாமல் போக்குவரத்து முடங்கி வருகிறது. எனவே மகாசக்தி நகர் 8வது தெரு உள்ளிட்ட பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதுபோல் திருவாடானை அருகே மங்களக்குடி ஊராட்சி, ஊமை உடையான்மடை கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மங்களக்குடி- ஊமை உடையான் மடை செல்லும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரமுள்ள பிரதான சாலை கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு தார்சாலையாக போடப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த சூழலில் கடந்த சில ஆண்டுகளாக இந்த தார்சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமானதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

அவசர கால சிகிச்சை மற்றும் பிரசவம் உள்ளிட்ட மருத்துவ உதவிக்காக 108 ஆம்புலன்ஸை அழைத்தால் கூட அப்பகுதிக்கு செல்ல முடியாத சூழல் நிலவி வருகிறது.
மேலும் பருவமழை துவங்கி விட்டதால் அப்பகுதி விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களில் உள்ள பயிர்களுக்கு தேவையான உரம், பூச்சிமருந்து உள்ளிட்ட வேளாண் இடுபொருட்களை இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் இந்த சேதமடைந்த சாலையின் வழியாக கொண்டு செல்லும்போது விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். மேலும் அப்பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் இந்த சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் சூழ்ந்து ஓட வழியின்றி சாலை முழுவதும் தேங்கி நிற்பதால் குளம், குட்டை போல் காட்சியளிக்கிறது.

இந்த சூழலில் அச்சாலையில் உள்ள பள்ளங்களில் தேங்கி நிற்கும் மழைநீரால் கொசு உற்பத்தியாகி அதனால் மலேரியா, டெங்கு, வைரஸ் உள்ளிட்ட மர்ம காய்ச்சல் ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் அப்பகுதி சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.இரவு நேரங்களில் இந்த குண்டும், குழியுமான சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால் அவ்வழியாக செல்லும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை இந்த சாலையில் உள்ள பள்ளங்களை கணிக்க முடியாமல் கீழே விழுந்து சிறுகாயங்களுடன் எழுந்து செல்லும் சூழல் உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ஆகையால் 2 கிலோ மீட்டர் தூரமுள்ள இந்த குண்டும், குழியுமான சாலையில் தேங்கிய மழைநீரை உடனடியாக வெளியேற்றி விட்டு சாலையை சீரமைத்து புதிய தார்சாலை அமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டுமென அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில்: இந்த மங்களக்குடி- ஊமை உடையான்மடை செல்லும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரமுள்ள பிரதான சாலை கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு தார்சாலையாக போடப்பட்டது.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த சாலை மிகவும் சேதமடைந்து குண்டும்,குழியுமாக உள்ளது. தற்போது பெய்து வரும் தொடர் மழையாலும் சாலையில் ஆங்காங்கே உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்பதாலும், இப்பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை நடந்து செல்லும்போதும், இப்பகுதி வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்டிச் செல்லும் போதும் இந்த சாலையில் உள்ள பள்ளங்களை சரியாக கணிக்க முடியாமல் விபத்தில் சிக்கி காயமடைந்து செல்கின்றனர்.

மேலும் இப்பகுதியில் தற்போது விவசாய பணி நடைபெற்று வருவதால், விவசாயிகள் வேளாண் இடுபொருட்களான உரம், பூச்சிமருந்து உள்ளிட்டவைகளை தங்களது இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் கொண்டு செல்லும்போது, சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் அதனை கணிக்க முடியாமல் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். இந்த குண்டும், குழியுமான சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு அதனால் தொற்றுநோய் பரவும் சூழலும் நிலவுகிறது.

எதிர்பாராத விதமாக அவசர கால சிகிச்சைக்கு 108 ஆம்புலன்ஸ் சேவையை தொடர்பு கொள்ளும் போது இந்த சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் இப்பகுதிக்கு வந்து நோயாளிகளை ஏற்றிச் செல்வதற்கு அச்சப்படுகின்றனர். இந்த சூழலில் இந்த சேதமடைந்த சாலையை சீரமைக்ககோரி மங்களக்குடி ஊராட்சி நிர்வாகத்தினரிடமும், திருவாடானை வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகையால் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் குண்டும், குழியுமானதால் சேதமடைந்து மழைநீர் சூழ்ந்துள்ள இந்த சாலையை மாவட்ட நிர்வாகம் உடனடியாக சீரமைத்து புதிய தார்ச்சாலை அமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென கூறினார்.

The post கொட்டி தீர்த்த கன மழையால் சாலை, குடியிருப்புகளை சூழ்ந்து நிற்கும் மழை தண்ணீர் appeared first on Dinakaran.

Related Stories: