சட்டப் பேரவை தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் 14ல் ஜம்மு-காஷ்மீர்; 15ல் அரியானா மாநில முதல்வர்கள் பதவியேற்பு: விழா ஏற்பாடுகள் தீவிரம்; அமைச்சர்கள் பதவிக்கு போட்டி

சண்டிகர்: அரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றுள்ள நிலையில், வரும் 15ம் தேதி புதிய அரசு பதவியேற்கிறது. அதேபோல் ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி வரும் 14ம் தேதி பதவியேற்கிறது.

அரியானாவில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் பாஜக 48 தொகுதிகளில் வெற்றி பெற்று தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. காங்கிரஸ் 37 தொகுதிகளிலும், இந்திய தேசிய லோக் தளம் 2 இடங்களிலும் வெற்றி பெற்ற நிலையில், 3 தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதன்மூலம் பாஜகவின் பலம் 51 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், பாஜக மீண்டும் அறுதிப் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றதை அடுத்து புதிய அரசு வரும் 15ம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல்வராக மீண்டும் நயாப் சிங் சைனியை நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவரோடு சிலர் அமைச்சர்களாக பொறுப்பேற்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்த விழாவில் பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதனால் வரும் 15ம் தேதி பஞ்ச்குலா நகரில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள, உயர் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னதாக அரியானாவில் 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சி உள்ளது. மாநிலத்தின் முதல்வராக மனோகர் லால் கட்டார் இருந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய முதல்வராக நயாப் சிங் சைனி பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரியானா தேர்தலுடன் ஜம்மு – காஷ்மீரில் நடந்த பேரவை தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ் கூட்டணி 52 இடங்களை கைப்பற்றி புதிய அரசை அமைக்கவுள்ளது. 2019ல் ஜம்மு – காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின் முதல் முறையாக தேசிய மாநாட்டு கட்சியின் துணை தலைவரான உமர் அப்துல்லா கூட்டணி அரசின் முதல்வராகிறார்.

முன்னதாக தேசிய மாநாட்டு கட்சி புதிய அரசை அமைக்க காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ ஆதரவினை நேற்று தெரிவித்தது. ஜம்மு – காஷ்மீர் மாநில காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீது கர்ரா கூறுகையில், ‘எங்களது கட்சியின் 6 சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்ட காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சிக் கூட்டம் நடந்தது. அதில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றி, தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கான ஆதரவு கடித்தில் கையெழுத்திட்டனர். உமர் அப்துல்லாவை முதல்வராக ஏற்றுக்கொள்கிறோம். கூட்டணி அரசில் அமைச்சர்கள் யார் யார்? என்பது குறித்து பேசி முடிவெடுப்போம்’ என்றார்.

இதனிடையே ஜம்மு – காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி துணை தலைவரான உமர் அப்துல்லா, புதிய அரசு ஆட்சி அமைப்பதற்கான உரிமையை துணை ஆளுநரிடம் கோரினார். அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் தேசிய மாநாட்டு கட்சிக்கான ஆதரவு கடிதத்தை, துணைநிலை ஆளுநர் அலுவலகத்தில் கொடுத்துள்ளது. சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை போதிய அளவில் இருப்பதால், நாளை மறுநாள் (அக். 14) உமர் அப்துல்லா தலைமையில் கூட்டணி அரசு பதவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

The post சட்டப் பேரவை தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் 14ல் ஜம்மு-காஷ்மீர்; 15ல் அரியானா மாநில முதல்வர்கள் பதவியேற்பு: விழா ஏற்பாடுகள் தீவிரம்; அமைச்சர்கள் பதவிக்கு போட்டி appeared first on Dinakaran.

Related Stories: