‘ஏர் ஷோ’ விமான சாகச நிகழ்ச்சி காரணமாக 3 விமான சேவை ரத்து, 3 விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பம்: 19 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன

சென்னை: ‘ஏர் ஷோ’ விமான சாகச நிகழ்ச்சி காரணமாக சென்னை விமானநிலையத்தில் 3 விமான சேவை ரத்து செய்யப்பட்டு, 3 விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பி அனுப்பப்பட்டன. மேலும் 19 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில், நேற்று காலை 11 மணியில் இருந்து மதியம் 1 மணி வரை விமானங்களின் வீர சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக, சென்னை விமான நிலையத்தில், கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல், வரும் 8ம் தேதி (நாளை) வரையில், விமான சேவைகள் 15 நிமிடங்களில் இருந்து 2 மணி நேரம் வரையில் நிறுத்தப்பட்டன. இதுகுறித்து முன்னதாகவே அறிவிப்புகள் வெளியானதால், பயணிகளுக்கு பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை. இந்தநிலையில் நேற்று சென்னை மெரினா கடற்கரையில் ‘ஏர் ஷோ’ முக்கிய நிகழ்ச்சி நடந்ததால், சென்னை விமான நிலையத்தில் அந்த நேரத்தில் விமானங்கள் பறப்பது முழுவதுமாக தடை செய்யப்பட்டது.

இதையடுத்து மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 231 பயணிகளுடன் நேற்று காலை 10.25 மணிக்கு வந்த மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னையில் தரையிறங்காமல் பெங்களூருவுக்கு திருப்பி அனுப்பப்பட்டது. அதேபோல் சிங்கப்பூரில் இருந்து 188 பயணிகளுடன் காலை 10.35 மணிக்கு வந்த ஏர் இந்தியா பயணிகள் விமானமும் பெங்களூருவுக்கும், டெல்லியில் இருந்து 167 பயணிகளுடன் மதியம் 12.30 மணிக்கு வந்த ஏர் இந்தியா பயணிகள் விமானம் கோவைக்கும் திருப்பி அனுப்பப்பட்டன. மேலும் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து நேற்று மதியம் 1.20 மணிக்கு பெங்களூரு செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம், 1.25 மணிக்கு கோவை செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம், 12.05 மணிக்கு மும்பையில் இருந்து சென்னை வர வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம் ஆகிய 3 விமானங்கள் சென்னை ஏர் ஷோ பாதுகாப்பு காரணமாக நேற்று ரத்து செய்யப்பட்டன. கொல்கத்தா, கவுகாத்தி, அந்தமான், ஜெய்ப்பூர், மைசூர், கோவை, டெல்லி, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட 10 வருகை விமானங்கள், விசாகப்பட்டினம், அந்தமான், கொல்கத்தா, திருச்சி, டெல்லி, அகமதாபாத், கோவா உள்ளிட்ட 9 புறப்பாடு விமானங்கள் என மொத்தம் 19 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

 

The post ‘ஏர் ஷோ’ விமான சாகச நிகழ்ச்சி காரணமாக 3 விமான சேவை ரத்து, 3 விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பம்: 19 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன appeared first on Dinakaran.

Related Stories: