×

சிறு துளி… பெரு மன நிறைவு!

நன்றி குங்குமம் தோழி

‘‘புற்றுநோய் பாதித்தவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்து அவர்களுடைய கடினமான சூழ்நிலையில் உடன் இருப்பதே எனக்கு பெரும் ஆசுவாசம்’’ என்கிறார் டெய்சி ராணி. இவர் புற்றுநோயால் பாதித்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து தேவையான உதவிகளை செய்து வருகிறார். ‘‘எனக்கு சொந்த ஊர் புதுக்கோட்டை. கல்யாணமாகி இப்போ சென்னையில் இருக்கேன். என் அப்பா, அரசு வேலையில் இருந்தார். அவருக்கு சேவை மனப்பான்மை அதிகம்.

அதனால் அவரின் சம்பாத்தியத்தில் அவரால் முடிந்த உதவியினை செய்து வந்தார். அவர் பலரை படிக்க வைத்திருக்கிறார். ஆதரவற்று இறந்தவர்களை அடக்கம் செய்திருக்கிறார். வழிதவறி வந்தவர்களுக்கு எங்க வீட்டில் அடைக்கலம் கொடுப்பார். பசி என்று வருபவர்களுக்கு சாப்பாடு கொடுப்பார். அவரிடம் உதவி என்று யார் வந்தாலும், மறுக்கவே மாட்டார். தன்னால் என்ன முடியுமோ அதை செய்திடுவார். அவரைப் பார்த்துதான் நான் வளர்ந்தேன்.

அதனால் சின்ன வயசில் இருந்தே எனக்கும் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. நானும் அப்பாவைப் போல் என்னால் முடிந்த உதவிகளை செய்து வந்தேன். அப்பா என்னிடம் அடிக்கடி சொல்வார், ‘யாராவது உதவின்னு வந்தா உன்னால முடிந்ததை செய்வது பெரிதல்ல. அதையும் தாண்டி நம்மால முடியாததையும் முயற்சி செய்து அவர்களுக்கு உதவணும்’னு என்பார். அவரின் அந்த வார்த்தைகள் என் மனதிற்குள் ஆழமாக பதிந்திருந்தது. அதனால் நானும் எனக்கு தெரிந்தவர்களுக்கு உதவி செய்து வந்தேன்.

படிப்பு, கல்யாணம், வேலை என்று என் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில்தான் அந்த சம்பவம் நிகழ்ந்தது. எங்க குடும்பத்தில் உள்ள ஒரு இளைஞன். எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பான். எல்லோருக்கும் அவனை ரொம்ப பிடிக்கும். ஒரு நாள் நான் அவனை மருத்துவமனையில் சந்தித்தேன். அப்போதுதான் தெரிந்தது அவன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறான் என்று. சிகிச்சைக்காக பல நாட்கள் அவர்கள் மருத்துவமனையில் தங்கி இருந்துள்ளனர். கையில் இருந்த சேமிப்பு அனைத்தும் மருத்துவ செலவிற்கு கரைந்து போனது. அடுத்து என்ன செய்வது என்று அவருடைய மனைவிக்கு தெரியவில்லை.

அப்படிப்பட்ட சூழலிலும் தன் கணவனை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அவரின் மனைவி போராடிக் கொண்டிருந்தார். அவர்கள் இருவரையும் பார்த்து என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. என் கையில் இருந்த பணத்தை உடனே அவர்கள் கையில் கொடுத்து செலவுக்காக வைத்துக் கொள்ளுமாறு கொடுத்துவிட்டேன். ஆனால் நான் கொடுத்த பணமும் மருத்துவ செலவுக்கே சரியாக இருந்ததே தவிர அவர்களின் செலவுக்கு அந்த பணம் போதவில்லை.

அதனால் எனக்கு தெரிந்தவர்கள் மூலம் அவர்களுக்கு பணஉதவியினை ஏற்பாடு செய்து கொடுத்தேன். ஆனால் சில மாதங்களில் அந்த தம்பி இறந்து போனார். அந்த இறப்பு தவிர்க்க முடியாததுதான். ஆனாலும் அவரின் கடைசி காலத்தில் என்னால் முடிந்த உதவியினை செய்து அந்த குடும்பத்திற்கு பக்கபலமாக இருந்தது எனக்கு ஒரு மன நிம்மதியை கொடுத்தாலும், அந்த இறப்பு என்னை பெரிய அளவில் பாதிப்பினை ஏற்படுத்தியது’’ என்றவர் அமைப்பின் செயல்பாடுகள் குறித்து விவரித்தார்.

‘‘சாதாரண ஜுரம், சளி, இருமல் நம் நெருக்கமானவர்களுக்கு வந்தாலே அது நம்மை பாதிக்கும். அப்படி இருக்கும் போது இது போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமில்லாமல் வீட்டில் உள்ள அனைவருமே பாதிக்கப்படுவார்கள். இந்த ேநாய் மட்டும் பணம் படைத்தவர்கள் இல்லாதவர்கள் என்ற வேறுபாடு பார்க்காமல் அனைவரையும் பாதிக்கிறது. உடன் இருப்பவர்களை காப்பாற்ற தங்கள் சக்திக்கு மீறி இன்றும் போராடி வருகிறார்கள்.

தங்களின் கையிருப்பு முழுதும் மருத்துவ செலவுகளுக்கே கரைக்கிறார்கள். அதன் பிறகும் நண்பர்கள், உறவினர்களிடம் பண உதவி பெற்றும் சமாளிக்க முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இந்த தருணத்தில் அவர்களுக்கு வாழ்க்கையின் மீதான நம்பிக்கை இழந்து வெறுப்பு ஏற்படுகிறது. அந்த சமயத்தில் நான் இருக்கிறேன் என்ற நம்பிக்கையை யாராவது தருவார்களா என்ற ஏக்கம் ஏற்படும். அந்த நம்பிக்கையைதான் நான் கொடுக்க வேண்டும் என நினைத்தேன்.

நான் அந்த தம்பிக்காக பணம் கேட்ட போது என்னை பற்றி தெரிந்த பலரும் எனக்கு உதவினார்கள். அதனால் என்னால் அவர்களுக்கு உதவ முடிந்தது. அதனால் இது போல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உறுதுணையாக இருக்க விரும்பினேன். குறிப்பாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவ வேண்டும் என நினைத்தேன். இதற்கு என் தம்பியும் எனக்கு உதவி செய்ய முன்வந்தார். தற்போது நானும் என் தம்பி விஜயகுமாரும் இணைந்து ஜோமன் ஃபவுண்டேஷன் என்ற பெயரில் தன்னார்வ குழு ஒன்றை தொடங்கி அதன் மூலம் இவர்களுக்கு உதவி செய்து வருகிறோம்.

புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை நேரடியாக சந்தித்து தேவையான உதவிகளை செய்து வருகிறோம். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் அந்த நோயின் தன்மையினால் இறந்துவிடுவார்கள். அதில் ஒரு சிலர் மட்டுமே அந்த பாதிப்பில் இருந்து தப்பிக்க வாய்ப்புள்ளது. அவ்வாறு இந்த நோயின் பாதிப்பால் இறந்த குடும்பங்கள் நிர்கதியாக இருக்கும் போது, அவர்கள் குடும்பத்தில் உள்ளவருக்கு ஒரு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கிறேன்.

அது அவர்கள் தங்களின் எதிர்காலத்தினை எந்தவித கஷ்டம் இல்லாமல் கடக்க உதவியாக இருக்கும். பெறும் பண உதவியினை மட்டும் செய்யாமல், அவர்கள் வாழ்வாதாரத்திற்கு ஏற்பாடு செய்வதால், அவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு தன்னம்பிக்கை ஏற்படும். இது போல் நாம் ஒருவரின் கஷ்ட காலத்தில் அவர்களுக்கு உறுதுணையாக நிற்கும் போது அது பெரிய அளவில் மனநிறைவை கொடுக்கிறது’’ என்கிறார் டெய்சி ராணி.

தொகுப்பு: மா.வினோத்குமார்

The post சிறு துளி… பெரு மன நிறைவு! appeared first on Dinakaran.

Tags : Peru ,Daisy Queen ,Dinakaran ,
× RELATED பெரு வெள்ளம், வயநாடு நிலச்சரிவு மீட்பு...