ஒரு சமயம் நாரதரும் கிருஷ்ணரும் அளவளாவிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது நாரதர், தன் மனதில் இருக்கும் சந்தேகத்தை வெளிப்படையாக கிருஷ்ணரிடம்
கேட்க நினைத்தார்.
‘‘கிருஷ்ணா, எனக்கு ஒரு சந்தேகம்
இருக்கிறது. நிவர்த்தி செய்வாயா?’’
‘‘அவசியம் செய்கிறேன். என்ன சந்தேகம்?’’
‘‘நீ மாயைகள் காட்டுவாய் என்பது தெரியும். நான் ஒரு பிரம்மஞானி. பிரம்மத்தை அறிந்தவன். உன்னுடைய மாயையானது என்னைக்கூட கட்டுப்படுத்துமா கிருஷ்ணா? எனக்குக் கொஞ்சம் விளக்கமாகக் கூறுவாயாக.’’ ஆயக்கலைகள் அறுபத்து நான்கையும் அறிந்த நாரதனுக்கு இப்படி ஒரு சந்தேகமா என்று எண்ணியபடி கிருஷ்ணர் ஒரு மர்மப் புன்னகையை உதிர்த்தார்.
‘‘சரி. இப்பொழுது எதிரில் ஒரு குளம் தெரிகிறது அல்லவா? அந்தக் குளத்தில் நீராடிவிட்டு வா. உன் மகதியை இங்கு கரையில் வைத்து விட்டுச் செல்.
நான் பார்த்துக் கொள்கிறேன்’’ என்றார். நாரதர் நன்றாக அந்தக் குளத்தில் மூழ்கிக் குளித்துவிட்டு, சாவதானமாக எழுந்து குளக்கரை படிகளில் ஏறினார். ஆனால், அவர் அப்பொழுது நாரதராக இருக்கவில்லை. ஒரு பெண்மணியாக மாறி இருந்தார். சாதாரண பெண்மணி அல்ல. தேவலோக அப்சரஸ்கள் எல்லாம் தோற்றுப் போகும்படியான ஒரு வசீகரமான முகத்துடன், ஒயிலான, அழகான, அளவான அங்க அமைப்புகளுடன் கூடிய ஒரு பெண்ணாகத் தோற்றம் கொண்டிருந்தார்.
அவர் குளக்கரையின் மேலே ஏறிய பொழுது. முன்பு, தான் நாரதராக இருந்தோம் என்பதையே மறந்துவிட்டிருந்தாள். வைத்துவிட்டுப் போன மகதி அங்கு இல்லை. கிருஷ்ண பரமாத்மாவும் அங்கு இல்லை. சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே தன் பெயரை மறந்து, இருப்பிடம் மறந்து, அன்னத்தை தோற்கடிக்கும் அழகான நடையுடன் நடந்து வந்து கொண்டிருந்தாள். அப்பொழுது அந்த நாட்டு அரசனானவன், குதிரையில் அவளுக்கு எதிரே வந்து கொண்டிருந்தான்.
`இப்படி ஒரு அழகான பெண்ணை இதுவரைக்கும் நான் பார்த்ததே இல்லையே. இந்தப் பெண் யாராக இருக்கக்கூடும்? இவளை திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை சிறப்பாக அமையும்’ என்று எண்ணியபடி நாரதப் பெண்ணின் அருகில் வந்தான். ‘‘பெண்ணே நீ யார்? உன் பெயர் என்ன? நான் இந்த நாட்டு அரசன். உன்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். என்னை மணந்து கொள்கிறாயா?’’ என்றார்.
‘‘என் பெயரையோ ஊரையோ கேட்காதீர்கள். எனக்கு எல்லாமே மறந்து போனது போல் இருக்கிறது. ஆனால், நான் உங்களை மணக்க சம்மதம் தெரிவிக்கிறேன்’’ என்றாள். மிகுந்த உற்சாகம் அடைந்த அரசன், நாரதப் பெண் சொன்ன மாத்திரத்தில் அப்படியே அவளைத் தூக்கி தன் குதிரையில் அமர வைத்து அரண்மனைக்குச் சென்றான். அங்கு அவர்கள் இருவருக்கும் கோலாகலமாகத் திருமணம் நடந்தது. இல்வாழ்க்கை மிகவும் இன்பமாகவும், சுமுகமாகவும் சென்றது. அதன் அடையாளமாக இரண்டு குழந்தைகளும் அவர்களுக்குப் பிறந்து, வளர ஆரம்பித்தார்கள்.
திடீரென்று பக்கத்து தேச அரசன், நாரதப் பெண் இருக்கும் அந்த தேசத்தின் மீது படை எடுத்து வந்தான். இரண்டு தேசங்களுக்கும் போர் மும்முறமாக நடந்தது. அந்தப் போரில் நாரத பெண்ணின் கணவனான அந்த அரசன் மாண்டு போனான். இதை தெரிவிக்க சேவகர்கள் நாரதப் பெண்ணை அணுகினார்கள்.
‘‘அரசியே நம் அரசர் போரில் மாண்டுவிட்டார். அண்டை நாட்டு வீரர்கள் உங்களையும், சிறுவர்களையும் சிறைப் பிடிக்க விரைந்து வந்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் தயவு செய்து இங்கிருந்து குழந்தைகளுடன் தப்பித்து ஓடி விடுங்கள்’’ என்று கூறினார்கள். நாரதப் பெண்ணானவள், ஒரு குழந்தையை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு, ஒரு குழந்தையை கையில் பிடித்துக் கொண்டு வேகமாக அங்கிருந்து தப்பித்து ஓடலானாள்.
அண்டை நாட்டு வீரர்கள் அவளை துரத்த ஆரம்பித்தார்கள். அவள் ஓடிய வேகத்தில் கையில் பிடித்திருந்த குழந்தையின் பிடி தளர்ந்ததால், காப்பாற்றவும் முடியாமல் குழந்தையை நழுவ விட்டாள். அண்டை நாட்டு வீரர்கள் அவளைத் தொடரும் சப்தம் கேட்க, வேகமாக மேட்டிலும் பள்ளத்திலும் அவள் ஓடிய வேகத்தில் இடுப்பில் இருந்த குழந்தையும் கீழே நழுவி விழுந்தது. அவள் தொடர்ந்து ஓடலானாள்.
சிறிது தூரம் ஓடிய பிறகு அண்டை நாட்டு வீரர்களின் காலடிச் சத்தம் நின்று போனது. மேற்கொண்டு அவர்கள் அவளைத் துரத்தவில்லை என்பதை ஊர்ஜிதப் படுத்திக் கொண்டு, ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து கதறி அழலானாள். அப்பொழுது கிருஷ்ண பகவான், முனிவரைப் போன்ற வேடத்தில் அங்கு வந்தார். அவள் அழுவதற்கான காரணத்தைக் கேட்டார். நாரதப் பெண் நடந்ததை முழுவதும் அவரிடம் விளக்கினாள். அப்பொழுது அந்த முனிவர், ‘‘இதோ இங்கு இருக்கும் குளத்தில் மூழ்கிக் குளித்துவிட்டு எழுந்து வா. உனக்கு மனது தெளிவு படும்’’ என்று கூறினார்.
அவளும் அந்தக் குளத்தில் நன்கு மூழ்கிக் குளித்தாள். குளக்கரைப் படிகளில் ஏறி வரும் பொழுது நாரதப் பெண்ணின் உருவம் போய், நாரதரின் உருவம் வந்தது. நடந்தது அனைத்தும் நாரதருக்கு நினைவிற்கு வந்தது. அவர் வைத்து விட்டுப் போன மகதி வீணை, குளக்கரையிலேயே இருந்தது. கிருஷ்ண பகவானும் அங்கு காத்துக் கொண்டிருந்தார்.
‘‘கிருஷ்ணா, என்னை மன்னித்துவிடு. என்னை மாயை பீடிக்காது என்கிற அகம்பாவத்தில் இருந்துவிட்டேன். எல்லோருமே மாயையால் பீடிக்கப்படுவார்கள் என்பது எவ்வளவு நிதர்சனமான உண்மை. எல்லோரும் மாயையிலிருந்து விடுபட உன்னை சரணாகதி செய்ய வேண்டும் என்பதையும் புரிந்து கொண்டேன்’’ என்று கூறி, வாசுதேவனை வணங்கி நின்றார் நாரதர்.
மாலதி சந்திரசேகரன்
The post பெண்ணாக மாறிய நாரதர் appeared first on Dinakaran.