×

பிரச்னைகளை களைவாள் பிரத்யங்கிரா!

ஒரு கோயிலுக்கு மிக முக்கியமான ஒன்று, ஆகமம். அவை சரியாக இருந்தால்தான், கோயிலுள் பரிபூரணமான சாந்நித்தியம் இருக்கும். அப்படி, மிக துல்லியமாக கேரள ஆகமம் விதிகளோடு ஒன்றுபோன “ஸ்ரீ நாராயணி பிரத்யங்கிரா’’ பீடத்தை பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை அடுத்த மேலூர், அழகிய கிராமம். அய்யனார், மாணிக்க நாச்சியார் போன்ற ஊர் தேவதைகள் கோயில் கொண்டுள்ள இடம். இதில், ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் வழியாக சாலை ரோட்டில் பயணித்தால், மூலத்தோப்பு என்னும் இடம் வரும். அங்கிருந்து வண்ணத்துப் பூச்சி பூங்கா இடத்திற்கு செல்லும் வழியில், இந்த பிரத்யங்கிரா தேவி கோயில் இருக்கிறது.

மூலத்தோப்பு வழிநெடுக்க இயற்கை சூழல் காணப்படுகிறது. பிரத்யங்கிரா கோயில் உள்ளே நுழைந்ததும், கேரள மாநிலத்தில் எப்படி கோயிலின் கட்டுமானம் இருக்குமோ, அதே போன்று இருந்தது. இந்த கோயில் பற்றிய மேலும் பல தகவல்களை நிர்வாகி, ஸ்ரீசைலேஷன் கூறத் தொடங்கினார்.

“என் தந்தை செந்தாமரை கண்ணன், பிரத்யங்கிரா உபாசகர். அதிலும், “மஹா க்ருத்யா’’ என்று ஒரு அம்பாள் இருக்கிறாள், அதனை வழிபாடு செய்வதில் வித்தகர். 16 விதமான பிரத்யங்கிரா தேவிகளில், மிகவும் முக்கியமானவள், “மஹா க்ருத்யா’’ என்பவள்தான். அப்பா, வீட்டில் அத்திமரத்தால் ஆன மஹா க்ருத்யா பிரத்யங்கிரா அம்பாளை வடிவமைத்து, பூஜைகளை செய்துவந்தார். (உலகத்திலேயே அத்திமரத்தால் செய்த பிரத்யங்கிரா என்று கூறப்படுகிறது) 2004-ஆம் ஆண்டில், ஒரு நாள் அப்பா கடும் உபாசனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, “எனக்கு கோயில் ஒன்றை எழுப்பி நித்தியப்படி பூஜைகளை இன்னும் சிறப்பாக செய்யவேண்டும்’’ என்று பிரத்யங்கிரா அம்பாள் உத்தரவிட்டிருக்கிறாள்.

அம்பாள் உத்தரவிட்ட நாளில்தான், ஸ்ரீரங்கத்தில் திருமண மண்டபம் ஒன்று தீ விபத்தில் சிக்கிக் கொண்டது’’ என்றுகூறி நம்மிடம் உரையாடிய ஸ்ரீசைலேஷன் ஒரு நிமிடம் கண்களை மூடிக் கொண்டார். மேலும் தொடர்ந்து பேசியவர்;“அன்று முதல் பல இடங்களில் தேடியும் எங்களுக்கு கோயில் அமைக்க சரியான இடம் கிடைக்கவில்லை. இப்படியாக சுமார் இரண்டு வருடங்கள் சென்றுவிட்டன. 2007-ஆம் ஆண்டில், ஸ்ரீரங்கத்தை அடுத்த மேலூரில், ஓர் இடத்தை சுட்டிக் காட்டி, இங்கு எனக்கு கோயில் அமையுங்கள், என்று பிரத்யங்கிரா தேவியிடத்தில் உத்திரவு வர, முக்கால் ஏக்கரில் நிலத்தை வாங்கி கோயில் கட்ட தீர்மானித்தோம்.

மெல்லமெல்ல கோயிலின் சந்நதிகள் ஒவ்வொன்றாக வளர்ந்தன. வீட்டில் பூஜை செய்த, அத்திமரத்தால் ஆன மஹா க்ருத்யா பிரத்யங்கிரா அம்பாளை, பிரதிஷ்டை செய்ய முடிவு செய்தோம். மிக துல்லிய ஆகம விதிகளின் படி அமைக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். ஆகமம் என்பது, வேதம், வைத்தியம், வரதம், சிற்பம், சாஸ்திரம் ஆகிய ஐந்தும் அல்லவா… அதனை ஆராய்ந்து மகா மண்டபம், நிர்த்த மண்டபம், வாத்திய மண்டபம், ராஜ்ய மண்டபம் ஆகியவைகளை அமைத்து அதன் விதானத்தோடு (அளவுகள்) சரியான ஆகமத்தின் படி கோயிலை கட்டினோம்.
மேலும், நம்பர் ஒன் வைப்ரேஷன் உள்ள கருங்கற்களால் கோயிலை கட்ட தீர்மானித்தோம்.

ஆனால், நம்பர் ஒன் வைப்ரேஷன் கருங்கற்களாம், தற்போது கிடையாது என்பதனை அறிந்துக் கொண்டோம். ஆகையினால், நம்பர் டூ வைப்ரேஷன் கருங்கற்களை தேடினோம். அதன் பலனாக, “கிருஷ்ண கருங்கற்கள்’’ என்னும் நம்பர் டூ வைப்ரேஷன் கற்களை கண்டெடுத்தோம். இந்த கிருஷ்ண கருங்கற்களை கொண்டே கோயில் அமைத்தோம். அதனால், இந்த கோயிலுள் அதிகப்படியான காற்றோட்டம் இருக்கும். பிரச்னைகளோடு வரும் பக்தர்களுக்கு, மனநிம்மதி கிடைக்கும்.

ஆனால், அம்பாளுக் கென்று அமைத்த சந்நதியில், மாலோல நரசிம்மர் பிரதிஷ்டை ஆனார். ஆம்! 2012-ஆம் ஆண்டு, சௌமிய பிரத்யங்கிரா உற்சவர் அம்பாளுக்காக தனியாக தில்லை விதானம் அதாவது மூலவர் மற்றும் உற்சவரை ஒரே விதானத்தில் வைப்பதற்காக தெற்கு பார்த்தவாறு சந்நதி கட்டினோம். அந்த சமயத்தில், கோயிலில் திருட்டு ஒன்று நடந்தது. கோயிலின் விலையுயர்ந்த பொருட்கள் திருடப்பட்டுவிட்டன. ஆகையால், மீண்டும் தேவ பிரசன்னம் செய்து பார்க்கும் போது, இந்த சந்நதியில் மாலோல நரசிம்மர் வரவேண்டும் என்று உத்தரவு வந்தது.

இதற்கு இடையில், ஒருவர் நேபாளத்தில் இருந்து, நரசிம்ம மூர்த்தி சாளக்கிராமம் கொண்டுவந்திருக்கிறார். அதனை, என் தந்தைக்கு தானமாக வழங்க, அனைத்து நிகழ்வுகளும் ஒன்று சேர அமைந்திருக்கிறது. ஆகையால், முதலில் பிரத்யங்கிரா தேவிக்காக தெற்கு நோக்கி அமைத்த சந்நதியில், “தட்சிணே நாரசிம்மாயா’’ என்பதற்கு ஏற்ப, இப்போது மாலோல நரசிம்மரும், நரசிம்ம மூர்த்தி சாளக்கிராமமும் சந்நதி ஆகிவிட்டார்.

ஆகமம் விதிப்படி, ஒரு கோயிலை பிரித்தோமேயானால், ஒவ்வொரு பாகத்திற்கும் ஒவ்வொரு தேவதைகள் உள்ளன. அதன்படி, ஜனார்த்தன பாகத்தில் தெற்கு நோக்கி அருள்கிறார் நரசிம்மர். சனிக் கிழமைகளில், பாயசம் செய்து நிவேதித்தால், குழந்தை பாக்கியத்தை அருள்கிறார். அதே போல், தொடர்ந்து மூன்று சனிக் கிழமை, நரசிம்மருக்கு மாலை சாற்றினால், திருமணம் நடக்கிறது. இது அனுபவபூர்வமான உண்மை. இதற்கு நானே சாட்சி’’ என ஸ்ரீசைலேஷன் கூறினார். பிரதி சுவாதி நட்சத்திரத்தன்று, நரசிம்மருக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது.

“இங்கு வீற்றிருக்கும் உற்சவர் சௌமிய பிரத்யங்கிராதேவி, வேண்டுவோருக்கு அழகையும், அறிவையும் அருள்கிறாள். “சௌமியம்’’ என்றால் அழகு என்று அர்த்தம். அவள் அத்தனை அழகு. ஆகையால், அவள் அழகு மற்றும் அறிவைத் தருகிறாள். அதுபோக, பிரத்யங்கிரா மேரு ஒன்றையும் வைத்துள்ளோம். உலகத்திலேயே இரண்டே இரண்டு இடத்தில்தான் பிரத்யங்கிரா மேரு உள்ளது.

ஒன்று, காசியில் ஒரு வயதானவர் வைத்திருந்தார். மற்றொன்று நாங்கள் வைத்து ஆராதனைகள் செய்கிறோம். மேரு உபாசனை செய்வது விசேஷம். பிரத்யங்கிரா மேருவிக்கு அக்ஷ்டமி அன்று விசேஷ பூஜைகள் நடைபெறும்.கோயிலுக்குள் உள்ளே வந்ததும் இடதுபுறத்தில் “வைத்திய வீர வாராஹி’’ அம்மன் சந்நதி உள்ளது. பெயருக்கு ஏற்றாற்போல், பக்தர்களுக்கு வைத்தியம் பார்க்கிறாள். இவளது இடது கையில் மணி வைத்துள்ளாள்.

ஆகையால், மனநலம் பாதித்தவர்கள், பில்லி, சூனியம், ஏவல், கைகால் வீக்கம் ஆகியவைகளை குணப்படுத்துகிறாள். உண்மையாகவே இவைகள் எல்லாம் அம்பாள் குணப்படுத்துகிறாளா? என்கின்ற சந்தேகம் தோன்றலாம். தோன்றவும் வேண்டும். வேண்டுவோர் எல்லாருக்கும் அவரவர் வேண்டுவது நிறைவேறுமா? என்று கேட்டால், அது பிரத்யங்கிரா தேவியின் கையில் உள்ளது. அவள் மனது வைத்தால் நிச்சயம் நடக்கும். மேலும், அவரவரின் “கர்மா’’ என்று ஒன்று உள்ளதே! அந்த கர்மாவும் சரியாக வேலை செய்யும் ஆயின், அவளின் அருள் கிடைக்கும்.
அப்படி அருள் கிடைத்த ஒரு சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது. சவுத் ஆப்பிரிக்காவில் ஒரு குழந்தை கூடுதல் எலும்பு வளர்ச்சி நோயால் (Extra Bone Growth) பாதிக்கப்பட்டிருந்தது.

20 நிமிடத்திற்கு மேல் உட்காரவோ, படுத்துக் கொள்ளவோ முடியாமல் அந்த குழந்தை அவதிப்பட்டது. சிகிச்சையை மேற்கொள்வதற்காக, குழந்தை மற்றும் பெற்றோர்கள் மும்பை சென்றிருக்கின்றார்கள். அப்பொழுது, ஒரு சின்னக் குழந்தை பெற்றோரின் கையை பிடித்து, “நீங்கள் ஸ்ரீரங்கம் செல்லுங்கள். அங்கு மேலூரில் பிரத்யங்கிரா தேவி கோயில் இருக்கிறது. அங்கு சென்று வந்தால், உங்கள் பிரச்னை தீரும்’’. என்று சொல்லிவிட்டு, அந்த சின்னக் குழந்தை வேகவேகமாக நடந்து சென்றுவிட்டது. சிறிது நாட்களுக்கு பின், அந்த தம்பதிகள் குழந்தையோடு இந்த கோயிலுக்கு வந்தார்கள். நடந்தவற்றை கூறினார்கள்.

“நாங்கள் பிரசன்னம் போட்டுப் பார்ப்போம். அதில் அம்பாள் உத்தரவிட்டால் உங்கள் குழந்தைக்கு பரிகாரம் செய்வோம்’’ என்று பிரசன்னம் போட்டு பார்த்தோம். அவர்கள் கூறுவது உண்மைதான் என்று தெரிந்ததும், “சஷகம்’ என்னும் அபூர்வமான ஹோமம் ஒன்றை செய்து, அதின் மூலம் கஷாயம் செய்து, குழந்தைக்கு கொடுத்து குடிக்க வைத்தோம். அந்த குழந்தைக்கு பிரச்னை சரியானது. இதில் நாம் பார்க்கவேண்டியது, அந்த குழந்தையின் கர்மா சரியானதாக இருந்தது. அம்பாளின் அருளும் கிடைத்தது. ஆகையால், இரண்டும் ஒன்று சேர வேண்டும்.

“மேலும், இந்த கோயிலில் விநாயக பெருமான் கன்யா மூலையில் அமைத்திருக்கிறார். அவருக்கு, “சுப்ர பிரசாத கணபதி’’ என்று பெயர். “சுப்ர’’ என்றால் உடனே நடக்கும் என்று பொருள். ஆகையால், வேண்டியதை உடனே தந்துவிடுகிறார், விநாயகர். அதுமட்டுமா! கணபதிக் கென்றே தாந்த்ரீகத்தில் சொல்லப்பட்ட `கணபதி பஞ்சவர்ண பூஜை’ அதாவது கணபதிக்கு இன்னன்ன பூஜைகளை இப்படித்தான் செய்யவேண்டும் என்ற முறை இருக்கிறது.

அதை அப்படியே பூஜை செய்வதாலும், பக்தர்களுக்கு கணபதி, காரிய சித்தி செய்கிறார்.கோயில் சுற்றுப் புறத்தில் பலிபீடங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதுவும், முறைப்படி ஆகமம் விதிகளுக்கு உட்பட்டு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, “கோ’’ சாலை உள்ளது. எண்ணற்ற பல மாடுகள் வளர்க்கப்பட்டு, நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த பிரத்யங்கிரா தேவி கோயிலில், சுத்தமான நெய் அல்லது சுத்தமான நல்லெண்ணெயில் விளக்கேற்றுவது சிறப்பான பலனைக் கொடுக்கும்.

சமீபத்தில்தான் இந்த கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கர்மா எதில் கழியும்? என்று கேட்டால், கர்மா கிரியாவில் கழியும். கிரியா என்பது முழுக்க முழுக்க கோயிலில் கழியும். “கிரியா சாகரம்’’ என்றுதான் கோயிலுக்கு பெயர். அது போல, ஆகமத்துக்கு “பாஞ்சராத்திர ஆகம கிரியா தந்திரம்’’ என்றுகூட சொல்வார்கள் என்றுகூறி முடித்தார்.

ஆக, ஆகமத்துக்கே பெயர் போன இந்த பிரத்யங்கிரா தேவி கோயிலுக்கு சென்று, அவள் முன் பிரார்த்தித்தால், தீராத பிரச்னைகளுக்கு வழி பிறக்கும் அல்லவா! இந்த கோயிலில், அன்னதான கூடம், கோசாலை விரிவாக்கம், பித்ரு காரியக்கூடம் ஆகிய மேலும் சில கட்டுமான பணிகள் நடைபெற உள்ளன. இதில் கைங்கரியம் செய்யவும், கோயில் தொடர்புக்கும்:
ஸ்ரீசைலேஷன் – 9994090162

கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 8.30 முதல் 11.00 வரையிலும், மாலை 5.30 முதல் 7 வரை.

எப்படி செல்வது: ஸ்ரீரங்கம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து மினி பேருந்து ஒன்று செல்கிறது. ஆனால் அது குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே செல்வதால், ஸ்ரீரங்கத்தில் இருந்து ஆட்டோ மூலமாக பயணிக்கலாம்.

பிரத்யங்கிரா என்பவள் யார்?

பிரத்யங்கிரஸ் – அங்கிரஸஸ் எண்ணும் இரண்டு மகரிஷி. இவர்கள்தான் முதல் முதலில் பிரத்யங்கிராதேவியை வழிபாடு செய்கிறார்கள். 16 சோடச காளி இருக்கிறார்கள். அதில் பிரத்யங்கிரா என்பவளும் ஒரு காளி. “அதர்வண பத்ர காளி’’ என்றும் பெயர் உண்டு. நரசிம்மரின் பெண்பால்தான் பிரத்யங்கிரா தேவி என்றும் சொல்லப்படுகிறது. அதே போல், இலங்கையை ஆண்ட ராவணனின் குலதெய்வம். பிரத்யங்கிரா தேவிக்கு அஷ்டமி தினமானது மிகவும் விசேஷம்.

ஹோமங்கள்

பிரதி அமாவாசைகளில், பிரத்யங்கிரா ஹோமம் நடைபெறுகிறது. அதே போல், “மன்யு ஸுக்த’’ ஹோமம் நரசிம்மருக்கும், வராஹி அம்மனுக்கு பிரதி பஞ்சமி திதி அன்று ஹோமமும், தேய்பிறை சதுர்த்தி அன்று விநாயகருக்கு ஹோமமும் நடைபெறுகின்றன. மேலும், நவராத்திரி 9 நாட்களும் 16 விதமான பிரத்யங்கிரா தேவிகளுக்கு நவ கலச ஸ்தாபனம் (9 கலசங்கள்) செய்து, நாள் ஒன்றுக்கு மூன்று அல்லது நான்கு தேவியர்கள் வீதம், ஹோமங்கள் நடைபெறுகின்றன.

உடனடியாக காரிய சித்திக்கு, விலங்கினை பலியிட்டு அதனைக் கொண்டு ஹோமத்திற்கு ஆவாஹனம் செய்தால், பயன்கிட்டும். தற்போது அவைகள் எல்லாம் சாத்தியமில்லை. ஆகையால், கருப்பு உளுந்து வடை செய்து, அதனை தேனில் கலந்து ஹோமம் செய்கிறோம். எருமை தயிரில் வடை ஆகியவையின் மூலம் ஹோமங்கள் நடத்தப்படுகின்றன.

சித்ரகூட நாகர்கள்

எங்கும் காணாத வகையில், கேரளா கோயில்களில் எப்படி நாகர்களுக் கென்றே தனியாக சித்ரகூடம் (பாப்புகளுக்கென்று தனி வீடு) அமைத்திருப்பார்களோ, அது போல, இந்த கோயிலிலும் நாகர்களுக் கென்று தனியாக சித்ரகூடம் அமைக்கப்பட்டுள்ளது. காரணம், அந்த தேவதை (நாகம்) சுதந்திரமாக எங்கு வேண்டுமானாலும் செல்லக் கூடியது. அதனை கோயினிலுள் பிரதிஷ்டை செய்வது ஆகமம் படி அத்தகைய சிறப்பானதல்ல.

ஆகையால்தான், கேரள ஆகம முறைப்படி கோயிலின் வெளியே நாகர்கள் பிரதிஷ்டை செய்து, அதன் அருகிலேயே அவை தங்குவதற்கும் சித்ரகூடம் (வீடு) அமைக்கப்பட்டது. வருடத்தில் வருகின்ற மஹா ஆயில்யம் அன்று, நாகர்களுக்கு பூஜைகள் மற்றும் ஹோமங்கள் நடைபெறுகின்றன.

பிரார்த்தனை

பியூர் சந்தனத்தால் ஆன சந்தனத்தைக் கொண்டு, “களபம் சார்த்து’’ (சந்தானம் சாற்றுதல்) என்று கேரளாவில் கூறுவார்கள். தீராத பிரச்னைக்கு, பஞ்சமி அல்லது சப்தமி தினங்களில் அல்லது அவர்களுடைய ஜென்ம நட்சத்திரம் தினத்தில், வாராஹி அம்மன், நரசிம்மர், விநாயகர் ஆகிய கடவுள்களுக்கு முகத்தில் மட்டும் சந்தனம் சாற்றப்படும். அதனை பிரசாதமாக கொடுக்கப்படும். மேலும், உற்சவர் அம்பாளுக்கு பௌர்ணமி அன்று அபிஷேகம் நடைபெறுகிறது.

விசேஷங்கள்

ஆவணி முதல் ஐப்பசிகுள், பவித்தோற்சவம் மூன்று நாட்கள் நடைபெறும். வருடத்திற்கு மூன்று நாட்கள் பிராயச்சித்த உற்சவம், பாக்ய ஸுக்தத்தினால் அர்ச்சனை ஆகியவை நடைபெறுகின்றன. அதே போல், மிகவும் விசேஷமாக “சக்ராப்தி பூஜை’’ நடைபெறுகிறது.

பிரசாதம்

கடும் பாயசம் என்று கேரளா கோயில்களில் பிரசிதம். “கடும் பாயசம்’’ என்பது, திகட்ட திகட்ட தித்திக்கும் இனிப்புடன் பாயசம் செய்வார்கள். அதனைத்தான் நிவேதிப்பார்கள். அதே போல், இங்கும் கடும் பாயசம் மற்றும் கோதுமை ரவையில் பாயசம் நிவேதிக்கப்படுகிறது. நார்த்தங்கா சாதம், உப்பு இல்லாத உளுந்து சாதம், கஷாயம் ஆகியவைகளும் பிரார்த்தனை மூலம் நிவேதித்து, பிரசாதமாக வழங்கப்படுகிறது.

The post பிரச்னைகளை களைவாள் பிரத்யங்கிரா! appeared first on Dinakaran.

Tags : Agamum ,Sri Narayani Pratyangira ,Kerala ,Trichy District Srirangatha ,
× RELATED புளியரையில் கலெக்டர், எஸ்பி தீவிர...