செங்கோட்டை : தமிழக – கேரள எல்லையான புளியரை சோதனை சாவடி பகுதியில் தென்காசி கலெக்டர், எஸ்பி தீவிர சோதனையில் ஈடுபட்டனர். கேரள கழிவுகளை ஏற்றி வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்தார்.கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட மருத்துவக் கழிவுகள் நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்ட நிலையில், இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தன.
இந்நிலையில், தமிழக -கேரள எல்லை பகுதியில் சோதனையை தீவிரபடுத்த தென்காசி எஸ்பி சீனிவாசன் மற்றும் கலெக்டர் கமல்கிஷோர் ஆகியோர் உத்தரவு பிறப்பித்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம், இரவு நேரங்களில் கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்களை தென்காசி கலெக்டர் கமல் கிஷோர் மற்றும் எஸ்பி ஒன்றிணைந்து சோதனை மேற்கொண்டனர். ஆய்வின் போது கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள், இறைச்சி கழிவுகள் உள்ளிட்ட கழிவுகள் தமிழகத்திற்குள் கொண்டு வரப்படாமல் தீவிர நடவடிக்கைகள் எடுக்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.
பின்னர் கலெக்டர் கமல் கிஷோர் கூறியதாவது. கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள் மற்றும் இறைச்சி கழிவுகள் உள்ளிட்டவைகள் தமிழ்நாட்டிற்குள் கொண்டு வராத வண்ணம் தீவிர சோதனைகள் மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், எலக்ட்ரானிக் கழிவுகள் உள்ளிட்ட பொருட்கள் தமிழகத்திற்குள் கொண்டு வந்து எரிக்கப்படுவது தொடர்பாக இதுவரை புகார்கள் வரவில்லை, ஆனால் அது தொடர்பாக புகார்கள் வந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
கேரளாவில் இருந்து சட்ட விரோதமாக இறைச்சி கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகளை தமிழகத்தில் வந்து கொட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தொடர்ந்து, தமிழக – கேரள எல்லையான புளியரை பகுதியில் போலீசார், வருவாய்த் துறையினர், கால்நடை பராமரிப்பு துறையினர் ஒன்றிணைந்து தற்போது சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இந்த சோதனைகளானது மேலும் தீவிரபடுத்தப்படும் எனவும் கலெக்டர் தெரிவித்தார்.
The post புளியரையில் கலெக்டர், எஸ்பி தீவிர சோதனை- கழிவுகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை என எச்சரிக்கை appeared first on Dinakaran.