ரிப்பன் மாளிகை எதிரே ஈவெரா சாலையில் நெரிசலை குறைக்க புதிதாக ‘யு’ டர்ன்: போக்குவரத்து போலீசார் நடவடிக்கை

சென்னை, அக்.10: ரிப்பன் மாளிகை எதிரே போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புதிதாக ‘யு’ டர்ன், சோதனை அடிப்படையில் நேற்று முதல் போக்குவரத்து போலீசார் அறிமுகம் செய்துள்ளனர். இதுகுறித்து சென்னை பெருநகர போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை ஈ.வெ.ரா சாலையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக, ஈவெரா சாலை மற்றும் பிஎஸ்சி சாலை சந்திப்பு அருகே புதிதாக ‘யு’ டர்ன் நேற்று முதல் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தற்போது ராஜா முத்தையா சாலையில் இருந்து பிஎல்சி சந்திப்புக்கு வரும் வாகனங்கள், பிஎல்சி சந்திப்பில் வலதுபுறம் திரும்பி, காந்தி இர்வின் சந்திப்பு நோக்கி செல்ல அனுமதிக்கப்படுவதால், ஈவெரா சாலையில் உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் இரண்டும் நிறுத்தப்படுவதால், காலை மற்றும் மாலை நேரங்களில் மேற்கண்ட சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

மேற்கண்ட போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், தற்போது பிஎல்சி சிக்னல் அருகே ரிப்பன் மாளிகை எதிரில் புதிதாக ‘யு’ டர்ன் அமைக்கப்பட்டு, ராஜா முத்தையா சாலையில் இருந்து பிஎல்சி சந்திப்பிற்கு வரும் வாகனங்கள் பிஎல்சி சந்திப்பில் வலதுபுறம் திரும்ப அனுமதிக்கப்படாமல், மேற்கண்ட புதியதாக அமைக்கப்பட்ட ‘யு’ டர்னில் அனுமதிக்கப்பட்டு, காந்தி இர்வின் சாலை சந்திப்பு நோக்கி செல்லலாம். இந்த போக்குவரத்து மாற்றத்தினால் வாகனங்கள் ஈவெரா சாலை மற்றும் பிஎல்சி சாலை சந்திப்பில் காத்திருப்பது குறைக்கப்படுவதுடன், போக்குவரத்தும் தங்கு தடையின்றி செல்லும். எனவே மேற்கண்ட போக்குவரத்து மாற்றமானது நேற்று மாலை 3 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post ரிப்பன் மாளிகை எதிரே ஈவெரா சாலையில் நெரிசலை குறைக்க புதிதாக ‘யு’ டர்ன்: போக்குவரத்து போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: