சுவையாக சமைப்பது மட்டுமல்ல… சுத்தமாக சமைப்பதும் அவசியம்! 

அவசர உலகம், காலை உணவு, மதிய உணவு என அனைத்தையும் ஒரே நேரத்தில் செய்துவிட்டுக் கிளம்பி ஓட வேண்டிய கட்டாயம் பெரும்பாலானா குடும்பங்களில் வந்துவிட்டன. அதிலும் கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்வோர் எனில் இன்னும் சிக்கல்தான். எவ்வளவு திட்டமிட்டாலும் முதல் நாள் பணிநேரம் அசதி, சோர்வு, இதெல்லாம் யாருக்குத்தான் இருக்காது. அதிலும் சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் என்னதான் ஆறு மணிக்கு அலுவலகம் முடிந்தாலும் வீட்டு வந்து சேர குறைந்தது ஏழு ஆகும். எனில் எங்கிருந்து சமையலைறை சுத்தம், பராமரிப்புகள் எனச் செய்வது. கூடுமானவரை எதோ ஒரு தோசையோ, இட்லியோ செய்து சாப்பிட்டுவிட்டுப் படுக்கத்தான் தோன்றும். ஆனால் இன்று நாம் சந்திக்கும் பலவிதமான உடல் உபாதைகளுக்கு மிக முக்கியக் காரணமே இந்த அவசர நிலைதான். என்னதான் வார நாட்களில் முடியவில்லை என்றாலும் வார இறுதிகள், விடுமுறைகள் இவற்றை சரியாகதிட்டமிட்டு வீட்டையும் பராமரிப்பது உடலுக்கும் ஆரோக்கியம் கொடுக்கும். இதோ சில டிப்ஸ்கள். சமைப்பதற்கு முன் தங்கள் கைகளை நன்கு சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும்.தலைமுடியை நன்றாக வாரிப் பின்னலிட வேண்டும்.

சமையலறை மற்றும் பாத்திரங்களைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.குறிப்பாக வாரம் ஒருமுறை வெயிலில் பாத்திரங்களைக் காய வைத்தால் இன்னும் சிறப்பு.கோணிப் பைகளின் மேல் வைத்துக் காய்கறிகளை நறுக்கக்கூடாது. கோணிப்பைகளில் ஈரம் பட்டால் கண்ணுக்கேத் தெரியாமல் பூஞ்சைகள் உருவாகும். அவை காய்கறிகளுடன் சேர்ந்துவிடும். காய்கறிகளைக் கழுவிய பின் நறுக்க வேண்டும். காய்களை வெட்டி நீருக்குள் போடும் பழக்கத்தைத் தவிர்க்கவும். ஏனெனில் சில காய்களில் நீரில் கரையும் ஊட்டச்சத்துகள் கரைந்துவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். போலவே வாழைக்காய், கத்தரிக்காய்களை சரியாக சட்டியில் போடுவதற்கு முன் வெட்டியும் பயன்படுத்தலாம். காய்கறிகளைக் நறுக்குவதற்குப் பயன்படுத்தும் கத்தி, அரிவாள் மனையை நறுக்குவதற்கு முன்பும், பின்பும் கழுவி உபயோகிக்க வேண்டும். அவற்றையும் சரியாக விளக்கி வைப்பது நல்லதுஅரிசி, பருப்பினை நன்றாகக் கழுவியப் பின் ஊறவைக்க வேண்டும். பயறு வகைகளை முந்திய தினமே ஊற வைக்க வேண்டும். குறிப்பாக சுண்டல் வகைகளை சில மணிநேரங்களில் ஊற வைத்து செய்துகொள்ளலாம் எனில் அதற்குரிய சுவையை நாம் பெற முடியாது.

முட்டைகளை வேகவைக்கும் போது தண்ணீரை நன்றாகக் கொதிக்க வைத்த பிறகு கழுவிய முட்டைகளைப் போட வேண்டும். சுமார் 7 நிமிடங்கள் வேகவைக்க வேண்டும். பிறகு வெந்த முட்டைகளை குளிர்ந்த நீரில் சிறிது நேரம் வைக்க வேண்டும். இதனால் முட்டைகளின் ஓட்டினை எளிதில் உறிக்க முடியும். வேக வைத்த முட்டைகளை இரண்டாக வெட்டி அதில் சிறிது மிளகுத் தூள் சேர்த்துக் கொடுக்க குழந்தைகளுக்கு சளி, இருமல் எளிதில் நீங்கும். இறைச்சிகளை உப்பு வைத்து ஒரு முறை தேய்த்துக் கழுவது அவசியம். சமையல் மேடை, அடுப்பு என சமைத்து முடித்தவுடன் துடைத்துவிட கரைகள் உடனே நீங்கும். அப்படியே கரைகளை விட்டுவிட்டு துடைக்கும் போது அவை காய்ந்து வர மறுக்கும். பெண்களுக்கென்ன வீட்டு வேலைகளை முழுமையாக ஒதுக்காமல், ஆண்களும், குடும்பத்தாரும் வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொண்டால் நிச்சயம் வீட்டுப் பராமரிப்பு அவ்வளவு பெரிய வேலையாக இருக்காது. குறிப்பாக வார இறுதி நாட்களில் பெண்கள் சமையலறைகளை சுத்தம் செய்வதில் ஈடுபட்டிருந்தால் ஒட்டடை அடிப்பது, மின் விசிறிகளைத் துடைத்தல், வீட்டை குடும்பமாக சுத்தம் செய்து அலமாரிகள், புத்தகங்களை அடுக்குதல் என பல வகைகளில் உதவ குடும்பம் பொருளாதாரத்தில் மட்டுமல்ல ஆரோக்கியத்திலும் உயரும்.
– அ.ப.ஜெயபால்

The post சுவையாக சமைப்பது மட்டுமல்ல… சுத்தமாக சமைப்பதும் அவசியம்!  appeared first on Dinakaran.

Related Stories: