வணிகவரித்துறையில் இந்த ஆண்டு ரூ.7,800 கோடி கூடுதல் வருவாய்: அமைச்சர் மூர்த்தி தகவல்

சென்னை: கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வணிகவரித்துறையில் ரூ.7,800 கோடி கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை அலுவலகக் கூட்டரங்கில் 2024, செப்டம்பர் மாதத்திற்கான அனைத்து இணை ஆணையர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வணிகர் நல வாரியம் சார்பில் மறைந்த வணிகரின் குடும்பத்தினரான பட்டுக்கோட்டையை சார்ந்த சந்தானலெட்சுமிக்கு குடும்ப நல நிதி உதவித் தொகையாக ரூ.3 லட்சம், கும்பகோணத்தை சார்ந்த ராஜசேகருக்கு மருத்துவ நிதி உதவித் தொகையாக ரூ.50 ஆயிரம் காசோலைகளை அமைச்சர் வழங்கினார்.

வணிகவரித் துறையில் கடந்த 2023-2024 நிதி ஆண்டின் முதல் ஆறு மாதங்கள் (செப்டம்பர் வரை) ரூ.59,758 கோடியும், 2024-2025 நிதி ஆண்டின் முதல் ஆறு மாதங்கள் (செப்டம்பர் வரை) ரூ.67,548 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த நிதி ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு செப்டம்பர் வரை கூடுதலாக ரூ.7800 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. அதேபோல பதிவுத்துறையில் கடந்த 2023-2024 நிதி ஆண்டின் முதல் ஆறு மாதங்கள் (செப்டம்பர் வரை) ரூ.9378 கோடியும், 2024-2025 நிதி ஆண்டில் முதல் ஆறு மாதங்கள் ரூ.10,663 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த நிதி ஆண்டின் வருவாயுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு செப்டம்பர் வரை கூடுதலாக ரூ.1285/- கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

வணிகவரி மற்றும் பதிவுத்துறை வருவாய் 2024-25 நிதி ஆண்டின் செப்டம்பர் வரை ரூ.78,211 கோடியும் கடந்த நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.9085 கோடி கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பம் மற்றும் தரவுகளை பயன்படுத்தி தமிழக வணிகவரித் துறை வருவாயை மேலும் கூட்டுவதற்கு உள்ள சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அவற்றை செயல்பாட்டிற்கு கொண்டு வர அனைத்து கூடுதல் ஆணையர்களும் இணை ஆணையர்களும் ஒன்றினைந்து ஆக்கபூர்வமாக செயலாற்றிட வேண்டுமென்று அமைச்சர் அறிவுறுத்தினார். கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் பிரஜேந்திர நவ்நீத், வணிகவரித்துறை ஆணையர் ஜகந்நாதன், இணை ஆணையர் துர்கா மூர்த்தி மற்றும் வணிகவரித்துறை உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

The post வணிகவரித்துறையில் இந்த ஆண்டு ரூ.7,800 கோடி கூடுதல் வருவாய்: அமைச்சர் மூர்த்தி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: