வேதம் கேட்ட விநாயகர்
திருவையாறு சப்தஸ்தானத் தலங்களுள் ஒன்று, திருவேதிகுடு. மூலவர் வேதபுரீஸ்வரர் கர்ப்பக் கிரகத்தின் முன் மண்டபத்தில், வேத கோஷத்தைக் கேட்கும் அற்புதமான விநாயகர் தரிசனம் தருகிறார். வேதமுதல்வனின் கண்கள் மூடி, தலையைச் சாய்த்து ஊன்றிக் கேட்கும் பாணி அனுபவித்தால்தான் புரியும்.
தேவாரம் கேட்ட விநாயகர்
பக்தர்களுக்கு அருள் புரிந்து கொண்டிருந்த பெருமான், ஏனோ அதை நிறுத்துகிறார். கொள்ளிடத்தில் கரை புரண்டோடும் வெள்ளம். அதையும் மீறி தமிழோசை எங்கிருந்தோ வருகிறது. ஆமாம், தந்தையின் அருள்பெற்ற திருஞானசம்பந்தர்தான் தேவாரம் இசைக்கிறார். இந்தப் பிள்ளை, அந்தப் பிள்ளையின் தமிழை எப்படி ரசிக்கிறது பாருங்கள்! திருச்சிராப்பள்ளி, லால்குடியை அடுத்த அன்பில் என்ற இத்தலம் தேவாரத் தலங்களில் ஒன்று. விருத்தாசலம், காளஹஸ்தி ஆகிய இரு தலங்களிலும் விநாயகர் ஆழத்து விநாயகராய்க் காட்சி. விருத்தாசலத்தில் 14 படிகள் இறங்கிச் சென்று இவரை வழிபட வேண்டும்.
திருப்பரங்குன்றம்
சோமேசர் கோயிலை வெகு சிலரே அறிவார்கள். மிகப் புகழ்வாய்ந்த முருகன் கோயிலுக்கு வெகு அருகில் உள்ளது. உள்ளே நுழைந்ததும் உள்ள பெரிய மண்டபத்தில், தன் மார்புக்கு எதிரில் கைகூப்பிய வண்ணம், தலைக்கு மேல் இருகரம் உயர்த்தி, அரோகரா சொல்லும் பாணியில், கையில் கதையுடன், அரக்கன் தோளில் என்று நான்கு வகை விநாயகர்கள் காட்சி. அடுத்த முறை திருப்பரங்குன்றம் சென்றால் மறக்க வேண்டாம்.
பஞ்சமுக விநாயகர்
நாலு பக்கமும் நாலு தலை, இவற்றுக்கு மேல் ஒரு தலை என்ற ரூபத்தில், சிம்ம வாகனத்துடன், ஹேரம்ப விநாயகராக நாகப்பட்டினம் நீலாயதாட்சி கோயிலில் காணப்படுகிறார். சென்னை கச்சாலீஸ்வரர் கோயிலில் இந்த மூர்த்தம் தன் மனைவிகளுடன் எட்டுக் கைகளுடனும், சிங்க வாகனத்துடனும் வேறு மாதிரி காணப்படுகிறது. திருவொற்றியூரில் சிங்க வாகனத்துடன், ஐந்து தலைகளும் ஒரே வரிசையில் கொண்ட பஞ்சமுக விநாயகர் அமர்ந்த நிலையில் காட்சி.
பல வித விநாயகர்கள்
*குற்றாலம் சித்ர சபையில் 32 விநாயகர்கள் சித்திரம் காணப்படுகிறது.
*ராமேஸ்வரம் சங்கர மடத்தில் சிலை வடிவில் பதினாறு வகையான கணபதி திருமேனிகளைக் காணலாம்.
*திருச்சி தாயுமானவர் ஸ்வாமி கோயிலில் குன்றின் உச்சியில் இருப்பவர், “உச்சிப் பிள்ளையார்’’. மலைக் கோயிலின் கீழே “மாணிக்க விநாயகர்’’. இதே உச்சிப் பிள்ளையார் என்ற பெயருடன் கணபதி, கும்பகோணத்திலும் விளங்குகிறார்.
*நடக்கும் விநாயக மூர்த்தத்தை திருச்சிக்கு அருகில் பேட்டைவாய்த்தலை என்ற ஊரில் மத்யார்ஜூனேஸ்வரர் கோயிலில் காணலாம்.
*சுசீந்திரம் கோயிலில் இரட்டை எலிகளை வாகனமாகக் கொண்ட நீலகண்ட விநாயகர் விளங்குகிறார். திருப்பாதிரிப் புலியூரில் விநாயகர் பாசம் அங்குசத்திற்கு பதிலாக பாரிஜாத மலர்களைத் தம் இரு கரங்களிலும் ஏந்தி உள்ளார்.
*தஞ்சை மாவட்டம் திருப்புறம்பியம் திருத்தலத்தில் பிரளயம் காத்த விநாயகர் உள்ளார். இவருக்கு விநாயக சதுர்த்தியன்று அபிஷேகம் செய்யப்படும் தேன் பூராவும் உட்சென்று விடுகிறது.
*சூரியனார் கோயிலில் உள்ள விநாயகருக்குக் கோள் தீர்த்த விநாயகர் என்று பெயர். பிரம்மனின் சாபத்தால் ஏற்பட்ட நோய் நீங்க, நவக்கிரகங்கள் இந்த விநாயகரை வழிபட்டு குணம் அடைந்தன.
*ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தில் விநாயகர் புல்லாங்குழல் வாசிக்கும் நிலையில் காணப்படுகிறார்.
*கணபதியை மண்டையோட்டு மாலையுடன் கும்பகோணத்தை அடுத்த தேப்பெருமாநல்லூர் என்ற தலத்தில் காணலாம்.
*மதுரை, திருச்செந்தூர், சிதம்பரம், குமரக்கோட்டம் முதலிய தலங்களில் முக்குறுணி விநாயகர் மிகப் பெரிய திருவுருவத்தில் விளங்குகிறார்.
*கர்நாடகத்தில் ஹம்பியில் இரண்டு பெரிய கணேச மூர்த்தங்கள், பத்தடி உயரம் ஒன்று. ‘கசிவு கல்லு’ என்று பெயர். கடுகளவு என்று அர்த்தம். இருபது அடி உயரம் ஒன்று.
*சென்னையை அடுத்துள்ள பொன்னேரிக்கு அருகேயுள்ள சின்னக் காவணம் என்ற கிராமத்தில் உள்ள கோயிலில், அங்கோள விநாயகர் அருள்கிறார். அழிஞ்சில் சிற்றழிஞ்சில் (அங்கோளம்) என்ற மரத்தடியில் இவர் உள்ளார். அழிஞ்சில் மரத்துக்கு ஒரு தனித்தன்மை உண்டு. இதன் விதைகள் கீழே உதிர்ந்தாலும், மறுபடியும் மரக் கிளைகளில் போய் ஒட்டிக் கொள்ளும். இதன் அடியில் ஒரு அடியவர் 108 சிவலிங்கங்களை பிடித்து வைத்தார். 108ம் லிங்கம் பிடித்து வைத்ததும், எல்லாமாய்ச் சேர்ந்து ஒரு பிள்ளையாராக ஆகிவிட்டது. தமிழ்த் தென்றல் திருவிக அவர்கள் சில காலம் வாழ்ந்து வந்தது இவ்வூரில்தான்.
*காஞ்சிபுரத்தில் சப்பாணிப் பிள்ளையார் கோயில் பிரசித்தம். சங்கு வடிவில் உள்ளார். சங்கு பாணிப் பிள்ளையார் மருவி சப்பாணிப் பிள்ளையார் ஆகிவிட்டார்.
*திருக்கோவிலூரை அடுத்த கீழையூரில், பெரியானைக் கணபதி என்ற பெயரில் அவர் அருளுகின்றார். இவர்தான் ஔவைப்பாட்டி தன்னைப்பற்றி விநாயகர் அகவல் என்ற பாடலைப் பண்ணச் சொன்னவர். அகவல் விநாயகர் என்ற பெயரும் இவருக்கு உண்டு.
*விநாயகி என்ற பெண் வடிவத்திலான கணபதியை, சுசீந்திரம் ஸ்தாணுமாலயன் கோயிலில் காணலாம். மேலும், இந்த விநாயகி, புலிப் பாதங்களுடன், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், ஸ்வாமி சந்நதிக்கு நுழையும் வாயிலில் வலப்பக்கமாய் உள்ளார்.
*ஜெயங்கொண்ட சோழபுரம் அருகில் உள்ள உடையார் பாளையம் சிவன் கோயிலில் “வில்’’ விடுவது போன்ற தோற்றத்தில் விநாயகர் காணப்படுகிறார்.
*திருவண்ணாமலை ஆலயச் சுவரில், ஒரு சாண் உயரமே உள்ள விநாயகருக்கு ஆயிரம் யானைதிரை கொண்ட
விநாயகர் என்று பெயர்.
*திருநெல்வேலி நகரில் எண்ணாயிரம் பிள்ளையார் என்றும், ஆறுமுக மங்கலம், கிளாக்குளம் என்ற ஊர்களில் ஆயிரத்தெண் விநாயகர் என்றும் இவர் வழிபடப் பெறுகிறார்.
*எட்டயபுரத்தில், பிள்ளையாரின் பெயர் பட்டத்துப் பிள்ளையார். எட்டையபுர அரசர்கள் முடிசூடும் முன்பு இப்பிள்ளை யாரை வழிபட்டதால் இப்பெயர்.
*புதுவை மணக்குள விநாயகர் கோயிலில், பார்வதியின் இடுப்பில் புத்திர கணபதி மற்றும் ஆறுமுக கணபதி, மயில் வாகன கணபதி, யோக கணபதி, டுண்டி கணபதி, பார்வதி, சிவன், ராவணன், நம்பியாண்டார் நம்பி ஆகியோர்கள் பூஜிக்கும் கணபதி திருவுருவங்கள் உள்ளன. இந்த மணக்குள விநாயகரை வைத்தே மகாகவி பாரதியார், விநாயகர் நான்மணிமாலை இயற்றினார்.
The post துன்பம் யாவையும் தீர்த்து வைக்கும் பிள்ளையார் appeared first on Dinakaran.